சங்கமம்

அறிவும் ஞானமும்…

பகவான் ராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றிய ஐயம் இருந்தது. அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது? என்று குருவிடம் கேட்டனர். அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாள்கள்பாடம் எடுத்தும் அவர்கள் மூவருக்கும் அது முழுவதுமாக விளங்கவில்லை. இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை உணர முடியவில்லை. பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களையும் அழைத்து, “இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார்.

அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து, “நான்போய் வந்த அறையினுள் மூன்று டம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு டம்ளர் பாலை பருகிவிட்டு வா” என்றார். அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று டம்ளர்களில் பால் இருந்தது. தங்க டம்ளரில் இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான்.

அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் டம்ளரில் பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான். ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட வெள்ளி தம்ளரில் இருந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான்.

மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க, வெள்ளி டம்ளர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. எனக்கு வெண்கல டம்ளர் பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு இளப்பமானவனா? எந்தவிதத்தில் நான் தாழ்ந்தவனாகி விட்டேன்?’ என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின. ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்றதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்துவிட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் சுரத்தே இல்லை! பகவான் ராமகிருஷ்ணர் மூவரையும் பார்த்து, “பாலைக் குடித்தீர்களா” என்றார். முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன், “தங்கத் டம்ளரில் பால் குடித்தேன். நான் மிகவும் கொடுத்து வைத்தவன், குருவே!” என்றான்.

இரண்டாவது மாணவன், “எனக்கு தங்கத் டம்ளரில் பால் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் வெள்ளி டம்ளரிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது, குருஜி” என்றான். மூன்றாவது மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. அதனூடேயே அவன், மூன்று பேர்களில் மிகவும் துரதிர்ஷ்டக்காரன் நானே குருஜி. எனக்கு வெண்கலத் டம்ளரில்தான் பால் கிடைத்தது” என்றான். பகவான் ராமகிருஷ்ணர் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டபின் பேச ஆரம்பித்தார். மாணவர்களே! தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று டம்ளர்களிலும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும்பால்தான் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்த வேறுபாடும் இல்லை.

பாலை பருகப் போகிற மூவருக்குமே அதிலிருந்து ஒரே மாதிரியான சுவையும், சத்துவ குணமும்தான் கிடைக்கப் போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு. பால் ஊற்றி வைத்திருக்கும் டம்ளர்களின் மதிப்பைப் பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம், சுவை, ருசி ஆகிய அனைத்தும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை. ஆகவே நீங்கள் பண்டத்தை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள்! பாத்திரத்தைப் பார்த்து சந்தோஷப்படுவது அறிவு.

அதில் உள்ள பண்டத்தைப் பார்த்து இன்புறுவது ஞானம். ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள். பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண்சட்டியில் ஊற்றிக்கொடுத்தால் கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள்” நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் மூவருமே ஒரேமாதிரியான மனோநிலையை எட்டியிருப்பீர்கள்!” பகவான் ராமகிருஷ்ணர் சொல்லி முடித்ததும் மூன்று பேர்களுக்கும் அறிவிற்கும், ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கியது…

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.