சங்கமம்
“வ்ரவேரியன் வோர் -19 ” சாம்பியன் பட்டத்தை வென்றது சம்மாந்துறை விளையாட்டு கழகம்.
சாய்ந்தமருதின் மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40 வது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலை மற்றும் கொரோனா காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றிய “வ்ரவேரியன் வோர் -19” 20 க்கு 20 கடினபந்து கிரிக்கட் சுற்றுத்தொடரின் சம்பியன் பட்டத்தை சாய்ந்தமருது பீமா விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி சம்மாந்துறை விளையாட்டுக்கழகம் தனதாக்கி கொண்டது.
சாய்ந்தமருது அஸ்ரப் ஐக்கிய பொதுவிளையாட்டு மைதானத்தில் வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத் தலைவரும், மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான ஏ.எம். றிபாஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சம்மாந்துறை விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயித்த 20 ஓவர்களில் 134 ஓட்டங்களை 08 விக்கட்டுக்களை இழந்து பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை விளையாட்டுக்கழக வீரர் எஸ்.எம். அப்ஹாம் 31 பந்துகளை எதிர்கொண்டு 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். சாய்ந்தமருது பீமா விளையாட்டுக்கழகம் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஆர்.எம்.ரப்சன் 03 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
அதனடிப்படையில்135 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பீமா விளையாட்டுக்கழகம் 18.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 114 ஓட்டங்களை மட்டும் பெற்று 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். சாய்ந்தமருது பீமா விளையாட்டுக்கழகம் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜே.எம். ரிழ்வான் 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக 33 ஓட்டங்களை பெற்றதுடன் எதிரணியின் நான்கு விக்கட்டுக்களையும் வீழ்த்திய சம்மாந்துறை விளையாட்டுக்கழக வீரர் எஸ்.எம். அப்ஹாம் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடராட்டகாரராக நிந்தவூர் இம்ரான் விளையாட்டு கழக வீரர் நிக்ஸி அஹமட் தெரிவானார்.
இப்போட்டிக்கு கொழும்பு மாவட்ட வாகன போக்குவரத்து பிரதம பரிசோதகரும், சுற்றுத்தொடரின் பிரதான அனுசரணையாளருமான பொறியியலாளர் ஏ.எல்.எம். பாரூக் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் முக்கியஸ்தர்கள் பலரும் அதிதிகளாக கலந்து கொண்டு வெற்றி கேடயத்தையும், பரிசில்களையும் வழங்கி வைத்தனர். இந்த மைதானத்தில் இவ்வருடம் நடந்த முடிந்த சகல சுற்றுத்தொடர்களிலும் பலம்வாய்ந்த அணிகளை வீழ்த்தி சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தினர் தொடர்ச்சியாக மூன்று சம்பியன் பட்டங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நூருல் ஹுதா உமர்.