சிறந்த வீரர்கள் பார்முக்கு திரும்ப இவ்வளவு நாட்கள் ஆகாது- கோலி குறித்து கபில்தேவ் கருத்து
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் கிரிக்கெட் தொடர்களில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ரன்களை எடுக்காததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக 3 வகையான அணியிலும் ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் அடித்து பல வெற்றிகளை குவித்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று தன்னை நிரூபித்த அவர் கடைசியாக கடந்து 2019-ல் சதமடித்திருந்தார். அதன்பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 3 வருடங்களுக்கும் மேலாக 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவிக்கும் அவர் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட் ஆனார்.
எத்தனை நாட்கள் பெரிய அளவில் ரன்களை எடுக்காமல் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பை கொடுக்க விடாமல் காலத்தை தள்ளுவீர்கள் என்று கடுமையாக விமர்சித்த கபில்தேவ் டெஸ்ட் அணியில் அஷ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் டி20 அணியில் விராட் கோலியை நீக்குவதில் எந்த தவறுமில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலைமையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் விராட் கோலி ஓய்வெடுப்பது எந்த வகையிலும் ஃபார்முக்கு திரும்புவதற்கு உதவாது என்று தெரிவித்துள்ள கபில் தேவ் நீக்கப்பட வேண்டியவரை ஓய்வு என்ற பெயரில் அணியிலிருந்து தேர்வு குழுவினர் விடுவிப்பதில் எந்த தவறுமில்லை என்று கூறியுள்ளார்.
விராட் கோலி குறித்து கபில் தேவ் கூறியதாவது:- விராட் கோலி போன்ற பெரிய வீரரை நீக்குங்கள் என்று நான் சொல்ல முடியாது. அவர் மிகப்பெரிய வீரர். அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் ஓய்வு கொடுக்கப்பட்டதாக நீங்கள் கூறியிருந்தால் அதில் எந்தத் தீங்கும் இல்லை. இருப்பினும் அவரைப்போன்ற வீரரை எப்படி பார்முக்கு திரும்ப வைக்க முடியும் என்பது முக்கியமான கேள்வியாகும். தனித்துவம் நிறைந்த வீரரான அவர் நிறைய பயிற்சிகளை எடுத்து அதிக போட்டிகளில் விளையாடினால் தான் பார்முக்கு திரும்ப முடியும்.
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியை விட பெரிய வீரர் இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன். ஆனால் நீங்கள் சரியாக செயல்படவில்லையெனில் தேர்வுக் குழுவினர் அவர்களின் முடிவை எடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்படாத யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் அல்லது நீக்கலாம் என்று தெரிவித்தார். விராட் கோலி பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற அக்கறையிலேயே இந்த விமர்சனங்களை தெரிவிப்பதாக கபில் தேவ் கூறினார். அவரைப் போன்ற தரமான வீரர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அவரை நீக்கினாலும் ஓய்வு கொடுத்தாலும் அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது. அதற்காக ரஞ்சி கோப்பை அல்லது வேறு ஏதேனும் தொடர்களில் பெரிய அளவில் ரன்களைக் குவித்தால் அது அவரின் தன்னம்பிக்கையை மீண்டும் கொண்டுவரும். மேலும் சிறந்த வீரருக்கும் மிகச்சிறந்த வீரருக்கும் அதுதான் வித்தியாசமாகும். மிகச்சிறந்த வீரர்கள் பார்முக்கு திரும்ப இத்தனை நேரங்களை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் அவர் ஃபார்முக்கு திரும்ப இவ்வளவு நாட்கள் எடுத்துகொள்வது கவனிக்க வேண்டியுள்ளது. விராட் கோலி ஓய்வெடுத்தாலும் நீக்கப்பட்டாலும் எனக்கு பிரச்சினை கிடையாது. அவர் பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது ஆசையாகும். அவரைப் போன்ற நல்ல வீரர் ஃபார்முக்கு திரும்ப ஒரு சிறந்த இன்னிங்ஸ் போதுமானது. இருப்பினும் அது எப்போது வரும் என்று நமக்கு தெரியவில்லை. அதற்காக நாம் 2 வருடங்களாக காத்திருக்கிறோம் என்று ஆதரவு கலந்த விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.