‘ஹனிடிராப்’ முறையில் தொழில்அதிபரை மிரட்டி ரூ.14 லட்சம் பறித்த இளம் நடிகர் கைது
பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தொழில்அதிபர் வசித்து வருகிறார். இவர், 2 இளம்பெண்களுடன் ஆபாசமாக செல்போனில் உரையாடியதாக கூறி ரூ.14 லட்சத்தை மிரட்டி மர்மநபர் வசூல் செய்திருந்தார். அந்த நபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததால், இதுபற்றி அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் தொழில்அதிபர் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவந்தனர். இந்த நிலையில், தொழில்அதிபரிடம் ‘ஹனிடிராப்’ முறையில் பணம் கேட்டு மிரட்டியதாக கூறி கன்னட இளம் நடிகரான யுவராஜ், இதற்கு உடந்தையாக இருந்ததாக மற்றொரு இளம்பெண்ணை அல்சூர்கேட் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் தான் யுவராஜ். இவர், மிஸ்டர் பீமாராவ் என்ற கன்னட திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக நடித்து வருகிறார். இதுபற்றி அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தொழில்அதிபரிடம் ஏராளமான பணம் இருப்பதை அறிந்த யுவராஜ், அதனை பறிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சமூக வலைதளம் மூலமாக 2 இளம்பெண்கள் பெயரில் தொழில்அதிபருடன், செல்போனில் யுவராஜ் உரையாடி வந்துள்ளார். குறிப்பாக தொழில்அதிபருடன், அவர் ஆபாசமாக உரையாடல் செய்திருக்கிறார்.
இதற்கு தொழில்அதிபரும் பதிலளித்து இருந்தார். நடிகர் அதிரடி கைது பின்னர் தொழில்அதிபர் வீட்டுக்கு சென்று, தான் குற்றப்பிரிவு போலீஸ்காரர் என்று யுவராஜ் கூறி இருக்கிறார். மேலும் இளம்பெண்களுடன் ஆபாசமாக உரையாடிய ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க பணம் கொடுக்கும்படி கேட்டு யுவராஜ் மிரட்டி உள்ளார். அதன்படி, குறிப்பிட்ட இடைவெளியில் ரூ.14 லட்சத்தை தொழில்அதிபர் கொடுத்திருந்தார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததால், தொழில்அதிபர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் யுவராஜ் மற்றும் இளம்பெண் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதான 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.