ஞானம் 262 ஆவது இதழ் கட்டுரைகள்!…. முருகபூபதி.
வாசிப்பு அனுபவம்
ஞானம் 262 ஆவது இதழ் கட்டுரைகள்
முருகபூபதி…..
( கடந்த 27 ஆம் திகதி ஞாயிறன்று நடைபெற்ற ஞானம் இதழ் மெய்நிகர் அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆக்கம் )
“ தனியொருவனுக்கு உணவில்லை எனில் உலகையே அழித்துவிடுவோம் “ எனச்சொன்ன மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு காலத்தில், ஞானம் 262 ஆவது இதழின் ஆசிரியத் தலையங்கம் வெளிவந்துள்ளது.
கலை, இலக்கியவாதிகளும் இதழியலாளர்களும், ஊடகவியலாளர்களும் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நிற்கவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தும் வகையில் – மக்களுக்காக பேசுவதும் மக்களை பேசவைப்பதுமே ஊடகங்களின் பிரதான கடமை என்று அழுத்திக்கூறும் வகையில் 262 ஆவது இதழில் ஆசிரிய தலையங்கத்தை எழுதியிருக்கிறார் ஆசிரியர் ஞானசேகரன்.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கை மக்கள் இனி தாயகம் வரும்போது, சொக்கலேட் – இனிப்பு வகைகளை உடுபுடவைகளை உறவினர்களுக்கு வாங்கி வரவேண்டாம்.
முடிந்தால் எரிபொருளும் அத்தியாவசிய உணவுப்பொருட்களும், மருந்துவகைகளையும், அச்சிடும் காகிதாதிகளையும் எடுத்துவாருங்கள் என்று அறிவுறுத்துவதுபோன்று ஆசிரியத்தலையங்கம் உறைபொருளோடும் மறைபொருளோடும் எழுதப்பட்டிருப்பதாக உணர்கின்றோம்.
விமானத்தில் எரிபொருளை எடுத்து வரமுடியாது. ஆனால், இதர அத்தியாவசியப்பொருட்களை எடுத்து வரலாம்.
நான் வசிக்கும் அவுஸ்திரேலியாக்கண்டத்தில் விளையும் அப்பிள் பழத்திற்கும் இலங்கையில் இறக்குமதிக்கு தடை என அறிந்தேன்.
எம்மத்தியில் ஒரு இயக்கமாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் மகத்தான மனிதர் அமுதவிழா நாயகர் இரா. அ. இராமன் இவ்விதழில் அட்டைப்பட அதிதியாக பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவரை என்றோ ஞானம் இவ்வாறு கௌரவித்திருக்கவேண்டும். ஆனால், காலம் தாழ்ந்திருக்கிறது. இராமன் பற்றிய பதிவின் இரண்டாம் பந்தியில் அவர் தோற்றத்தில் எப்படி இருப்பார்..? என்பதை இலக்கிய நயத்துடன், படைப்பாளி ஒரு கதா மாந்தரின் உருவத் தோற்றத்தை சித்திரிக்கும் பாங்கில் ஆசிரியர் ஞானசேகரன் எழுதியிருக்கிறார்.
அந்தப்பகுதியை வாசித்தபோது அன்பர் இராமனே நேரில் தோன்றி தான் அணிந்திருக்கும் கண்ணாடிக்கூடாக மந்திரப்புன்னகையை சிந்துவது போன்றிருந்தது எனக்கு.
ஞானம் ஆசிரியர், எமது சக இலக்கிய இயக்கப்பயணியைப்பற்றிய முழுமையான பதிவை தந்திருக்கிறார்.
2002 ஆம் ஆண்டு எனக்கு அவுஸ்திரேலிய தினத்தின்போது சிறந்த பிரஜைக்கான விருது கிடைத்த பின்னர், இலங்கை சென்ற சமயம் கண்டி சிட்டி மிஷன் மண்டபத்தில் அன்பர் இராமனும் ஞானம் ஆசிரியரும் இணைந்து நடத்திய பாராட்டு நிகழ்வை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு படுத்துகின்றேன்.
இராமன் முழுமையான இலக்கியவாதியாகவே வாழ்ந்து, நடமாடிக்கொண்டிருக்கும் இயக்கம். அவரை உரியமுறையில் ஞானம் இதழ் கௌரவித்துப்போற்றியிருக்கிறது. பல செய்திகளை நாம் இராமன் பற்றி அறிந்துகொள்கின்றோம்.
அனைத்துலக பெண்கள் தினம் வரும் இம்மாதத்தில் கீத்தா பரமானந்தன், மகளிர் தினமும் மனங்கொண்ட சிந்தனையும் என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையும் பல புதிய – பழைய செய்திகளை கூறுகின்றது.
பெண்ணுக்குத் தேவைப்பட்ட பொருளாதார பலம் குறித்தும் கீத்தா பேசுகிறார்.
ஒரு தேசத்தின் முன்னேற்றமும் வளர்ச்சியும் அந்த நாட்டில் வாழும் பெண்ணின் வாழ்க்கைத்தரத்தினை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.
“ பெண் எத்தனை பெரிய பொறுப்பையோ, பதவியையோ திறம்பட நிர்வகித்தபோதும் அவளது செயல் திறனைப்பாராட்டாது, ஆடை அணிகளை விமர்சிப்பதும் அவளது தனிப்பட்ட செயலை விமர்சித்தும் அவளை மட்டம் தட்டுவதும் பத்திரிகையானாலும் தனிமனிதரானாலும் இதுவே வழக்கமாகியுள்ளது “ எனவும் கீத்தா பரமானந்தன் அறச்சீற்றத்துடன் எழுதியிருக்கிறார்.
