செஸ் ஒலிம்பியாட்: 7-வது சுற்று ஆட்டம் இன்று- பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணி, அஜர்பைஜானுடன் மோதல்
186 நாடுகள் இடையிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. ஓபன் (வீராங்கனைகளும் ஆடலாம்), பெண்கள் ஆகிய இரு பிரிவுகளில் நடக்கும் இந்த செஸ் திருவிழா 11 சுற்றுகளை கொண்டது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை குவிக்கும் அணி மகுடம் சூடும். இதுவரை 6 சுற்று நிறைவடைந்துள்ளது. போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். பெரும்பாலான வீரர், வீராங்கனைகள் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டு பரவசத்தில் ஆழ்ந்தனர். ஜாலியாக நேரத்தை செலவிட்ட அவர்கள் மனஅழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சியுடன் அடுத்த சுற்றுக்கு தயாராகியுள்ளனர். 7-வது சுற்று போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. பெண்கள் பிரிவில் புள்ளிபட்டியலில் இந்தியா1 அணி 12 புள்ளிகளுடன் தனிஅணியாக முதலிடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய 7-வது சுற்றில் 11 புள்ளிகளுடன் உள்ள அஜர்பைஜானை எதிர்கொள்கிறது.
இந்தியா 1 அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகிய முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். முதல் 6 சுற்றுகளிலும் வீறுநடை போட்ட இவர்கள் 7-வது வெற்றிக்கு குறி வைத்துள்ளனர். கோனேரு ஹம்பி கூறுகையில், ‘தற்போதைய நிலைமையில் நாங்கள் பதக்கம் குறித்து சிந்திக்கவில்லை. இன்னும் நாங்கள் உக்ரைன் போன்ற கடினமான அணிகளை எல்லாம் சந்திக்க வேண்டி உள்ளது. எங்களது அணியின் உத்வேகம் சிறப்பாக இருக்கிறது. அணிக்கு எப்போதெல்லாம் ஒரு வெற்றி தேவைப்படுமோ? அந்த சமயத்தில் அணியில் உள்ள யாராவது ஒரு வீராங்கனை கைகொடுக்கிறார்கள்.’ என்றார். வந்திகா, பத்மினி, சவுமியா உள்ளிட்டோரை கொண்ட இந்தியா 2 அணி, கிரீசை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் தலா 9 புள்ளிகளுடன் உள்ளன. நந்திதா, வர்ஷினி, ஈஷா கரவாடே, பிரத்யுஷா, விஷ்வா வஸ்னவாலா ஆகியோர் அடங்கிய இந்தியா 3-வது அணி (9 புள்ளி), சுவிட்சர்லாந்துக்கு எதிராக (9 புள்ளி) களம் காணுகிறது.
ஓபன் பிரிவில் ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகாசி, நாராயணன், சசிகிரண் ஆகியோரை கொண்ட இந்தியா 1 அணி, சூர்யசேகர் கங்குலி, சேதுராமன், அபிஜீத் குப்தா, முரளி கார்த்திகேயன், அபிமன்யு புரானிக் ஆகியோர் அங்கம் வகிக்கும் இந்தியா 3-வது அணியுடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் உள்ளன. இந்த சீசனில் இந்திய வீரர்கள் முதல்முறையாக நேருக்கு நேர் மோத இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.குகேஷ், சரின் நிஹல், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானி ரானக் ஆகிய நட்சத்திர வீரர்களுடன் இந்தியா 2-வது அணி (10 புள்ளி), கியூபாவுடன் (10 புள்ளி) மல்லுகட்டுகிறது. முதல் 5 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்றிருந்த இந்தியா 2-வது அணி 6-வது சுற்றில் அர்மேனியாவிடம் 1½-2½ என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது. கியூபாவை வீழ்த்தினால் தான் மீண்டும் பட்டம் வெல்வதற்கான வாய்ப்புக்கு நகர முடியும். அதனால் இந்த ஆட்டம் இந்தியா2 அணிக்கு மிகவும் முக்கியமானது. சென்னையைச் சேர்ந்த 16 வயதான டி.குகேஷ் தனிநபரில் 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற முதல் வீரராக வலம் வருகிறார். காய்களை சாதுர்யமாக நகர்த்தி எதிராளியை திகைக்க வைக்கும் டி.குகேஷின் ஆதிக்கம் இன்றைய ஆட்டத்திலும் தொடருமா என்ற ஆவலும் தொற்றிக் கொண்டுள்ளது. ஓபன் பிரிவில் முதலிடத்தில் உள்ள அர்மேனியா (12 புள்ளி), அடுத்த நிலையில் உள்ள பலம் வாய்ந்த அமெரிக்காவுடன் (11 புள்ளி) மோதுகிறது. இன்றைய நாளில் கவனத்தை ஈர்க்கும் ஆட்டங்களில் ஒன்றாக இதுவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.