சங்கமம்

எத்திரியம் என்றால் என்ன? இதற்கும் பிட்காயினுக்குமான வித்தியாசம் என்ன?

2000ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒருவர் பில்லியனர் ஆக வேண்டுமானால் பெரிய தொழிலதிபராக இருக்க வேண்டும் அல்லது பில் கேட்ஸ் போல மென்பொருள் விற்க வேண்டும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக 2015க்குப் பிறகு தொழில்நுட்பம் மூலம் சிறப்பாகச் செயல்படும் ஏதோ ஒரு செயலியை வெற்றிகரமாகத் தொடங்கி, மக்கள் மத்தியில் அது பிரபலமடைந்துவிட்டால் போதும், அவர் சில ஆண்டுகளில் பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்துவிடலாம். உதாரணத்துக்கு டிக்டாக்கைக் கூறலாம்.

இன்று அதையும் தாண்டி, கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்தால் ஓவர்நைட்டில் செட்டிலாகிவிடலாம் என பலரும் நம்பத் தொடங்கியுள்ளனர். கடந்த 2021 செப்டம்பரில் பிட்காயின் சுமார் 41,000 அமெரிக்க டாலரைத் தொட்டு வர்த்தகமாகி வந்தது. அப்போது வாங்கி, நவம்பர் 2021-ல் சுமார் 68,500 டாலரைத் தொட்ட போது விற்றிருந்தால் ஒரு பிட்காயினுக்கு சுமார் 27,500 டாலர் கல்லாகட்டி இருக்கலாம் என பெருமூச்சுவிட்டு வருத்தப்படாத ஆட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உலகின் டாப் ஐந்து கிரிப்டோகரன்சிகளின் பெயரைக் கேட்டால் கிரிப்டோ ஆதரவாளர்கள் பலருக்கே தெரியாத சுழல் நிலவுவதை மறுப்பதற்கில்லை. குறைந்தபட்சமாக கிரிப்டோ ஆதரவாளர்களில் பலரும் டாப் இரு கிரிப்டோ கரன்சிகளான பிட்காயின் மற்றும் எத்திரியம் என பெயரைத் தெரிந்து வைத்திருக்கலாம்.

ஆனால் அதை சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறார்களா..? பிட்காயினுக்கும், எத்திரியத்துக்குமான வித்தியாசம் என்ன?

இரண்டுமே கிரிப்டோ கரன்சிதான். இந்தியாவில் ரூபாய் நோட்டு இருப்பது போல, அமெரிக்காவில் அமெரிக்க டாலர். இரண்டும் வெவ்வேறு நாடுகளின் கரன்சி அதுதான் வித்தியாசம். இதே கதை பிட்காயின் மற்றும் எத்திரியத்துக்கும் பொருந்தும் என்று நீங்கள் கருதினால்… ஐயம் வெரி சாரி சார் / மேடம், உங்கள் புரிதலில் பிழை இருக்கிறது.

எத்திரியம் என்பது ஒரு வகையான பிளாக்செயின் தொழில்நுட்பத் தளம். இதன் கிரிப்டோகரன்சிதான் ஈதர் (Ether). கிங் ஆஃப் கிரிப்டோ என்கிற கெத்தோடு பிட்காயின் மட்டுமே இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்த போது, ஒரு பொடியனாக கிரிப்டோ உலகில் நுழைந்த ஈதர், இன்று உலகிலேயே அதிகம் வர்த்தகமாகும் இரண்டாவது பெரிய கிரிப்டோ கரன்சி என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த விடாலிக் புடெரின் (Vitalik Buterin) கடந்த 2013ஆம் ஆண்டு எத்திரியத்தை உருவாக்கினார். கிரிப்டோ கரன்சி விவகாரத்தில் பிட்காயின் முதல் தலைமுறை பாய்ச்சல் என்றால், எத்திரியத்தை இரண்டாம் தலைமுறை கிரிப்டோ பாய்ச்சல் எனலாம்.

உதாரணமாக பிட்காயின் இயங்கும் பிளாக்செயின் தளம் விண்டோஸ் 7 என்றால், எத்திரியம் அதே பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் விண்டோஸ் 8 எனலாம். பிட்காயின் செயல்படும் தொழில்நுட்பத்தை விட, எத்திரியம் பிளாக்செயினில் சில கூடுதல் நன்மைகள் இருக்கின்றன.

