3.5 செ.மீ நீளத்தில் நெற்றிப்பட்டயம்..ஆதிச்ச நல்லூரில் 120 வருடத்திற்கு பின் கிடைத்த தங்கம்
அகழாய்வு பணிகள் மேற்கொள்வதின் மூலமாக நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, எழுத்தறிவு மற்றும் கலாச்சாரங்கள் பலவற்றை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. அவ்வகையில் தமிழகத்தில் பல இடங்களில் அகவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஆதிச்சநல்லுரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகவாழ்வு பணியில் இதுவரை இரும்பு மற்றும் வெண்கலங்கள் கிடைத்து வந்த நிலையில் இன்று தங்கத்தால் ஆன நெற்றி பட்டையம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் இருக்கும் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் ஆதிச்சநல்லூரில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கு நடைபெறும் அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சுமார் 3 மீட்டர் ஆழத்தில் தோண்டிய போது அங்கே நீளமான ஈட்டி போன்ற ஆயுதம், இடுக்கி போன்ற இரும்பு பொருள் ஆகியவை கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இரும்பு பொருள் மீது படிந்த நெல்லின் படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1902 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் சி சைட் என அழைக்கப்படும் இடத்தில் அலெக்சாண்டர் ரியா கடந்த 117 வருடங்களுக்கு முன்பு அகழாய்வு செய்தபோது 30 செண்டி மீட்டர் ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் நடந்த 4 கட்ட அகழாய்வு பணியில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்றைய தினம் சி சைட் என அழைக்கப்படும் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் இருந்து தங்கத்தால் ஆன 3.5 செண்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன அலங்கார ஜாடி, ஜாடியின் மேல் கொக்கு, வாத்து பறவைகள் நீர் அருந்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் 2 வெண்கலத்தால் ஆன வடிக்கட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே குழியில் 20 இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1 சூலம், தொங்கவிட்டான் உள்பட 20 பொருட்கள் அடங்கும். இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.