திருச்சானூர் கோவிலில் வரலட்சுமி விரத உற்சவம் ஆகஸ்டு 5-ந்தேதி நடக்கிறது
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி வரலட்சுமி விரத உற்சவம் நடக்கிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்க உள்ள வரலட்சுமி விரத உற்சவ ஏற்பாடுகள் நடந்து வருகிறது. உற்சவத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அனைத்து வசதி ஏற்பாடுகளும் செய்து தரப்படும். பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு கோவில் வளாகத்தில் தனித் தரிசன வரிசை அமைக்கப்படும். பக்தர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ பங்கேற்று தரிசனம் செய்யலாம். அதற்கான தரிசன டிக்கெட்டுகள் நேரிலும், ஆன்லைனிலும் வழங்கப்படும். வரலட்சுமி விரத உற்சவத்தையொட்டி கோவிலும், ஆஸ்தான மண்டபமும் பல்வேறு வகையான மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்படும். அன்று காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை நடக்கும் வரலட்சுமி விரத உற்சவ நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏழுமலையான் கோவில் பக்தி சேனலில் நேரடியாக ஒளி பரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.