கட்டுரைகள்

வாக்குமூலம்!…. 20 ….. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்!

“தமிழ்த் தேசியவாத அரசியல் தரப்புகள் அர்த்தபூர்வமான மாற்றங்களுக்காக பொதுஜன தமிழ் முன்னணியை உருவாக்க வேண்டும்” என்றும்,

“பொருளாதார நெருக்கடி மற்றும் இனப்பிரச்சனைக்கு கூட்டுத் தீர்வுகளைக் காண்பதற்குச் சிங்கள- முஸ்லீம்கள் மத்தியில் உள்ள முற்போக்கான தரப்புகளை நோக்கி நேசக்கரங்களை நீட்டுங்கள்” என்றும்,

திருகோணமலையில் இயங்கும் சிந்தனைக் கூடம் ஒன்றிற்கு நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அளித்த நேர்காணலின்போது தமிழ்த் தேசியவாத அரசியலுக்கான தனது ஆலோசனைகளாகக் கூறியுள்ளார்.

இதுபற்றித் தமிழ்த் தேசியவாத அரசியல் தரப்பு முதலில் வெட்கப்பட வேண்டும். காரணம் தமிழ்த் தேசியவாத அரசியல் தரப்பு அதன் ஆரம்ப காலத்திலிருந்தே குறைந்தபட்சம் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த 1949 இலிருந்து இன்று வரை கடந்த காலத்தில் தானாகவே செய்திருக்க வேண்டிய ஆனால் செய்யாமல் விட்ட ஒன்றை ஒரு வெளிநாட்டு இராஜதந்திரியொருவர்- இரண்டாவது நபர் ஒருவர் சுட்டிக் காட்ட வேண்டியேற்பட்டமைக்கு முதலில் தமிழ்த் தேசியவாத அரசியற் தரப்பு வெட்கப்பட்டேயாகவேண்டும்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் 1944 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் உருவாக்கம்-சுதந்திர இலங்கையில் 1949 இல் தமிழரசுக் கட்சியின் தோற்றம்-1972 இல் இரண்டும் இணைந்து தமிழர் கூட்டணியாகிப் பின் 1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாகியமை – 2001 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவை எல்லாமே வெளியில் ‘பொதுவான தமிழர் முன்னணி’ என்று தோற்றம் காட்டினவே தவிர, இவை தமிழ் மக்களின் நலன்களை மட்டுமே இலக்காகக் கொண்டு உணர்வுபூர்வமாக ஐக்கியப்பட்ட அணியாக ஒருபோதும் இருந்ததில்லை. மாறாகத் தனிநபர்களின்-கட்சிகள் அல்லது குழுக்களின் நலன் சார்ந்த-தன்முனைப்பும் தன்னலமும் கொண்டு தேர்தல் அரசியல் நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பெற்ற அரசியற் கூட்டாகவே செயற்பட்டன. தமிழர்களும் மாற்றுவழியின்றித் தமிழ், தமிழர், தமிழீழம் (மொழி, இனம், தேசம்) போன்ற உணர்வினால் உந்தப்பட்டு இவர்களையே ஆதரித்து வந்துள்ளனர்.

இலங்கையில் குறிப்பாகச் சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்களின் அடிப்படைக் குணாம்சம் பௌத்த சிங்களப் பேரினவாதமாக இருக்க அதனை எதிர்கொள்ளத் தமிழர் அரசியல் தரப்பு கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் குறுந்தமிழ்த்தேசிய வாதமாக இருந்தது. இந்த இரண்டுமே அதாவது பௌத்த சிங்களப் பேரினவாதமும் குறுந் தமிழ்த் தேசியவாதமுவே (பின்னாளில் இவற்றிற்குப்

போட்டியாக இஸ்லாமிய அடிப்படைவாதமும் உருவாகி நிலைமையை மேலும் மோசமாக்கின) சுதந்திர இலங்கையில் ஏற்பட்ட அத்தனை அழிவுகளுக்கும் காரணம். இந்தத் தொடர் அழிவுகளின் ஒட்டுமொத்த அறுவடைதான் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அது கிளைவிட்டுள்ள அரசியல் நெருக்கடியும் ஆகும்.

