காணாமல் போன கிளி கண்டுபிடிப்பு: மீட்டு கொடுத்தவர்களுக்கு ரூ.85 ஆயிரம் சன்மானம்
துமகூரு டவுன் ஜெயநகரில் வசித்து வருபவர் அர்ஜூன். இவரது மனைவி ரஞ்சனா. இவர்கள் 2 பேரும் உயர்ரக கிளியை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கிளி வீட்டில் இருந்து பறந்து சென்று காணாமல் போனது. இதனால் தங்களது கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அர்ஜூன்-ரஞ்சனா தம்பதி அறிவித்து இருந்தனர்.
மேலும் கிளியின் புகைப்படத்தையும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் துமகூரு டவுன் பசவபட்டணா என்ற பகுதியில் வசித்து வரும் சீனிவாஸ் என்பவர் வீட்டின் முன்பு உள்ள மரத்தில் அந்த கிளி அமர்ந்து இருந்தது. இதையடுத்து கிளியை தனது உறவினர் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் சேர்ந்து மீட்ட சீனிவாஸ், இதுபற்றி அர்ஜூனுக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் அர்ஜூன் வீட்டிற்கு சென்று அந்த கிளியை சீனிவாஸ், கிருஷ்ணமூர்த்தி ஒப்படைத்தனர். இதையடுத்து தான் அறிவித்ததை விட கூடுதலாக ரூ.35 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.85 ஆயிரத்தை சீனிவாஸ், கிருஷ்ணமூர்த்திக்கு அர்ஜூன் சன்மானமாக கொடுத்து உள்ளார்.