பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்ட 2 பண்ணைகளில் உள்ள பன்றிகளை கொல்ல அரசு முடிவு
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது வளர்ப்புப் பன்றிகளை பாதிக்கும் மிகவும் ஆபத்தான வைரஸ் தொற்று நோயாகும். இந்த மாத தொடக்கத்தில் பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள அரசு கடுமையாக்கியது. இருந்தபோதிலும் இந்த வைரஸ் கேரளாவுக்கு பரவியது.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடியில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஒன்றில், பல பன்றிகள் கூட்டமாக இறந்ததாக வந்த தகவலை அடுத்து, அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்தில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பிறகு வயநாடு மாவட்டத்தில் செயல்படும் இரண்டு பண்ணைகளில் உள்ள பல பன்றிகளுக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாதிப்பு பதிவான 2 பண்ணைகளில் உள்ள 360 பன்றிகளை கொல்ல அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.