யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாருக்கு ளுமைக்கான விருது
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியின் செயற்பாடு பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மறைந்துள்ள தமிழ் ஆளுமைகளுக்கான விருது
வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் மறைந்துள்ள தமிழ் ஆளுமைகளுக்கான விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் தமிழ் மக்களுக்காக அரும் பணியாற்றிய பல்துறை சார்ந்தவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியத்துறையின் ஆளுமைக்கான விருது
இவ்விழாவில் வைத்தியத்துறையின் ஆளுமைக்கான விருது யாழ்.போதனா வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் நந்தகுமாருக்கு வழங்குவதற்காக தற்போதைய யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மேடைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய, இரண்டு வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் செயல் குன்றிய நிலையில் தனது தளராத முயற்சியினால் வைத்தியத்துறையில் சாதித்த வைத்தியர் நந்தகுமார் ஆளுமைக்கான விருதுக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது மேடையில் விருது வழங்குவதற்காக காத்திருந்த யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி மேடையில் இருந்து கீழே இறங்கி வைத்தியர் நந்தகுமாரை தனது தோளில் மேடைக்கு சுமந்து சென்று பொன்னாடை போர்த்தி பொற்கிளி வழங்கி விருதையும் வழங்கி கௌரவித்துள்ளார்.