பலதும் பத்தும்

மகனுக்காக ஊர்மக்களின் காலில் விழுந்த முதியவர் மரணம்… அசுரன் பட பாணியில் சோக சம்பவம்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பிக்சன் கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சுகண்ணு. இவருக்கு கலைச்செல்வன் மற்றும் கலையரசன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, அஞ்சுகண்ணுவின் மகன் கலையரசன் அலகு குத்தி காவடி எடுத்து உள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோகுல் என்பவர் மது அருந்திவிட்டு கலையரசனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த இரண்டு தினங்களுக்கு பிறகு கோகுல் என்பவர் பிச்சன் கோட்டகம் கிராம பஞ்சாயத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிராம பஞ்சாயத்தில் விசாரணை என்பது நடைபெற்று உள்ளது. அங்கு நடைபெற்ற கிராம பஞ்சாயத்தில் அஞ்சுகண்ணுவின் மகன்கள் தவறு செய்ததாகவும் அவர்கள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டவேண்டும் என்றும் அப்படி கட்டவில்லை என்றால் ஊர் பொதுமக்கள் காலில் விழ வேண்டும் என்றும் அங்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அஞ்சுகண்ணு தன்னால் அந்த பணத்தை கட்ட முடியாது என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் காலில் நான் விழுகிறேன் என கூறியுள்ளார். இதனையடுத்து அஞ்சுகண்ணு ஊர்மக்களின் காலில் விழுந்ததையடுத்து அவர் மயக்கமடைந்து இருக்கிறார். உடனடியாக அவரை அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து சம்பவம் குறித்து அஞ்சுகண்ணுவின் மகன்கள் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனை அடுத்து அஞ்சுகண்ணுவின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காலை முதல் தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் உறவினர்கள் ஈடுபட்டு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனை அடுத்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் இச்சம்பவத்தில் தொடர்புடைய பிச்சன் கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்த நாகூர் மெய்தான், வேத மணி, பிரவின், திவராஜன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். 304 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை என்பது நடைபெற்று வருகிறது.

Loading