ஆடி மாத சிறப்புகள்
ஒரு வருடத்தை உத்தராயன புண்ணிய காலம், தட்சிணாயன புண்ணிய காலம் என இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்படுகின்றன. சூரியன் வடக்கு நோக்கி நகரும், தை மாதம் முதல் ஆனி வரை உத்தராயன புண்ணிய காலம். சூரியன் தெற்கு நோக்கி நகரும் ஆடி முதல் தை வரை தட்சிணாயன புண்ணிய காலம். ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதமாக பார்க்கப்படுகிறது. எல்லா அம்மன் கோவில்களிலும் மிக விசேஷமாக திருவிழாக்கள் கொண்டாடப்படும்.
இது தெய்வத்திற்கான மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்யப்படுவதில்லை. ஆடி மாதம், சந்திரன் ஆளக்கூடிய கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். சிவ அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரன் ஆளும் கடக ராசியில் சஞ்சாரம் செய்வதால், சந்திரனின் ஆளுமை அதிகரிக்கிறது. சிவனை விட சக்தியின் வல்லமை அதிகம் பரிமளிக்கிறது. அதனால் இந்த மாதம் சக்தி வழிபாட்டிற்கு உகந்ததாக இருக்கிறது. ஆடி மாதத்தில், மற்ற மாதங்களை விட பிராண வாயுவின் சக்தி வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்கும்.
எனவே அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சம்பழம், கூழ் ஆகிய அனைத் தும் அம்மன் கோவில் இறைவிக்கும் அர்ப்பணிக்கப்படுகின்றது. ஆடி மாதத்தில் உஷ்ணம் கூடி இருக்கும். அம்மனுக்கு படைத்த ஆடிக் கூழை நாம் சாப்பிடும் போது, அது நம் உடலின் உஷ்ணத்தைக் குறைத்து, உடலை சமச்சீரான வெப்பநிலையில் வைக்கும். அதே போல எலுமிச்சையில் ஆன்டி ஆக்ஸிடண்ட் சக்தி உண்டு. அதனால் எலுமிச்சை அதிகம் பயன்படுத்துவதாக அறிவியல் ரீதியாகவும் காரணம் சொல்லப்படுகிறது. ஆடி மாத செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு ஆகிய நாட்களில் விரதம் இருந்து, வேப்பிலை ஆடை தரித்து, அலகு குத்தி, பூ மிதி (தீ மிதி) விழாவில் பங்கேற்பவர்களின் கோரிக்கையை அம்மன் நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.