கல்லீரல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்தோர் கவனத்திற்கு…!
கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் கேன்சர் அல்லது பிற கல்லீரல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. அறுவைசிகிச்சைக்கு பிறகு மற்ற உடல்நலக்குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை என்பது மிகவும் கடினமான ஒரு செயல்முறையாகும். முதலில் ஒரு டோனரை கண்டுபிடிக்க வேண்டும். அவரிடமிருந்து பெறப்படும் உறுப்பை சோதித்தல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை செய்யவேண்டும். பிறகுதான் அறுவைசிகிச்சையை முன்னெடுக்க முடியும். அறுவைசிகிச்சைக்கு பிறகு பாதுகாப்பு தேவையில்லை என்று நினைக்கக்கூடாது. அறுவைசிகிச்சைக்கு பிறகான பராமரிப்பும் பாதுகாப்பும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் வரைகூட நீளலாம்.
பலமணி நேரங்கள் ஆகும் இந்த அறுவைசிகிச்சை அத்துடன் முடிவதில்லை. அறுவைசிகிச்சைக்கு பிறகு முறையான பராமரிப்பு இல்லாவிட்டால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். சில நேரங்களில் மரணம் கூட நிகழலாம்.
டயட் – கல்லீரல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்போகிற நபர்கள் கட்டாயம் முறையான டயட் முறையை பின்பற்ற வேண்டும். எண்ணெய், காரம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. எளிதில் செரிமானம் ஆகாத பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிகப்படியான தண்ணீர் குடிக்கவேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மருந்துகள் – அறுவைசிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த மருந்தையும் தவிர்க்கக்கூடாது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு கொடுக்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு போன்றவற்றை கட்டுக்குள் வைக்கவே கொடுக்கப்படும். இவற்றை தவிர்ப்பது உடல்நலத்தை பாதிக்கும்.
உடற்பயிற்சி – உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளி குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்வது அவசியம். என்னென்ன மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசித்து அதை பின்பற்ற வேண்டும். பொதுவாக குறைந்த அழுத்தம் கொடுக்கக்கூடிய பயிற்சிகளையே மருத்துவர் பரிந்துரைப்பர்.