இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
லைஃப் இஸ் அ ரேஸ்.. ரன்.. ரன்.. என ஓடும் வாழ்க்கை முறையில் மக்களிடத்தில் மனிதநேயம் எல்லாம் இருக்குமா என்ன? அவரவர்களுக்கு அவரவர் வாழ்க்கைதான் முக்கியம் எனக் கூறப்படும் பொதுவான பேச்சுகள் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவ்வப்போது நடக்கும் சில சம்பவங்கள் உணர்த்தி வருகின்றன.
அந்த வகையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையத்தில் காணாமல்போன பெண் ஒருவரின் விலை உயர்ந்த பொருட்கள் எந்த சேதாரமும் இல்லாமல் அவரிடமே மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு சம்பவம்தான் பாகிஸ்தானில் நடந்திருக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் கதிஜா என்ற பெண் ஒருவர் தனது ஐபேட், கிண்டில், ஹார்ட் டிஸ்க் ஆகிய விலை உயர்ந்த பொருட்கள் இருந்த பையை தொலைத்திருக்கிறார். தொலைந்துபோன அந்த ஹார்ட் டிஸ்கில்தான் அவரது தனிப்பட்ட தரவுகள் அனைத்தையும் சேமித்து வைத்திருக்கிறார்.
காணாமல்போன தன்னுடைய கேட்ஜெட்கள் எதுவுமே கிடைக்காததால் பல நாட்கள் அதனை எண்ணி நொறுங்கி போயிருக்கிறார் கதிஜா. பின்னர் வேறுவழியின்றி புதிய கிண்டில் உள்ளிட்ட கேட்ஜெட்களை கதிஜா வாங்கியிருக்கிறார்.
இப்படி இருக்கையில் கடந்த 2021ம் ஆண்டு மொபைல் ஷாப்பின் உரிமையாளர் ஒருவர் கதிஜாவை தொடர்புகொண்டு அவருடைய தொலைந்துப்போன பொருட்கள் தன்னிடம் இருப்பதாக கூறியிருக்கிறார். முதலில் என்னவென தெரியாமல் குழம்பிப்போன கதிஜா, இஸ்லாமாபாத்தில் தொலைந்தவற்றை நினைவுக் கொண்டு வந்திருக்கிறார்.
அதையடுத்து, அந்த மொபைல் ஷாப் ஓனர் கதிஜாவுக்கு அவருடைய தொலைந்த பொருட்களை போட்டோ எடுத்து அனுப்பியதோடு, கதிஜாவின் ஹார்ட் டிஸ்கை சோதித்ததில் அதில் இருந்த சாட்டிங் ஸ்கீரின் ஷாட்டில் இருந்த அவரது தோழியின் எண்ணை வைத்து கண்டுபிடித்ததாக கூறியிருக்கிறார்.
பின்னர் கதிஜா தன்னுடைய சகோதரரை ஜெலும் பகுதியில் உள்ள அந்த மொபைல் ஷாப்பிற்கு அனுப்பி தொலைத்த பொருட்களை மீட்டு வர செய்திருக்கிறார்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் கதிஜா அண்மையில்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அந்த மொபைல் கடை உரிமையாளர் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகிறார். ஆனால் என்னுடைய பொருட்களை கொடுப்பதற்காக சிரத்தை எடுத்து அதற்கு எந்த சேதாரமும் இல்லாமல் என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறார்.
அவரது நேர்மையும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனிதாபிமானமும் என்னை வியக்க வைத்துள்ளது. நான் தொலைத்த அந்த பொருட்கள் மீண்டும் எனக்கு கிடைக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக அனைத்தும் நடந்தது ஏதோ மேஜிக் போன்று இருக்கிறது” என அந்த பெண் பதிவிட்டுள்ளார்.
கதிஜாவின் இந்த பதிவை கண்டு நெட்டிசன்கள் பலரும் வியந்துப்போய் செல்போன் கடைக்காரரின் மனிதநேயத்தை பாராட்டி வருகிறார்கள்.