“வீட்டுவேலை செய்வதற்காகப் பிரிட்டனுக்கு ஆள்கடத்தப்பட்டேன்” – முன்னாள் ஒலிம்பிக் வீரர்
முன்னாள் ஒலிம்பிக் வீரர் மோ ஃபாரா (Mo Farah) வீட்டுவேலை செய்வதற்காக இன்னொரு பிள்ளையின் பெயரில் தாம் பிரிட்டனுக்குச் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் 9 வயதில் ஜிபுட்டி (Djibouti) என்ற கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஒரு பெண்ணால் பிரிட்டனுக்கு அழைத்து வரப்பட்டதாக ஃபாரா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அந்தப் பெண்தான் தமக்கு முகமது ஃபாரா என்ற பெயரைக் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
தமது உண்மையான பெயர் ஹுசேன் அப்டி காஹின் (Hussein Abdi Kahin) என்றும் தமக்கு 4 வயது இருக்கும்போது சோமாலியாவில் தமது தந்தை கொல்லப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
மேலும் தாம் பிரிட்டனில் இன்னொரு குடும்பத்தின் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டதாக ஃபாரா தெரிவித்தார்.
நாளை (ஜூலை 13) ஒளிபரப்பாகவுள்ள விளக்கப்படத்தில் அவர் அந்தத் தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.
ஐரோப்பாவில் உள்ள தமது உறவினர்களுடன் வசிக்கப்போவதாக நம்பி பிரிட்டனுக்குச் சென்றதாக அவர் சொன்னார்.