நடிகர் வடிவேலு சினிமாபட பாணியில் ஓட்டிப்பார்ப்பதாக கூறி ஜீப்பை திருடிச்சென்ற ஆசாமி
நடிகர் வடிவேலு நடித்த ‘ஜனனம்’ என்ற திரைப்படத்தில் வரும் காட்சியில் அவரிடம், நடிகர்கள் பெஞ்சமின் மற்றும் முத்துக்காளை இருவரும் “பழைய மொபட்டை விலைக்கு வாங்க உள்ளோம். அதனை எவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்கலாம் என பார்த்துச்சொல்லுங்கள்” என்பார்கள். அதற்கு வடிவேலு, “அந்த மொபட்டை பரிசோதித்த பிறகு, ஒரு தடவை மொபட்டை ஓட்டிப்பார்த்துவிட்டு பணத்தை கொடுக்கும்படி கூறுவார்.
அதற்கு அவர்கள் வேண்டாம் பணத்தை கொடுத்து விடுவதாக கூறியும் வலுக்கட்டாயமாக இருவரையும் மொபட்டில் ஏற்றி அனுப்பி வைப்பார். இருவரும் அப்படியே மொபட்டுடன் தப்பிச்சென்று விடுவதுபோல் அந்த காமெடி காட்சி அமைந்து இருக்கும். இந்த சினிமா காமெடி காட்சியைப்போல் சென்னை திருமங்கலத்தில் மர்மஆசாமி ஒருவர் ஜீப்பை திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் விவரம் வருமாறு:- சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன்(வயது 51). இவர், பாடி மேம்பாலம் அருகே பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது அலுவலகத்துக்கு வந்த மர்மஆசாமி ஒருவர், தனது பெயர் முருகன் என்றும், வக்கீலாக இருப்பதாகவும் கூறி அறிமுகம் ஆனார். பின்னர் தனக்கு கார் வேண்டும் எனக்கூறி அங்கிருந்த ஒரு காரை பார்த்துவிட்டு, அதனை சிறிது தூரம் ஓட்டி பார்க்க வேண்டும் என்றார். அதற்கு சம்மதம் தெரிவித்த சவுந்திரபாண்டியன், அவருடன் கார் நிறுவன ஊழியர் தனிஷ் என்பவரை உடன் அனுப்பி வைத்தார்.
சிறிதுதூரம் ஓட்டிபார்த்துவிட்டு திரும்பி வந்த முருகன், புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஜீப்பை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்றார். மீண்டும் தனிஷ் உடன் ஜீப்பை ஓட்டிச்சென்ற முருகன், ஒரு இடத்தில் ஜீப்பை நிறுத்தி, தனிஷை கீழே இறங்கும்படி கூறினார். பின்னர் தனிஷின் கவனத்தை திசை திருப்பிவிட்டு ஜீப்புடன் தப்பிச்சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தனிஷ் அளித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீப்பை திருடிச்சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.