வாக்குமூலம்!…..08…… . தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
அண்மையில் (26.01.2022–30.01.2022) வடமாகாணத்தில் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை – அதன் முழுமையான அமுலாக்கலை நிராகரித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) கட்சி நடாத்திய வாகனப் பவனி மற்றும் பேரணி குறித்துக் கருத்துரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள்,
“அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோர் தமிழ் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும். தமது சுயலாப அரசியலுக்காகத் தமிழ் மக்களை நட்டாற்றில் விடும் வகையில் அவர்கள் செயற்படக் கூடாது”
“பதின்மூன்றாவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது”
“இதைத் தீர்வுக்கான முதற்படியாக வைத்துக்கொண்டு நாங்கள் முன்னோக்கி நகர்ந்து வருகின்றோம்”
“இப்படியான செயற்பாடு இருப்பதையும் இழப்பதற்குச் சமமானது. அதனால்தான் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கோரி வருகின்றோம்”
என்றெல்லாம் கூறியுள்ளார். (காலைக்கதிர் 09.02.2022 காலைப் பதிப்பு)
ஒரு காலகட்டத்தில் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தம் காலாவதியாகிவிட்டது என்று கூறிய இரா. சம்பந்தன் அவர்களுக்கு இப்போதாவது (அரசியல்) ‘ஞானம்’ பிறந்திருக்கிறது என்பது ஒருபுறமிருக்க, இரா. சம்பந்தன் அவர்களிடம் சில கேள்விகளையும் வேண்டுகோள்களையும் இப்பத்தி முன்வைக்கிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் திரு.அ. அமிர்தலிங்கத்தின் கொலை மரணத்தின் பின்பு அமரர் மு. சிவசிதம்பரம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் தாங்கள் (இரா .சம்பந்தன்) செயலாளர் நாயகமாகவும் – சிவசிதம்பரம் அவர்களின் மறைவின் பின்னர் திரு.வீ. ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் தாங்கள் (இரா .சம்பந்தன்) செயலாளர் நாயகமாகவும் இருந்த காலகட்டங்களில் – குறைந்தபட்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்த ‘நல்லாட்சி’க் காலத்திலாவது (2015-2019) பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் யாவை?
அடுத்த கேள்வி என்னவெனில், இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் அதன் வாயிலாக ஏற்படுத்தப்பெற்ற பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தையும் அதன் கீழமைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த அதிகாரப் பகிர்வு அலகையும் சீர்குலைத்த தமிழீழ விடுதலைப் புலிகளை 2001 இல் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுப் புலிகள் உருவாக்கிய ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ க்குத் தலைமை ஏற்கத் தாங்கள் (இரா. சம்பந்தன்) முன்வந்தது ஏன்?
மேலும், இப்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்துக்கு எதிரான செயற்பாடுகளைச் சுயலாப அரசியலுக்கானவை என்றும் படுமுட்டாள்தனம் என்றும் கூறும் தாங்கள் ( இரா. சம்பந்தன்) அதே அடிப்படையில் அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்த அமுலாக்கலைச் சீர்குலைத்ததும் அவர்களின் ( பிரபாகரனின்) சுயலாபம் கருதியே என்பதையும் படுமுட்டாள் தனமானது என்பதையும் ஒப்புக் கொள்கிறீர்களா?
இரா.சம்பந்தன் அவர்களே!
உங்கள் தற்காலக் கூற்றுகளுக்குத் தாங்கள் விசுவாசமுள்ளவராக இருந்தால் தாங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் – அதன் வாயிலாகக் கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தையும் – அதன் கீழமைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த அதிகாரப்பகிர்வு அலகைச் சீர்குலைத்தமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களுக்கு இழைத்த பாரிய வரலாற்றுத் தவறு என்பதைப் பகிரங்கமாகவும் நேர்மையாகவும் அரசியல் பொதுவெளியில் முதலில் தாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
அடுத்த கட்டமாக, அகில இலங்கை தமிழர் மகா சபையின் ஏற்பாட்டில் 09.04.2021 அன்று அகில இலங்கை தமிழர் மகாசபை, (இந்நாள்) தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி (ரி.எம்.வி.பி.), தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் கொழும்பில் கூடி உருவாக்கியுள்ள அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்துடன் (MOVEMENT FOR DEVOLUTION OF POWER) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கட்சி அரசியலுக்கு மற்றும் தேர்தல் அரசியலுக்கு அப்பால் நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில் அந்தரங்க சுத்தியோடு இணைந்து மேற்கூறப்பட்ட அதிகாரப்பகிர்வுக்கான இயக்கத்தைப் பலம்வாய்ந்த வெகுஜன இயக்கமாகக் கட்டியெழுப்பத் தாங்கள் துணிய வேண்டும்.
இவ்வாறு நீங்கள் செயற்பட முன்வராவிட்டால், தங்களது தற்போதைய கூற்றுகளும் சுயலாப அரசியலுக்கானவையே என்பதில் சந்தேகமேயில்லை. மட்டுமல்ல கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) தங்களது தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரே குட்டையில் (சுயலாப அரசியலில்) ஊறிய மட்டைகளேயாகும்.