மாரடைப்பால் அதிகரிக்கும் இறப்புகள்
உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. ஆண்டுதோறும் சுமார் 1 கோடியே 73 லட்சம் பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருவது கவலை அளிப்பதாகும். மேலும் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இதய குறைபாட்டுடன் பிறக்கின்றன.
உலக அளவில் நிலைமை இப்படி என்றால், இந்தியாவில் மாரடைப்பின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது வந்தே தீரும் என்ற வகையை சேர்ந்த நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம். என்ஜினை சீராக பராமரிப்பது போல இதயத்தை பாதுகாக்கவும் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.