ஆடிப்பூரத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூரத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு ஆடிப்பூர விழாவுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆடிப்பூரத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து காவடிகள் மற்றும் பால்குடங்கள் எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.
இன்று(திங்கட்கிழமை) ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே திருத்தணி மலைக்கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் சுற்றுலா பஸ்கள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் படையெடுத்து வந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகனங்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முண்டியடித்து நெரிசலில் சிக்கியதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிக்குள்ளானார்கள். ஆனால் பாதுகாப்பு பணியில் குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். இன்று ஆடிப்பூரத் திருவிழாவில் அதிக அளவில் பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வருகை தருவார்கள் என்பதால் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைந்து தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.