Featureகட்டுரைகள்

இலங்கையின் இன்றைய நிலையும் அபிப்பராயங்களும்!…. ஏலையா க.முருகதாசன்.

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள அன்றாட வாழ்வுக்கான பொருட்களின் தட்டுப்பாடுகளும் விலைவாசி ஏற்றங்களும் இதுவரையில் இலங்கையில் ஏற்பட்டிராத ஒன்று என்று கணிப்பாளர்கள் சொல்லி வருகிறார்கள்.மக்கள் பெரும் கஸ்டத்துக்குள்ளாகியும் வருகிறார்கள்.

இலங்கையின் இன்றைய நிலவரத்தை, ஆட்சியாளர்களின் தவறு என எப்போது இத்தகு நிலை ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் அப்பொழுது சாடுவோம் என்பது போல எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஓவ்வொருவரும் ஒவ்வொரு அபிப்பராயங்களைச் சொல்லி வருவதுடன் காணொளி வாயிலாகவும் இலங்கை அரசுக்கெதிராக கண்டனங்களை விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர்.

இதில் தமிழக ஊடகங்கள், காணொளியாளர்கள் ஒருபடி மேலே போய் இலங்கையில் பஞ்சம் பசி பட்டினி தலைவிரித்தாடுவது போல விஸ்வரூப வெளிச்சத்தை காட்டி வருகின்றனர்.

அவர்களுடைய இச்செய்கையானது சந்தர்ப்பம் பார்த்து இலங்கையை அவமானப்படுத்துவது போலவும் தோன்றுகின்றது.இச்செயலுக்குப் பின்னால் இந்திய புலனாய்வுப் பிரிவினரின் பங்கும் இருக்கலாம் என்ற சந்தேகத்தை நிராகரிக்க முடியாது.

இலங்கை பொருளாதார வளர்குறை கொண்ட ஒரு நாடு.இயல்பான சூழ்நிலையில் ஒரு நாடு துரிதமாக பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவதற்கும் இடர்ப்பபாடுகளாக அல்லது தடைகளாக நிற்பவை, மக்களின் அன்றாட தேவைகளான உணவு முதல் கொண்டு பக்கதேவைகளாக கருதப்படுகின்ற அனைத்துக்கும் உள்நாட்டு உற்பத்திகள் மூலம் தன்னிறைவு அடையாத பட்சத்தில்,உலக சந்தையில் ஏற்படும் விலையேற்றம் பற்றாக்குறை போன்றவற்றால் இலங்கை பாதிப்படையும் என்பது தவிர்க்க முடியாதது.

இலங்கை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான விவசாய உற்பத்திகள், கால்நடைகள் மூலம் பெறப்படும் பயன்கள், தொழிற்சாலைகள் மூலம் பெறப்படும் உற்பத்திகள் போன்றவை தேவைக்கு அதிகமாகவே இருத்தல் வேண்டும்.

இலங்கை மக்களின் தேவைக்கான பொருட்களில் எண்பது வீதம் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை ஏன் இலங்கையில் உற்பத்தியாக்க முடியாது என்ற கேள்வி எழுகையில், இலங்கையில் அதற்கான மூலப் பொருட்கள் இல்லை என்பது போலவும் இறக்குமதி செய்வதற்கு ஏற்படும் செலவைவிட உள்நாட்டு உற்பத்திகளுக்கு ஏற்படும் செலவு அதிகமானது என்ற அறிக்கைகளும் வந்து கொண்டுதானிருக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் இராணுவத்திற்கும் இராணுவத் தளபாடங்களுக்கும் அதிகளவு நிதியை ஒதுக்கும் நிலையைத் தோற்றுவித்துவிட்டது.அது ஒவ்வொரு வரவு செலவு வாசிப்பின் போது நிரப்ப முடியாத செலவாகவே இருக்கின்றது.இச்செலவானது முதலீடு செய்து வருவாயை ஈட்டும் செலவுமாகாது.

எப்பொழுதுமே நடைமுறை அரசைக் குறை சொல்லும் அரசியல் தன்மை இலங்கையில் காலம்காலமாக இருந்து வருகின்றது.குறிப்பாக ஒவ்வொரு சமகால அரசாங்கமும் கடந்தகால அரசாங்கத்தை எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் பழக்கம் இருந்து கொண்டே வருகின்றது.பொறுப்பெடுக்கும் அரசுகள் முந்தைய அரசு திறைசேரியை காலி செய்துவிட்டுப் போய்விட்டது என்று சொல்வது இலங்கையில் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.

ஐந்து வருடம் ஆட்சி செய்யும் அரசொன்றினால் முழு அபிவிருத்தியையும் செய்துவிட முடியாது.தொடர் தொடராக ஆட்சிகளை நடத்துகிற அந்தந்த சமகால அரசுகளின் தேசத்தை நிர்மானிக்கும் தூர நோக்குத் திட்டத்திற்கமைய அபிவிருத்திகளையும் மக்களின் அன்றாட வாழ்க்கை சம்பந்தப்பட்ட தேவைகளையும்,அவர்களின் நலன் நோக்கிய திட்டங்களையும் உருவாக்கி ஒரு அரசு மாறி இன்னொரு அரசுக்கு கையளிக்கும் போது முன்பு ஆட்சியிலிருந்த அரசுகளின் திட்டங்களில் மக்களின் நலனை மட்டுமே நோக்கி இன்னும் சிறப்பான திட்டங்களை முந்தைய அரசின் திட்டங்களுடன் இணைத்துச் செய்தல் வேண்டும்.

ஆனால் இலங்கையில் தேசிய நலன்களையோ,மக்களின் தனிமனித நலன்களையோ அபிவிருத்திகளையோ கருத்தில் கொள்ளாமல் யார் ஆட்சியைக் கைப்பற்றவது என்ற குறுகிய மனப் போக்குடன் அரசியல்வாதிகள் நடந்து கொண்டு வருவது இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இடம்பெறும் அரசியல் போக்காகும்.

