அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான கெவின் ஓ பிரையன் 2006-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அந்த அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த அவர் 3 டெஸ்டில் ஆடி ஒரு சதம் உள்பட 258 ரன்னும், 153 ஒருநாள் போட்டியில் 2 சதம் உள்பட 3,619 ரன்னும், 110 இருபது ஓவர் போட்டியில் ஒரு சதம் உள்பட 1,973 ரன்னும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 114 விக்கெட்டும், 20 ஓவர் போட்டியில் 58 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.
இந்த நிலையில், 38 வயதான கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், “எனது 16 ஆண்டு கால பயணத்துக்கு பிறகு இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் எனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்பினேன்.
ஆனால் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு நான் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அணி நிர்வாகம் வேறு திட்டத்தை வைத்து இருப்பதாக உணருகிறேன். நாட்டுக்காக களம் கண்ட ஒவ்வொரு வினாடியையும் உற்சாகமாக அனுபவித்து விளையாடினேன். எனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர இது சரியான தருணமாகும். எனக்கு சொந்தமான பயிற்சி அகாடமியை தொடர்ந்து மேம்படுத்த ஆசைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.