மூட்டுவலியா? நடப்பதில் சிரமமா? – ஆர்த்ரிட்டிஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதற்கு சிறந்த அடையாளம் நாம் சுறுசுறுப்பாக அனைத்து செயல்களிலும் ஈடுபடுவதுதான். அப்படி நாம் இயங்குவதில் முக்கியப்பங்கு வகிப்பது எலும்புகள். அதிலும் குறிப்பாக மூட்டுகள் வலிமையுடன் இருத்தல் அவசியம். இல்லாவிட்டால் தினசரி நடவடிக்கைகளான நடத்தல், ஓடுதல் மற்றும் ஏறுதல் போன்ற அனைத்திலும் பாதிப்பு ஏற்படும். இதனால் நாம் நமது உறுதியை இழக்க நேரிடும். குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெரும்பாலானோருக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளில் ஒன்று மூட்டு ஆர்த்ரிட்டிஸ். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு இல்லையென்றாலும் வலியை குறைக்க சில வழிகள் இருக்கின்றன. எலும்பு மருத்துவரை அணுகி பரிசோதித்து அவற்றை முறையாக பின்பற்றுதல் அவசியம்.
மூட்டு ஆர்த்ரிட்டிஸை பொதுவாக 2 வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று ஆஸ்டியோ ஆர்த்ரிட்டிஸ் (Osteoarthritis) மற்றொன்று ரூமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ்(Rheumatoid arthritis). வயதாக ஆக குருத்தெலும்பு தேய்மானத்தால் ஏற்படக்கூடிய நிலைதான் இது. எலும்பு தேய்மானத்திற்கு சில அறிகுறிகள் இருக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்தல் அவசியம்.
1. விரிசல் சத்தம்: கால்களில் விரிசல் விட்ட அல்லது உராய்கிற சத்தம் கேட்கும். இதனை க்ரெபிடஸ் (crepitus) என்கின்றனர். இந்த நிலை ஆர்த்ரிட்டிஸின் ஆரம்ப நிலையாக கருதப்படுகிறது. மூட்டுகளின் சுமூகமான இயக்கத்திற்கு காரணமாக எலும்பு இணைப்பு ஜவ்வு கிழிவதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இவ்வாறு எலும்பு ஜவ்வு சேதமடையும்போது எலும்பின் சமமற்ற பகுதிகள் ஒன்றோடு ஒன்று உராய்கின்றன.
2. எலும்புகள் மாட்டிக்கொள்ளுதல்: ஜவ்வுகள் சேதமடைந்தபிறகு மூட்டு அமைப்புகளும் சேதமடைகின்றன. இதனால் தசைகளை எலும்புடன் இணைக்கும் தசை நாண்கள் உறுதித்தன்மையை இழக்கிறது. குருத்தெலும்பு ஜவ்வு தேய்மானம் அடைவதால் எலும்புகள் ஒன்றாக உராயத் தொடங்குகின்றன. இதனால் அவைகள் ஒன்றுடன் ஒன்று கொக்கிபோட்டதுபோன்று மாட்டிக்கொள்கின்றன.
3. வலி அதிகரித்தல்: ஆர்த்ரிட்டிஸ் வலி குறைவாக ஆரம்பித்து மெல்ல அதிகரித்து அதீத வலியைக் கொடுக்கும். இதனால் நடக்கும்போது, படிக்கெட்டுகளில் ஏறும்போதும், ஓடும்போதும், நீண்ட நேரம் நிற்கும்போதும் வலிக்க ஆரம்பிக்கும். நாட்கள் செல்ல செல்ல இந்த அறிகுறிகள் மோசமாவதோடு குளிர்காலங்களிலும், மன அழுத்தம், பதட்டம் மற்றும் உடலுழைப்பு அதிகமாக இருக்கும்போதும் மிகவும் மோசமான வலியைக் கொடுக்கும்.
4. வீக்கம் மற்றும் சிவந்துபோதல்: ஆர்த்ரிட்டிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மூட்டுக்களை சுற்றி நீர் கோர்ப்பதால் அடிக்கடி மூட்டுப்பகுதி வீங்கி சிவந்துபோகும். இந்த வீக்கத்தால் உடல் மிகவும் சோர்ந்துபோவதோடு, காய்ச்சலும் வரும்.
5. மூட்டு சிதைவு: ஆர்த்ரிட்டிஸ் பிரச்னை அதிகமாகும்போது, மூட்டுகள் படிப்படியாக சிதைய ஆரம்பிக்கும். வீக்கம், சிவந்துபோதல் மற்றும் கால்களை மடக்கும்போது அதீத வலி ஏற்படுவதுடன் குருத்தெலும்பு ஜவ்வு மற்றும் தசைநாண்கள் நிரந்தரமாக சேதமடைகிறது. தசைகள் பலவீனமடைவதால், முழங்கால்களை வளைக்கும்போது தோற்றத்தில் ஒருவித குறைபாடு தெரியும். படிப்படியாக இந்த குறைபாடு கால்களுக்கும் பரவும்.
6. இயக்கம் குறைதல்: ஆர்த்ரிட்டிஸ் தீவிரமடையும்போது உடலின் சீரான இயக்கம் பாதிக்கப்படுகிறது. நடத்தல், நிற்றல், தினசரி செயல்பாடுகள் என அனைத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஊன்றுகோல் உதவி அல்லது சக்கர நாற்காலியின் உதவி தேவைப்படும் நிலைக்கு தள்ளப்படுவர்.
7. குருத்தெலும்பு சேதம்: பொதுவாக மூட்டைச் சுற்றிய பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்திருக்கும் குருத்தெலும்பு ஜவ்வு காலப்போக்கில் குறையத் தொடங்குவதால், நிறைய வெற்றிடம் உருவாகும். இதனை எக்ஸ்ரே மூலம் எளிதில் கண்டறியலாம்.