சென்னிமலை முருகன் கோவிலில் பாலாபிஷேக விழா; திரளான பக்தர்கள் திரண்டனர்
சென்னிமலை கைத்தறி மற்றும் சாய தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 55-வது ஆண்டு பாலாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் 1008 பால் குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து பக்தர்கள் கைலாசநாதர் கோவிலில் இருந்து மேள, தாளங்கள் முழங்க பால் குடங்கள் மற்றும் பல்வேறு காவடிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். 4 ராஜ வீதிகளிலும் வலம் வந்து மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலுக்கு சென்றனர். அங்கு இடும்பன், கடம்பன் மற்றும் ஸ்கந்தர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து புறப்பட்டு படிக்கட்டுகள் வழியாக மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு காலை 11 மணிக்கு மேல் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் உற்சவமூர்த்தி பிரகார உலா காட்சி ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை சென்னிமலை கைத்தறி மற்றும் சாய தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.