சங்கமம்

இஸ்லாமியப் பார்வை: உதவிகள் பலவிதம்…

காலம் குறிப்பிட்டு, தவணை முடிந்தவுடன் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் பொருளுதவி செய்வது கடன். பிறர் உபயோகத்திற்காக ஒருவர் தமது பொருளைத் தற்காலிகமாகக் கொடுத்து, பிரதிபலன் எதிர்பாராமல் பொருளுதவி செய்து, பிறகு அதைத் திரும்பப் பெறுவதுதான் இரவல். கடனுக்கும், இரவலுக்கும் ஒருசில வேறுபாடு உண்டு. ஒருவர் பிறருக்கு கடன் கொடுத்தால், கடன் வாங்கியவர் கடன் கொடுத்தவரிடம் அவர் தந்த அதே பொருளையே திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை.

அதுபோன்ற வேறு பொருளை திருப்பிச் செலுத்தினால் போதும். ஆனால், இரவல் அவ்வாறல்ல. எந்தப் பொருளை இரவலாக வாங்கினோமோ, அதை பயன்படுத்திவிட்டு அதை அவ்வாறே சேதாரமின்றி திருப்பிச் செலுத்திட வேண்டும். இந்த அடிப்படையில் ஒருமுறை மட்டுமே உபயோகிக்கக்கூடிய அல்லது உபயோகிக்கவே முடியாத அல்லது உபயோகித்தபிறகு திருப்பிச் செலுத்த முடியாத எந்தப் பொருளையும் இரவல் வழங்கவோ, வாங்கவோ முடியாது. உதாரணமாக, உணவு மற்றும் உணவு பண்டங்கள், காய்கனிகள், மலர்கள், பழங்கள், நீர் மற்றும் அது போன்றவைகளை இரவலாக வழங்கவோ, வாங்கவோ முடியாது. இலவசமாக மட்டுமே வழங்கமுடியும்.

இரவல் பொருட்கள் யாதெனில் ஆடை, அணிகலன்கள், நகைகள், வாகனங்கள், கால்நடைகள், பாத்திரங்கள், புத்தகங்கள் இன்னும் இதுபோன்ற பொருட்களாகும். ‘நாற்பது நல்ல காரியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை, அதன் நன்மையை நாடியும், அதற்கென வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் கடைப்பிடித்து நடப்பாராயின், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்தியே தீருவான். அவற்றில் மிக உயர்ந்தது பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’.

(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி) சாப்பாட்டுக்கு வழியில்லாத வறியவர்களுக்கு கால்நடைகளை இரவலாக வழங்கலாம். அவற்றிலிருந்து அவர்கள் பால் கறந்து தமது பசியை போக்கிக் கொள்ள முடியும். இத்தகைய நற்செயலின் பிரதிபலனாக எல்லாம் வல்ல அல்லாஹ் இரவல் கொடுத்தவருக்கு கடல் கடந்து கூட வாழ்வாதாரம் வழங்குவான். இரவல் கேட்பவர், தற்சமயம் தம்மிடம் இல்லாத ஒன்றை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள ஒருவரின் உதவியை நாடுவார். இரவல் கேட்பவரிடம் இல்லாத ஒன்றை, இருப்பு வைத்துக் கொண்டுள்ள இரவல் வழங்குபவர் அவருக்கு முதலுதவியாக பொருளுதவி செய்து உதவிட வேண்டும்.

“மதீனாவில் போர் பீதி ஏற்பட்டதும், நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடமிருந்து ‘மன்தூப்’ என்று அழைக்கப்பட்ட குதிரை ஒன்றை இரவல் வாங்கி, அதில் சவாரி செய்த பிறகு பீதிக்கான எதையும் நான் பார்க்கவில்லை என்று கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி) இரவல் வழங்குவது இரக்கமான செயல். சொர்க்கத்தை பெற்றுத்தரும் சிறந்த செயல். நல்லோர்களின் நற்செயல். வாங்கப்பட்ட இரவலை சேதாரமின்றி, தாமதமின்றி, மோசடியின்றி ஒப்படைப்பது நம்பிக்கையான செயலாகும். ‘இரவல் வாங்கப்பட்டதை திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி), நூல்: அபூதாவூத்)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.