சங்கமம்

1,400 பேர் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் பயிற்சி ஆட்டம் மாமல்லபுரத்தில் 24-ந் தேதி நடக்கிறது..!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது.

இந்தியாவில் முதல்முறையாக அரங்கேறும் செஸ் ஆட்டத்தில் மிகஉயரிய போட்டியான இதில் இந்தியா, அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், நெதர்லாந்து உள்பட 189 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியை சிறப்பாகவும் என்றென்றும் நினைவில் நிற்கும் வகையில் வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு அரங்கில் 196 செஸ் போர்டுகளும், மற்றொரு அரங்கில் 512 செஸ் போர்டுகளும் மேஜைகளில் வைக்கப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்த போட்டிக்காக மாமல்லபுரம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் செஸ் போர்டுகள், அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் அனைத்தும் துல்லியமாகவும், சரியாகவும் செயல்படுகிறதா? என்பதை உறுதி செய்ய பயிற்சி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமாகும்.

இதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தில் வருகிற 24-ந் தேதி செஸ் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் 1,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஒருநாள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் தீபத்தின் தொடர் ஓட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. டெல்லியில் கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் தீபத்தின் தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த தீபம் இந்தியாவில் 75 நகரங்களில் 40 நாட்கள் பயணித்து போட்டி நடைபெறும் இடத்துக்கு வந்தடையும்.

இதன்படி செஸ் ஒலிம்பியாட் தீபம் தமிழகத்துக்குள் வருகிற 25-ந் தேதி நுழைகிறது. அதாவது அந்தமானில் இருந்து விமானம் மூலம் தீபம் வருகிற 25-ந் தேதி கோவையை வந்தடைகிறது. அங்கிருந்து மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்கள் வழியாக வருகிற 27-ந் தேதி இரவு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கை வந்தடைகிறது. அங்கு அடுத்த நாள் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெறுகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வீரர்கள், போட்டி தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.