லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்க எதிர்பார்ப்பு
லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாவது கிரிக்கெட் போட்டிகளின் பதிப்பு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து உள்ளூர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இந்தப்போட்டி ஒகஸ்ட் 1 முதல் 21 வரை, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும் நடப்பு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலை காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதனை ஒத்திவைக்க பரிசீலித்து வருகிறது.
காலி அணியின் வலியுறுத்தல்
ஐந்து அணிகளில் ஒன்றான கோல் க்லாடிட்டர்ஸ் திட்டமிட்டபடி போட்டி நடத்தப்பட்டால், போட்டியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் எனவும் அந்த அணி வலியுறுத்தியுள்ளது.
போட்டியானது மொத்தம் 24 போட்டிகள் என்ற அடிப்படையில், 20 முதல் சுற்று ஆட்டங்கள் மற்றும் நான்கு இறுதி சுற்று ஆட்டங்கள், இறுதி போட்டி என நடத்தப்படவுள்ளது.
போட்டிக்கான முன்னைய திட்டங்கள்
முதல் 14 ஆட்டங்கள் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். பின்னர், ஏனைய போட்டிகள் ஒகஸ்ட் 13 முதல் ஹம்பாந்தோட்டைக்கு மாற்றப்படும் என திட்டமிடப்பட்டிருந்தன.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் இரண்டு பதிப்புகளையும் யாழ்ப்பாண அணி வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.