பழமையான 181 கோவில்களில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் – மாநில வல்லுநர் குழு ஒப்புதல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 35-வது வல்லுநர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இணை கமிஷனர் (திருப்பணி) பொன்.
ஜெயராமன் தலைமை தாங்கினார். சேலம் மாவட்டம், சிவதாரம் மாரியம்மன் கோவில், ஆத்தூர் ஏகாம்பரேசுவரர் கோவில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி. முட்டத்துராயப் பெருமாள் கோவில், கரூர் மாவட்டம், புகளூர் கரியகாளியம்மன் கோவில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம், மகாமாரியம்மன் கோவில், மயிலாடுதுறை மாவட்டம், கள்ளிக்காடு அகத்தீசுவரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், அய்யனார் கோவில், நெல்லை மாவட்டம், நாராயணம்மாள்புரம், கற்பக விநாயகர் கோவில், கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், சாஸ்தா கோவில் உட்பட 181-க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக முன்னர் நடக்கும் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கோவில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்து பராமரிக்கும் பொருட்டு புனரமைப்பு பணிக்கான மதிப்பீட்டினை பரிசீலித்து அதன்பின்பு திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், தலைமை பொறியாளர் கே.தட்சிணாமூர்த்தி, ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் கோவிந்தராஜ பட்டர், ஆனந்த சயன பட்டாச்சாரியர், கே.சந்திரசேகரபட்டர், தலைமை பொறியாளர் (ஓய்வு) முதுநிலை ஆலோசகர் கே.முத்துசாமி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர்கள் சீ.வசந்தி, சத்தியமூர்த்தி, ராமமூர்த்தி, கல்வெட்டு படிமங்கள் நிபுணர்கள் (ம) நுண்கலை நிபுணர் இரா.சிவானந்தம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.