8 மாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா!
கிராண்ட் மாஸ்டர் ஹரிகா 8 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கிறார். ஹரிகா இந்திய அணியில் இருப்பதன் சில முக்கியத்துவம் இங்கே!
உலக செஸ் அரங்கிலும், இந்திய செஸ் அரங்கிலும் கடந்த 22 ஆண்டுகளாக ஹரிகாவின் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்போதும் இவர் உலகின் பத்தாம் நிலை வீராங்கனையாக இருக்கிறார். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஹரிகா, 6 வயது முதல் செஸ் விளையாடி வருகிறார். தனது ஒன்பது வயதில், பத்து வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
12 வயதில் ஆசியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான இவர், 3 முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப்பதக்கம், தேசிய அளவிலான 16 பட்டங்கள் உட்பட 45-க்கும் அதிகமான பட்டங்களை பெற்றவராவார். 2011 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இவர், நாட்டில், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது பெண் என்ற சாதனையைப் படைத்தார்.
இந்தியாவில் ஹரிகாவுக்குப்பிறகு எந்த பெண்ணும் இதுவரை கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறவில்லை. தற்போது 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் 8 மாத கர்ப்பிணியாக பங்கேற்கிறார் ஹரிகா. செஸ் போட்டிகளில் ஹரிகாவின் அனுபவம், இந்த ஒலிம்பியாட்டில் பக்கபலமாக இருக்கும் என்ற நம்பிக்கை, இந்திய அணிக்கு இருக்கிறது.