கட்டுரைகள்
யார் எழுத்தாளன்?…. ( கிறுக்கல் நான்கு ) …. சங்கர சுப்பிரமணியன்.
திரைப்படத்தில் ஒரு நடிகரைப் போன்று இன்னொரு நடிகர் நடிக்கிறாரா? ஒவ்வோரு நடிகரும் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக்கொண்டு அந்த வழியைப் பின்பற்றி நடிப்பார்கள். இப்படியன்றி ஒருவரை பின்பற்றி அவர்போல் இன்னொருவர் நடிக்க முயன்றால் கொஞ்சகாலத்துக்கு காலத்தை ஓட்டலாம். அவ்வளவே அதன் பின் மறையவேண்டியதுதான்.
அல்லது மறையாமல் தாக்குப் பிடித்தாலும் யாரைப் பின்பற்றி அவரது பாணியில் நடிக்கிறார்களோ நிச்சயமாக அவரைவிட உச்சத்தை தொடமுடியாது. எம். ஜி. ஆரைப் பின்பற்றிய மு. க. முத்து என்ன ஆனார்? கமலைப்போல் நடித்த மோகனும் ரஜனியைப் பின பற்றிய விஜயகாந்தும் கமலையோ ரஜனியையோ பின் தள்ளி முன்னேறி விடவில்லையே. இப்படிச் செய்யாமல் வேறொருவரின் உதவியைப் பெற்று அதை நாம் எழுதியதாக வெளியிடுவது அடுத்த மாணவனைப் பார்த்து எழுதுவதற்கு ஒப்பாகும். ஒரு மாணவனைப் பார்த்து தேர்வுஎழுதும் இன்னொரு மாணவனை எப்படி ஆசிரியர் வகுப்பில் ஏற்கமாட்டாரோ அதுபோன்றுதான் இதுவும். இதை ஆரம்ப எழுத்தாளர்கள் அவசியம் உணரவேண்டும். இதைப்போலவே ஆசிரியர் மற்ற மாணவர்களைப் பார்த்து எழுதுவதை ஏற்கமாட்டார்களோ அவ்வழி நின்று புதிதாக எழதுபவர்களுக்கு மற்றவர்கள் துணைபோகக்கூடாது. ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருந்தாலும் தம்முடைய சொந்த உழைப்பை அறுவடை செய்யும்போது ஒரு எண்ணம் ஏற்படும். இது என் நிலம், இதில் விதை நான் போட்டது இது மரமாகி கனி தருவது முற்றிலும் என் உழைப்பால் என்று எண்ணும் போது ஏற்படும் பெருமிதம்தான் ஒரு எழுத்தாளனின் முதுகெலும்பு. சிறிய அளவில் பெட்டிக்கடை வைத்து நடத்துபவன் சிறிய வியாபாரி. பெரிய அளவில் பல்பொருள் அங்காடி என பல அடுக்கு மாளிகையில் வியாபாரி பெரியவியாபாரி. இருப்பினும் இருவரும் வியாபாரிகளே. ஆற்றங்கரை பிள்ளையாருக்கு பூசை செய்பவரும் பூசாரிதான். திருவரங்கப் பெருமாளுக்கு பூசை செய்பவரும் பூசாரிதான். இத்துனூண்டு விபூதியும் பிரசாதம்தான் அம்மாம் பெரிய லட்டும் பிரசாதம்தான். அதைப்போல் எழுத்தாளரில் சிறிய எழுத்தாளர் பெரிய எழுத்தாளர் என்று ஒன்றுமே இல்லை. சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சமாக எழுதுபவர்களை சிறு எழுத்தாளர்கள் நிறைய எழுதுபவர்கள் பெரிய எழுத்தாளர்கள் என்று. எழுத்து என்பது படைக்கும் எண்ணிக்கையில் அல்ல. படைப்பின் தன்மையில் உள்ளது. உன் நண்பன் யார் எனச்சொல் உன்னை யாரென்று சொல்லிவிடுகிறேன் என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உள்ளது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற தமிழ்ப் பழமொழி கிட்டத்தட்ட அதே பொருளைத் தரும். இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ எழுத்தாளனுக்கு பொருந்தும். ஒரு எழுத்தாளனுடைய எழுத்து அவனை யாரெனக் காட்டிவிடும். ஒரு கண்ணியமான எழுத்தாளனின் எழுத்தில் கண்ணியம் தென்படும். ஒரு பண்பற்றவனின் எழுத்தில் பண்பற்ற தன்மையே மிகுந்து காணப்படும். ஆனால் எழுத்தாளர்களிடமும் கலப்படம் உண்டு. சில பண்பற்ற எழுத்தாளர்கூட பண்பைப் பறைசாற்றுவார்கள். சிலபண்பான எழுத்தாளர்கள்கூட உணர்ச்சியைக் கிளறும்படி எழுதுவார்கள். இதை விதிவிலக்காக