சங்கமம்

விடுதலைப் போரில் வீரத்தமிழகம்’ முப்பரிமாண ஒளி-ஒலி காட்சி – சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்குகிறது

சென்னை கலைவாணர் அரங்கத்தில் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றி சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘விடுதலைப் போரில் வீரத்தமிழகம்’ என்ற முப்பரிமாண ஒளி-ஒலி காட்சி திறந்து வைக்கப்படுகிறது.

இந்தியத் திருநாட்டின் விடுதலை

200 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள், ஆங்கிலேயரின் அடக்குமுறைகள், சுதந்திரத்தின் அருமை ஆகியவற்றை இளம் தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் நோக்கில் இந்த முப்பரிமாண ஒளி-ஒலி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குப் போராடிய அரும்பெரும் தலைவர்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் கொண்ட மாதிரிகளை வடிவமைத்து, அவர்களின் வீரதீரச் செயல்கள் மற்றும் தியாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்

தென்னகத்தில், குறிப்பாக வீரம் விளைந்த நம் தமிழகத்தில் தான் முதல் சுதந்திரப் போர் ஆரம்பமானது. வேலூர் கோட்டையில் நடைபெற்ற சிப்பாய்களின் புரட்சிதான் இந்தியாவில் நடந்த முதல் விடுதலைப் போராகக் கருதப்படுகிறது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்ற வீர மறவர்களின் போராட்டங்களும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார், பெரியார், ராஜாஜி, திருப்பூர் குமரன், காமராஜர், காயிதே மில்லத், ஜே.சி.குமரப்பா, பசும்பொன் முத்துராமலிங்கம், கடலூர் அஞ்சலை அம்மாள் போன்ற எண்ணற்ற தலைவர்களின் தியாகங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

முப்பரிமாண ஒளி-ஒலி காட்சி

இந்திய விடுதலைக்கு வித்திட்ட முத்தாய்ப்பான 3 போராட்டங்களான ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய நிகழ்வுகளும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த முப்பரிமாண ஒளி-ஒலி காட்சி இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை காட்சிப்படுத்தப்பட உள்ளது. இக்கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை, அனுமதி இலவசம். பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்த முப்பரிமாண ஒளி-ஒலி காட்சியினைப் பார்வையிட்டு பயன்பெறலாம். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.