ஒரு நாட்டினுடைய உள்நாட்டு உற்பத்திகளிலிருந்து கிடைக்கும் வருவாய் ஆகக்குறைந்தது ஐம்பது வீதமாவது இருத்தல் வேண்டும்.மிகுதி ஐம்பது வீதத்தை இறக்குமதி மூலம் நிவர்த்தி செய்திடினும் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போல ஒரு இக்கட்டான நிலைமை தோன்றுமாயின் இலங்கையிலிருந்து பெறப்படும் உள்நாட்டு உற்பத்தி வருவாயின் மூலம் மக்களின் அன்றாடன வாழ்விற்கான அடிப்படைத் தேவைகளை கட்டுப்பாட்டு நடைமுறையில் பூர்த்தி செய்ய முடியும்.

ஒரு நாட்டினுடைய காத்திரமான தன்மை அந்நாட்டினுடைய விவசாயத்திலேதான் தங்கி இருக்கின்றது.உணவில் தன்னிறவு என்பது மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அபரிதாமான உணவு உற்பத்தி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுமாகும்.

அபரிதமான உணவு உற்பத்தி ஏன் தேவையெனில் இயற்கைப் பேரழிவுகள்; ஏற்படும் போதும், பயிரழிவுகள் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு ஏற்படின் அதனை நிவர்த்தி செய்வதற்கே அபரிதமான உணவு உற்பத்தி தேவையென்பதாகும்.

இலங்கை முற்றிலும் ஒரு விவசாய நாடு.ஆங்காங்கே தொழிற்சாலைகள் இருப்பினும் அவற்றின் மூலம் வருமானம் கிடைப்பினும் அதனை மட்டுமே நம்பியிருந்தல் என்பது இலங்கைக்கு உகந்ததல்ல.

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களிலேதான் இலங்கை தங்கியிருக்குமெனில்,இறக்குமதி தொடர்பான வணிக நிறுவனங்கள் தேசிய நலனில் அக்கறை கொண்டு தமது வணிகத்தைச் செய்யாத பட்சத்தில், இலங்கையில் காலத்துக்குக் காலம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உணவுப் பற்றாக்குறையினை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி அதிக இலாபம் பெறும் திட்டத்தினை அவர்கள் நடைமுறைப்படுத்துவார்கள்.

இறக்குமதிக்கான பொருட்களைக் கொடுக்கும் சந்தைப்படுத்தல் முகாமையாளர்கள் இலங்கையின் ஏற்பட்டிருக்கும் உணவுப் பற்றாக்குறையை சாதகமாக்கி இயல்பான விலைக்கப்பால் அதிக விலைக்கு விற்கும் போக்கினைக் கடைப் பிடிப்பபார்கள் என்பதையும் நிராகரித்துவிட முடியாது.

இதில் ஒரு முக்கி விடயம் எதுவென்றால் இலங்கையில் இறக்குமதியை மேற்கொள்ளும் ஒவ்வொரு வணிக நிறுவனமும் தேசிய உணர்வுடன் ஊழலற்ற நேர்மையைக் கடைப் பிடித்தாலொழிய விலையேற்றங்களைத் தடுக்கவே முடியாது.

எதிர்க்கட்சியாக இருந்தாலென்ன ஊடகங்களாக இருந்தாலென்ன இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள விலையேற்றங்களுக்கு இலங்கை நடைமுறை அரசுதான் முழுப் பொறுப்பும் என்ற சமன்நிலையற்ற தராசு பிடித்தலைக் கைவிட்டு,சர்வதேச வணிக போக்குந்தான் இந்த விலையேற்றங்களுக்கு காரணம் என்பதை மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

அதே வேளை ஊடகங்கள் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் மட்டுமே நின்றுவிடாது அரசு இவ்விடரிலிருந்து எவ்வாறு மீள வேண்டும் என்பதற்கான பொருளாதார நிதி நிலைமை போன்றவற்றின் சமகால சூழ்நிலைக்கு என்ன காரணம் என்பதை தூய்மையான எண்ணத்துடன் தமது ஊடகங்களில் வெளிப்படுத்துதல் வேண்டும்.

இன்றைய இலங்கையின் சூழ்நிலையை தமக்க சாதகமாக்கி நடைமுறை அரசை இல்லாதொழிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மட்டுந்தான் எதிர்க்கட்சிகளின் கடமையல்ல.அரசுக்கு ஆலோசனை சொல்வதும் அவர்களின் கடமையேயாகும்.

ஒரு நல்ல அரசானால் நாடாளுமன்றத்திற்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டுமே ஆலோசனை நடத்தாமல் சிங்கள தமிழ் ஆங்கில ஊடகவியலாளர்கள் அது போல சிங்கள தமிழ் ஆங்கில பத்திரிகை ஆசிரியர்கள், விவசாய ,பொருளாதார நிதிசார் கல்வியலாளர்கள் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் பல்துறை அறிஞர்கள் நுட்பவியலாளர்கள் என அனைவரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் வேண்டும்.

மேற்கூறிய அறிஞர்கள் குழு, அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமனாகவல்ல அதற்கு மேலானதாக இருக்க வேண்டும்.

இலங்கைக்கு இது இன்றைய சூழலில் மிக மிக அவசியமானது. சதா அரசினை விமர்சிப்பது மட்டுமல்ல ஒரு அரசிற்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் போது அதற்கு உறுதுணையாகவும் இருக்க வேண்டியது ஒவ்வொரு இலங்கையனினதும் ஊடகங்களினதும்,அறிவுஜீவிகளினதும் கடமையுமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.