ஏர் நியூஸிலாந்தில் சர்வதேசப் பயணிகளுக்கு படுக்கை வசதி அறிமுகம்
ஏர் நியூஸிலாந்து விமானம் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது ஓர் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு நம்மூர் ஏசி வால்வோ பேருந்துகள்போல படுக்கும் படுக்கை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நியூசிலாந்தில் இருந்து அமெரிக்கா, கனடா செல்லும் விமானங்களுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
நீண்டகாலமாக விமானங்களில் படுக்கை வசதி செய்ய பல்வேறு நாடுகளின் அரசு மற்றும் தனியார் விமான சேவை நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அதன் ஆரம்பப் புள்ளியாக நியூஸிலாந்து அரசு இந்த வசதியை உருவாக்கி உள்ளது. கிட்டத்தட்ட 20 மணி நேர விமான பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் எகானமி இருக்கையில் அமர்ந்தபடியே பயணம் மேற்கொள்கின்றனர்.
இதனால் அவர்களுக்கு வசதி செய்துகொடுக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் விமானத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக அனைத்து பயணிகளுக்கும் படுக்கைவசதி செய்து கொடுப்பது சிரமம். எனவே நியூசி., விமானம் இதற்காக ஓர் புதிய உத்தியைக் கையாளுகிறது. இதன்படி நீண்ட நேரம் வெளிநாடுகளுக்கு சர்வதேச விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் 4 மணி நேரத்துக்கு மட்டும் படுக்கையை ரிசர்வ் செய்துகொள்ளலாம். இதனால் இவர்கள் 4 மணி நேரம் படுக்கையில் உறங்கலாம். இதனால் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் களைப்பு நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.