உணர்வுபூர்வமான ஐக்கியமின்மை தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகளின் பலவீனமாக இருக்க, மற்றொரு பலவீனமாக இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயமாகச் சிங்கள-முஸ்லீம் மத்தியிலிருந்த முற்போக்கான தரப்புகளை நோக்கி நேசக்கரம் நீட்ட வில்லையென்பது இருந்துவந்துள்ளது. இந்த இரு பலவீனங்களையே இப்போது எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழரசுக் கட்சிக் காலத்திலிருந்து (தமிழ்க் காங்கிரஸ் காலத்திலிருந்து என்றும் கூடச் சொல்ல முடியும்) தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக் காலம் வரை தமிழ்த் தேசியவாத அரசியற் தரப்பு சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட அத்தனை இணக்கப்பாடுகளும் தன்னலம் கருதிய அரசியற் சந்தர்ப்பவாதக் கூட்டே தவிர அவை விளிம்புநிலைத் தமிழ் மக்களின் நலன்கள் சார்ந்ததல்ல.

1965 இல் ஐதேக+தமிழரசுக் கட்சி+தமிழ்க் காங்கிரஸ் இணைந்த கூட்டாட்சி – தமிழர்கள் (தமிழர் விடுதலைக் கூட்டணி) 1982 ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரித்தமை-1987 இல் இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அப்போதைய பிரதமர்/ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் சேர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர்த்தமை-2005இல் தமிழ் மக்கள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரித்தமை-2010 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) சரத் பொன்சேகாவை ஆதரித்தமை-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன+பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைந்த (2015-2019) ‘நல்லாட்சி’ க்குத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முண்டு கொடுத்தமை-2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவைத் தமிழர்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஆதரித்தமை, இவை எல்லாமே சந்தர்ப்பவாத அரசியல் கூட்டாகவே-வியாபாரமாகவே-அமைந்தன.

 

இவை எல்லாமே தமிழ்மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது. தலைவர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டும் (SO CALLED TAMIL LEADERS) பதவிகளையும்-விளம்பரங்களையும்-புகழ் மாலைகளையும்-வாழ்க்கை வசதிகளையும் பெற்றுக் கொடுத்தது. வாய்ச்சொல் வீரர்களான தமிழ்த் தலைவர்களால் (சில தனி நபர்கள் புறநடையாக இருக்கக்கூடும்) தமிழ் மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளனர்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிச் சூழலிலும் தமிழ்த் தேசியவாத அரசியல் தரப்புகள் சந்தர்ப்பவாத-சுயலாப அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனவே தவிர, தமிழ் மக்களின் நலன் பேணுவதாயில்லை. இதைத்தான் எரிக்சொல்ஹெய்ம் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ணமுடியாத நிலைமைதான் தமிழ் மக்களினுடையதாகும். இன்றைய சூழ்நிலையில்

எரிக்சொல்ஹெய்மின் ஆலோசனை காலம் கடந்தது மட்டுமல்ல நடைமுறைச் சாத்தியமற்றதொன்றாகுமளவுக்குத் (போலித்) தமிழ்த் தேசியப் போர்வையில் சுயலாப அரசியல் நோய் முற்றிப்போயுள்ளது. இன்றைய களநிலையில் ஒரே ஒரு மாற்று வழிதான் இலங்கைத் தமிழர்களுக்கு-வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு உண்டு.

அது என்னவெனில், திருத்தவே முடியாத-காலாவதியாகி விட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளை முற்றாகப் புறமொதுக்கிவிட்டு, முகவர் அரசியல் நடாத்தாத – 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் முழுமையான முறையான அமுலாக்கலை உளப்பூர்வமாக ஏற்றுச் செயற்படக்கூடிய-இந்தியாவை அனுசரித்துப் போகக் கூடிய அரசியற் சக்திகளை அடையாளம் கண்டு அவற்றின் பின்னே தமிழர்கள் அரசியல் ரீதியாக அணிதிரள்வது ஆகும்.

இது விரைவாக நடைபெறவில்லையாயின் தமிழர்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாமல்தான் போகும்….

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.