பிட்காயின் செயல்படும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பணப்பரிமாற்றங்களை மட்டுமே மேற்கொள்ள முடிந்தது. ஆனால் எத்திரியம் டெக்னாலஜி இரண்டு புதிய விஷயங்களை களத்தில் இறக்கியது. 1. ஸ்மார்ட் கான்டிராக்ட் 2. டேப்ஸ் (Dapps).

1. ஸ்மார்ட் கான்டிராக்ட்

உங்களிடம் 1 கோடி ரூபாய் இருக்கிறது என்றால், அந்த மதிப்புக்கு ஏத்த பொருட்களை வாங்கலாம், சேவைகளைப் பெறலாம்தானே. அதே போல எத்திரியம் தளத்தில் உங்களிடம் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிரிப்டோ கரன்சி இருக்கிறது என்றால், அதை வைத்துக் கொண்டு எத்திரியம் தளத்திலேயே சொத்து பத்துக்கள், பங்குகள் என எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.

இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் எத்திரியம் தளத்தில் அப்படி பொருட்கள், சொத்துக்கள், சேவைகளைப் பெற வழக்குரைஞர்கள், தரகர்கள் என எவரும் தேவை இல்லை. உங்கள் ஸ்மார்ட் கான்டிராக்டில் குறிப்பிட்டிருக்கும் தரத்தில், விலையில் சொத்து பத்துக்கள் கிடைக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்பமே இந்த ஸ்மார்ட் கான்டிராக்ட்.

எத்திரியத்தின் ஸ்மார்ட் கான்டிராக்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பார்கலேஸ் வங்கி டெரிவேட்டிவ்களில் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது.

2. Dapps

Dapps என்றால் Decentralised Applications என்று பொருள். கிரிப்டோ கரன்சி பொருளாதாரத்துக்கான ஒரு சந்தைத் தளமாகச் செயல்படுகிறது டேப்ஸ். யாராவது பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட்ஃபோன்களுக்கான செயலிகளை மேம்படுத்த வேண்டுமானால் அவர்கள் எத்திரியத்துக்குத் தான் வர வேண்டும். அந்த அளவுக்கு சூழலை பதப்படுத்தி வைத்திருக்கிறது எத்திரியம்.

Augur, Cryptokitties, Blockstack, Steemit, Uniswap போன்ற செயலிகளை உதாரணமாகக் கூறலாம். கிரிப்டோ கரன்சியைக் கொண்டு சூதாடுவது, வீடியோ கேம் விளையாடுவது, வங்கி சேவைகளைப் பெறுவது வரை பலதும் கிடைக்கத் தொடங்கியுள்ளதாக சி என் பி சி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாக்செயினைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட செயலிகளில், நிதி சார் திட்டங்கள் அல்லது முதலீடுகளைச் செய்வதை DeFi (Decentralised Finance) என்று அழைக்கிறார்கள். இதில் நடுநாயகமாக எந்த ஒரு அமைப்பும் இருக்காது. எல்லா பரிவர்த்தனைகளும் இரு நபர்களுக்கு மத்தியில் மட்டுமே நடக்கும். இதற்கு என் எஃப் டிகளை (Non Fungible Token) ஒரு உதாரணமாகக் கூறலாம்.

ஆகையால்தான் எத்திரியத்தின் கிரிப்டோ கரன்சியான ஈதர், குறைந்த காலகட்டத்துக்குள் ஒரு சூப்பர் ஸ்டார் கிரிப்டோவாக வலம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2020 அக்டோபரில் சுமார் 350 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகி வந்த ஈதர் 2021 நவம்பர் காலகட்டத்தில் சுமார் 4,800 டாலரைக் கடந்து வர்த்தகமானது. தற்போது எல்லா கிரிப்டோவைப் போல சரிந்து சுமார் 1,500 டாலருக்கு வர்த்தகமாகிறது.

இவை அனைத்தும் கிரிப்டோ கரன்சி போட்டியில், பிட்காயின் நீண்ட நாட்களுக்கு கிங் ஆஃப் கிரிப்டோவாக தனித்திருக்க முடியாது என்பதை உணர்த்துகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.