திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது: 3 மணி நேரத்தில் தரிசனம்
திருப்பதியில் கடந்த 2 மாதங்களாக கட்டுக்கடங்காத அளவுக்கு தினமும் 80 முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்காக குவிந்து வந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறி வந்தனர். இதனால் 2 நாட்கள் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தேவஸ்தானத்திற்கு உண்டியல் வருவாயும் அதிகரித்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்து வருகிறது. தற்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால் 3 மணி நேரத்தில் ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பதியில் நேற்று 68,982 பேர் தரிசனம் செய்தனர். 29,092 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.60 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.