மெக்சிகோவில் வினோதம்: முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்
மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரின் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹ்யூகோ சோசா. இவர் தனது நகரம் இயற்கை வளத்துடன் செழிப்பாக இருக்க வேண்டி பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை திருமணம் செய்தார்.
ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள பாரம்பரிய இசை முழங்க வண்ணமயமாக திருமண விழா நடந்தது. கிறிஸ்துவ முறைபடி நடைபெற்ற திருமணத்தில் முதலைக்கு வெள்ளை நிற கவுன் அணிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது.
திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக மேயர் விக்டர் முதலையின் உதட்டில் முத்தமிட்டார். திருமணம் குறித்து மேயர் விக்டர் கூறும்போது, “இயற்கையிடம் மழை, உணவு, மீன் வேண்டி நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்கள் நம்பிக்கை” என்றார்.
இந்த சடங்கு திருமணம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஹிஸ்பானிக் காலத்தைச் சேர்ந்த ஓக்ஸாகா மற்றும் ஹுவேவ் பழங்குடி சமூகங்களில் பின்பற்றப்பட்டு வந்தது என்பதும் இயற்கையின் கருணையை வேண்டி இம்மாதிரியான சடங்குகள் பழங்குடிகளால் பின்பற்றப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.