கோவையில் சிவன் கோவில் இடிக்கப்பட்டதா? வைரல் செய்தியின் உண்மை நிலை என்ன?
கோவையில் சிவன் கோவில் ஒன்று இடிக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாகப் பரவி வருகிறது. அதன் உண்மை நிலை என்ன என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு செய்தது.
என்ன நடந்தது?
கோவை மாநகர் அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் பகுதியிலிருந்து வீரியம்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது சுயம்பு தம்பிரான் சுவாமி திருக்கோவில்.
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அதிகாலை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் கோவிலை இடிக்கப்போவதாக செய்திகள் பரவத் தொடங்கின. மாநகராட்சி அதிகாரிகள் கோவில் சுற்றுச் சுவரின் ஒரு பகுதியை மட்டும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் தகர்த்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் திரண்டனர். அப்போது நிலவிய பதற்றத்தை தணிக்க காவல்துறையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் கோவில் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் சிறிது கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதாலும் அகற்றும் நடவடிக்கை மாநகராட்சியால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கோவில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ள நிலையில், கோவில் இடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தவறாக செய்தி பரவி வருகிறது.
தற்போது மாநகராட்சியால் இடிக்கப்பட்ட சுற்றுச் சுவரின் மிச்சங்கள் அங்கேயே உள்ளன. காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலில் பக்தர்கள் வழிபடுவது உள்ளிட்ட தினசரி நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவில் இடிப்பது தொடர்பான விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை அறிய சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் பேசினோம்.
கோவிலுக்கு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் ஸ்ரீதர் என்பவர் தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கோவில் பாதுகாப்பு குழுவில் உள்ள கார்த்திக் பிபிசிதமிழிடம் பேசுகையில், “இந்தப் பகுதி கடந்த காலங்களில் விவசாய பூமியாக இருந்தவை. இந்தக் கோவில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே தான் சுயம்புவாக இருந்து வருகிறது. விவசாயிகள் இதனைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் விவசாயம் பொய்த்துப் போனதால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலங்கள் விற்கப்பட்டன. அதன் பின்னர் இங்கு ப்ளாட் போடப்பட்டு பல்வேறு குடியிருப்புகள் உருவாகின ஆனாலும் இந்தக் கோவில் அப்படியே தான் இருந்து வந்துள்ளது.
இதற்கு அருகே உள்ள நிலத்தில் ஸ்ரீதர் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளார். ஆனால் வாகன நிறுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் கட்டிவிட்டார். தற்போது கோவில் நிலத்தைப் பெற, சாலையில் ஆக்கிரமிப்பு இருப்பதாகக் கூறி வழக்குத் தொடர்ந்து கோவிலுக்கு எதிராக தீர்ப்பு வாங்கியுள்ளார். கோவில் தரப்பில் வழக்கு விசாரணையில் ஒரு சில வாய்தாக்களில் ஆஜராகததால் தீர்ப்பு ஒரு தரப்புக்கு சாதகமாக வந்துவிட்டது,” என்றார்.
கோவில் தரப்பில் மனு
கோவில் பொருளாளர் மாரிமுத்து பிபிசி தமிழிடம் பேசுகையில், “எங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தொடக்கத்தில் வழக்கை சரியாக கையாளவில்லை. ஒரு சில வாய்தாக்களில் முறையாக அவர் ஆஜராகவில்லை. அதனால் தான் தீர்ப்பு எங்களுக்கு எதிராக வந்துள்ளது. தற்போது வழக்கறிஞரை மாற்றியுள்ளோம். நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளோம். நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை கோவிலை இடிக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். கடந்த 06.09.2021 அன்று மாநகராட்சி தரப்பிலிருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி எந்த விதமான முன்னறிவுப்புமின்றி கோயிலை அகற்றுவதற்கு வந்துவிட்டார்கள். இந்த வழக்கை தொடர்ந்தவர் அவருடைய அடுக்குமாடி குடியிருப்பை விற்பதற்கு கோவில் இருப்பது இடையூறாக இருப்பதால் அதனை ஆக்கிரமிப்பு எனக் கூறி அகற்ற வேண்டும் என உத்தரவு பெற்றுள்ளார்,” என்றார்.
வழக்கு கோயிலை எதிர்த்து மட்டும் அல்ல
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை வழக்கு தொடர்ந்த ஸ்ரீதர் முற்றிலுமாக மறுக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீதர், “கோயிலுக்கு எதிராக மட்டும் நான் வழக்கு தொடரவில்லை. கோல்டுவின்ஸ்-ல் இருந்து வீரியம்பாளையம் செல்வதற்கு 50 அடி அகல சாலை இருந்தது. ஆனால் இந்த சாலை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று தான் இரண்டு வருடங்களாக அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்தேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்னதாகவே மாநகராட்சி தரப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. அதன் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
உயர்நீதிமன்றம் ஜூன் 24, 2022 அன்று தீர்ப்பு வழங்கியது. நீதிமன்ற தீர்ப்பும் கோயிலை அகற்ற வேண்டும் என்று கூறவில்லை, அந்த சாலையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தான் கூறியுள்ளது. கோயிலும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் தான் அதை எடுக்க வேண்டிய நிலை வருகிறது. தனியார் ஆக்கிரமிப்புகளை காப்பாற்றுவதற்காக கோயிலை காரணம் காட்டி சர்ச்சையாக்கி வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும் மற்ற தனியார் ஆக்கிரமிப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் ஏன் கோயிலை மட்டும் இடிக்க வந்தார்கள் எனப் புரியவில்லை.” என்று கூறினார்.
ஆனால் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு என்பதை அதன் நிர்வாகத்தினர் மறுக்கின்றனர். கோவில் பொருளாளர் மாரிமுத்து பிபிசி தமிழிடம் பேசுகையில், “நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கோயில் இதே பகுதியில் தான் இருந்து வருகிறது. பொதுமக்கள் இங்கு தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். தற்போது வந்து ஆக்கிரமிப்பு எனக் கூறி இடிப்பது சரியாக இல்லை. சாலை விரிவாகம் செய்ய வேண்டுமென்றால் கோவிலுக்கு எதிர்ப்புரம் மாற்று நிலம் வழங்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.
மாநகராட்சி சொல்வது என்ன?
கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துராமலிங்கம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “அந்த சாலையில் சில தனியார் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. ஆனால் கோவில் தான் பெரிய ஆக்கிரமிப்பாக உள்ளது. வழக்கு தொடர்ந்தவரும் கோவில் ஆக்கிரமிப்பு புகைப்படங்களை தான் ஆதாரமாக நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு என்பதால் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதை செயல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. ஆக்கிரமிப்பு எனக் கண்டறியப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை சமர்பிக்க வேண்டியுள்ளது. அன்று பலத்த எதிர்ப்பு எழுந்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைத்தோம். மாற்று நிலம் வழங்குவதாக கோவில் நிர்வாகம் தெரிவிப்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
முந்தைய நீதிமன்ற தீர்ப்புக்கு எந்த தடை உத்தரவும் வழங்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்த தரப்பினர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 8-ம் தேதி) வரை எங்களிடம் அவகாசம் கேட்டுள்ளனர். அதற்குள் எந்த மாற்றமும் இல்லையென்றால் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றார்.