பாகிஸ்தானில் 1,200 ஆண்டு பழமையான இந்து கோவில் மீண்டும் திறப்பு
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி பஜார் அருகே வால்மீகி கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ குடும்பம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது.
கோவில் கட்டப்பட்டிருக்கும் நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில், இதை எதிர்த்து போராடி வந்த பாகிஸ்தானின் சிறுபான்மை வழிபாட்டு இடங்களை மேற்பார்வையிட்டு வரும் அமைப்பு ஒன்று, கடந்த மாதம் இந்த கோவிலை மீட்டது. இதைத்தொடர்ந்து இந்த கோவில் நேற்று மீண்டும் இந்துக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து திறப்பு விழாவை கொண்டாடினர்.1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் மீண்டும் திறக்கப்பட்டிருப்பது லாகூர் வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.