ஒரே நேரத்தில் 2,140 பேருக்கு செஸ் பாட வகுப்பு நடத்தி உலக சாதனை
திருச்சியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 140 பேருக்கு செஸ் பாட வகுப்பு நடத்தி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. செஸ் பாடம் சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உலக சாதனையாக செஸ் பாடம் நடத்தும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டது. திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில், நடந்த இந்த நிகழ்ச்சியில் அனைத்து பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மேற்பார்வையிட்டார். அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 140 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு பிரபல பாரா ஒலிம்பிக் செஸ் வீராங்கனை ஜெனித்தா ஆண்டோ செஸ் விளையாட்டு பயிற்சி அளித்தார். அப்போது, அவர் செஸ் விளையாட்டின் முக்கியத்துவம், மாணவ, மாணவிகள் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம், விளையாட்டின் விதிகள், அதன் நுண்ணறிவு போன்றவற்றை 30 நிமிடங்களில் பாடமாக விளக்கினார். உலக சாதனை தொடர்ந்து அனைவரும் செஸ் போட்டியில் கலந்து கொண்டனர்.
4 உலக சாதனை நிறுவனங்களுக்கு இந்த நிகழ்வு பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் இந்த நிகழ்ச்சியில் `ஒரே நேரத்தில் மிக அதிக பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட செஸ் பாடம்’ எனும் உலக சாதனையை படைத்தது. இதில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் மூத்த நடுவர் (சீனியர் அட்ஜுடிகேட்டர்) அமீத் கே.ஹிங்கரோனி, நடுவர் சத்யஸ்ரீகுப்தா, ஏஷியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அம்பாஸிடர் டாக்டர் செந்தில்குமார், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் மூத்த நடுவர் ஜெகநாதன், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த, பதிவு மேலாளர் முனைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் உலக சாதனை சான்றிதழ்களை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் வழங்கினர்.
மேலும் பதக்கங்களை அணிவித்து கவுரவப்படுத்தினார்கள். உக்ரைன் சாதனை முறியடிப்பு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி உக்ரைன் நாட்டில் ஆயிரத்து 496 பேர் கலந்து கொண்டு படைத்த இந்த சாதனையை, நேற்று திருச்சியில் 2 ஆயிரத்து 140 பேர் கலந்து கொண்டு முறியடித்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு உலக சாதனை சான்றிதழ்களையும், பதக்கங்களையும் அமைச்சர் கே.என்.நேரு வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், எம்.எல்.ஏ.க்கள், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ்பால்ராஜ் மற்றும் கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.