சங்கமம்

கரடிச் சந்தை என்றால் என்ன.. அதில் முதலீடு செய்வது எப்படி?

பங்குச்சந்தை ஏற்றத்தை காளையுடனும், சரிவை கரடியுடனும் ஒப்பிட்டு பேசுவர். காளையும் கரடியும் தாக்கிக்கொள்ளும் முறையை வைத்து இவ்வாறு கூறும் வழக்கம் வந்ததாக சொல்லப்படுகிறது. காளை ஒரு விலங்கை கொம்புகளை கொடுத்து தூக்கி வீசும். கரடியோ முன் கால்களால் பிடித்து கீழே அமுக்கும். இதனை வைத்துத் தான் மேலேறும் சந்தையை காளைச் சந்தை என்றும், சரிவில் இருக்கும் சந்தையை கரடிச் சந்தை என்றும் கூறுகின்றனர்.

பங்குசந்தை அதன் உச்சநிலையிலிருந்து 20 சதவீத சரிவை சந்தித்தால் கரடி சந்தை என்று அழைப்பார்கள். பொதுவாக பொருளாதார மந்தநிலைக்கு முன்பாக இத்தகைய சரிவு இருக்கும். இந்திய பங்குசந்தைகள் கரடியின் எல்லையை நெருங்கி வருகிறது. அமெரிக்காவில் 500 பெரிய நிறுவனப் பங்குகளின் செயல்பாடுகளை குறிக்கும் எஸ்&பி 500 குறியீடு ஜன., 3 தொடங்கி கடந்த 160 நாட்களில் 20 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது. அதாவது கரடிச் சந்தைக்குள் நுழைந்துள்ளது.

பணவீக்கம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு அதனை சமாளிக்க வட்டி விகிதம் உயர்த்தப்படுவது ஆகியவை சந்தையை பாதித்துள்ளன. டாலரில் வர்த்தகம் நடக்கும் நிலையில், டாலருக்காக அதிக ரூபாய் செலவிட வேண்டி இருப்பதும் இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும்.

கரடிச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் சந்தை உத்திகள் பற்றி எழுதி வரும் ஜெப் சோமர் இது பற்றி கூறியதாவது: குழப்பமான சந்தை சூழலில் முதலீடு செய்ய துணிவும், திட்டமிடலும் தேவை. அதைக் கையாள முடிந்தால், வீழ்ந்து வரும் சந்தை நீண்ட கால முதலீடு நோக்கில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. எனக்கு செலவுகள் இருக்கும் போது, பங்குசந்தையில் பணத்தை போட மாட்டேன். தேவைகள் போக இருக்கும் பணத்தை முதலீடு செய்து குறுகிய நஷ்டம் ஏற்பட்டாலும் தாங்கி நிற்க வேண்டும். அதற்கு பரந்துபட்ட, குறைந்த செலவு விகிதம் கொண்ட இன்டெக்ஸ் பண்ட்டில் முதலீடு செய்வது சிறந்த வழி. (இன்டெக்ஸ் பண்ட் என்பது, பங்குச்சந்தை குறியீடுகளில் உள்ள நிறுவனங்களில் அது இருக்கும் வெயிட்டேஜ்க்கு ஏற்ப கணினியே நிதியை பிரித்து முதலீடு செய்வதாகும்).

 

வரலாறு சொல்லும் பாடம்

இந்த முறையிலான முதலீடு மூலம் தவறான பங்குகளை தவறான நேரத்தில் வைத்திருக்கும் ரிஸ்க் நீக்கப்படுகிறது. கடந்த காலங்களில் பங்குசந்தை சரிவை சந்தித்ததும், அதிலிருந்து மீண்டு வந்துள்ளதையும் வரலாறு காட்டுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு பங்குசந்தையில் நீங்கள் பணத்தை போட்டிருந்தால் 6% மட்டுமே குறைந்திருக்கும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர்களுக்கு நஷ்டமே இருக்காது. முதல் முறை முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டம் இருக்கும். அது வேதனையளிக்கும். அதனால்தான் உயர்தரப் பத்திரங்கள் அல்லது பிற பாதுகாப்பான முதலீடுகளையும் வைத்திருப்பது முக்கியம். மேலும் அவசரத் தேவைகளுக்காக பணத்தை ஒதுக்கியிருக்க வேண்டும்.

குறிப்பு: நிபுணர்கள் வழங்கும் பரிந்துரைகள், கருத்துக்கள் அவர்களுடைய சொந்த கருத்து. அவை தினமலரின் கருத்துக்களைப் பிரதிபலிக்காது. சொந்தமாக யோசித்து முதலீடுகளை மேற்கொள்ளவும்.

Loading