ஏற்றுக் கொள்ளலாம். அதற்காகத்தான் வள்ளுவன் குணம் நாடிக் குற்றம்நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்று நமக்கு வழிகாட்டியுள்ளான். அறம் பொருள் சொன்ன வள்ளுவர் காமத்தையும் சொல்லியிருக்கிறார். ஆண்டவனைப் பற்றி எழுதியவர் கம்பர் ஆபாசத்தை கொட்டியும் இருக்கிறார். சாண்டில்யன் கடல்புறாவில் கன்னியின் வனப்பைக்கூறி வாய் பிளக்கவைத்தவர் கதையோட்டத்தால் வாய்மூடவும் வைத்துள்ளார். சிலர் எழுத்துக்களில் சாக்கடை பன்றி போன்றவைகள் எல்லாம் சகட்டுமேனிக்கு வருவதுபோல் சிலர் எழுத்துக்களில் சந்தணமும் ஜவ்வாதும் அடிக்கடிவரும். இடத்திற்கு தேவையைன்றால் வரலாம் ஆனால் எடுத்த இடத்திலெல்லாம் வரக்கூடாது. உணவில் உப்பைக் கலப்பது போல இது இருக்க வேண்டும். இதையெல்லால் சரியாக கலப்பவன்தான் சரியாக எழுதுபவன். எப்படி சிறந்த சமையல்காரன் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதை சரியாக உணர்ந்து உணவில் உப்பைச் சேர்க்கிறானோ அதுபோலத்தான் இதுவும். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதைப்போல் இவர்கள் உப்பிட்டதை வைத்து உள்ளளவும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். எதனால் சில எழுத்தாளர்களின் நூலை நாடுகிறார்கள் எதனால் சில எழுத்தாளர்களின் நூலைக்கண்டு ஓடுகிறார்கள் என்பதெல்லாம் இந்த சூட்சுமத்தில் அடங்கியுள்ளது. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் எல்லா எழுத்தாளர்களும் நூல் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் எல்லா நூல்களும் விற்றுக்கொண்டிருக்கின்றன என்று. கள நிலவரம் அப்படியல்ல. சில எழுத்தாளர்கள் பிள்ளையார் கோவிலில் சுண்டல் கொடுப்பதுபோல் நூல் வெளியிட்டுக் கொண்டேயிருப்பார்கள். சில எழுத்தாளர்கள் நிறைய எழுதினாலும் குத்தொக்க சீர்த்தவிடத்து என்ற கொக்கைப்போல எந்த நூலை வெளியிட வேண்டுமோ அதைமட்டுமே வெளியிட்டு சாதனை படைப்பார்கள். நம் வாழ்நாளிலே அத்தகைய எழுத்தாளர்களைப் பார்த்திருப்போம். திரைப்படப் பாடல்கள் எண்ணற்ற எண்ணிக்கையில் வந்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனை பாடல்கள் வந்துள்ளன. அந்த பாடல்களில் எத்தனை பாடல்கள் நம் நினைவில் நிற்கின்றன. இதேபோல கடந்த பத்து ஆண்டுகளில் வெளிவந்த நூல்களில் எத்தனை நூல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதொன்றும் கம்ப சூத்திரமில்லை. அப்படி நினைவில் நிற்காத படைப்புக்கள் காமாட்சி மாமியும் கஸ்தூரி மாமியும் சமைப்பதுபோல் அதவும் ஒரு சமையல் மட்டுமே. எல்லோருமே தேர்வு எழுதுகிறார்கள். வெற்றியடைகிறார்கள். ஆண்டுதோறும் தேர்வுகள் நடக்கின்றன. எத்தனை மாணவர்கள் தரவரிசையில் அறியப்படுகின்றனர். அதைப்போல எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதில் எத்தனையோபேர் எங்க ஆத்துக்காரரும் கலெக்டர் ஆபிசில் உத்தியோகம் பண்றார் என்று நூல் வெளியிடுகிறார்கள். அதில் எத்தனை நூல்கள் சொல்லும்படியுள்ளன என்பதைப் பார்க்க வேண்டும். சொல்லும்படியாக அதாவது நான்குபேர் அதைப்பற்றி உயர்வாகப்பேசி அதன்மூலம் நாற்பதுபேர் நானூறபேர் நாலாயிரம்பேர் என்று பரவாவிட்டால் அது கானகத்தே மரம் காய்த்தென்ன காயாதிருந்தென்ன காய்த்துப் பயனென்ன என்ற நிலைதான். -சங்கர சுப்பிரமணியன். (கிறுக்கப்படும்)