ஒஸ்கார் விருது விழாவிலே நடிகை Natali Portman தனது ஆடையிலே ஒஸ்கார் விருதுக்கு தெரிவாகாதவர்களின் பெயர்களை எழுதி அணிந்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அந்த நடிகை ஒரு சுலோக அட்டையில் அவ்வாறு எழுதிச்செல்லாமல், விருது விழாவுக்காக அணிந்த ஆடையிலேய பெயர்களை பதிந்து சென்றிருக்கிறார் என்ற செய்தியையும் கூறி, பெண்கள் அணியும் ஆடைகளின் மூலம் பொதுமக்களின் கவனத்தையும் ஈர்க்கலாம் என்ற கருத்தியலையும் விதைக்க முடிகிறது என்கிறார்.
தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களை பார்த்தால், பெண்ணுக்கு யார் எதிரி என்பது புரிந்துவிடும். தொலைக்காட்சி ஊடகங்களும் பெண்ணை முன்னிலைப்படுத்தித்தான் இவ்வாறு தனது பார்வையாளர் எண்ணிக்கையை பெருக்குகிறது. அதுமட்டுமன்றி, பெண் தலைமைத்துவத்தின் கீழே பெண்களே வேலை செய்வதற்கு அதிகம் பிரியம் காண்பிக்காத செய்திகள் பக்கமும் கீத்தா பரமானந்தன் எதிர்காலத்தில் தனது கவனத்தை செலுத்தி தரவுகளை திரட்டவேண்டும் என்பதும் எனது வேண்டுகோளாக அமைகிறது.
தகைமை சார் பேராசிரியர் செ. யோகராசா, எப்பொழுதும் சான்றாதாரங்களுடன் தமிழ்ப்பணி, தமிழ் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பெரியோர்கள் பற்றி எழுதிவருபவர்.
அதற்கான தேடலில் யோகராசா செலவிடும் நேரம் பெறுமதியானது. அறிஞர் கனக சுந்தரம்பிள்ளை மறைவு நூற்றாண்டை முன்னிட்டு இவ்விதழில் அவர் எழுதியிருக்கும் ஆக்கம் அந்தப்பெரியாரின் தடங்களை விளக்கியிருக்கிறது. யோகராசாவின் கடின உழைப்பினை இந்த ஆக்கத்தில் காண்கின்றோம்.
தமிழ் இலக்கிய வரலாற்று உருவாக்கத்தில், பதிப்பு முயற்சிகளில், பதிப்பு முயற்சியுடன் தொடர்புபட்ட கட்டுரைகள் எழுதுவதில், பிறரது பதிப்பு முயற்சிகளுக்கு உதவுவதில், பிறரது பதிப்பு முயற்சிகளை முழுமையாக்குவதில் , உரையாசிரியராக , தமிழ் அகராதி உதவிப்பதிப்பாசிரியராக, கண்டன முயற்சியில் ஈடுபட்டவராக , மொழிபெயர்ப்பாசிரியராக, என்ற ரீதியில் பதினொறு பிரிவுகளில் பெரியார் அறிஞர் கனகசுந்தரம் பிள்ளை அவர்கள் மேற்கொண்ட அருந்தமிழ்ப்பணி பற்றி யோகராசா விரிவாக எழுதியிருக்கிறார்.
அந்த அறிஞர் 1863 இல் பிறந்து 1922 இல் மறைந்திருக்கிறார். அவர் வாழ்ந்த காலம் 59 ஆண்டுகள்தான். இந்த காலப்பகுதியில் அவரது ஆரம்ப காலத்தை மதிப்பிட்டால், தமிழ் ஆராய்ச்சிப்பணியில் அவர் செலவிட்ட குறுகிய காலப்பகுதியை கணித்துவிட முடியும். அக்காலத்தில் எத்தகைய ஆளுமைகள் எங்கள் நாட்டில்
வாழ்ந்திருக்கிறார்கள் என்ற அதிசயத்தையும் இக்கட்டுரையின் வாயிலாக அறிகின்றோம்.
தமிழக அறிஞர் மு. வரதராசன் அவர்களாலும் நன்கு அறியப்பட்டவராக இந்தப்பெரியார் விளங்கியிருக்கிறார் என்ற செய்தியையும் இறுதியில் யோகராசா கூறிச்செல்கிறார்.
இலக்கிய மாணவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் ஆக்கம் இது.
பேராசிரியர் சபா ஜெயராசா எழுதியிருக்கும் ஒட்டு நிரவல் இலக்கியம் என்ற ஆக்கத்தை அவர் வழக்கம்போன்று வாசகருக்கு மிரட்சியை தரும் வகையில் எழுதியிருப்பதாகவே எனது மனதிற்கு படுகிறது.
அவர் சொல்லியிருக்கும் விடயம் கலை, இலக்கியம், ஓவியம், நவீன ஓவியம், சிற்பம், குறித்தெல்லாம் பேசுகிறது. வாசகரின் சிந்தனையில் ஊடுறுவும் வகையில் இதுபோன்ற ஆக்கங்களை அவர் எளிமைப்படுத்தி எழுதவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். அல்லது, இதுபோன்ற ஆக்கங்களைப்பற்றி பேசுவதற்கு ஞானம் ஆசிரியர் மிகவும் பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்தல் வேண்டும் என்றும் வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.
பாரதியின் சொற்களும் , வசன அமைப்பும் எளிமை போன்று தோற்றமளித்தாலும் அவை செழுமையும் ஆழமும் நிரம்பியவை.
தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல் என்றவர் பாரதியார்.
“ வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார் “ என்ற பாரதியின் கருத்தை தாரக மந்திரமாக கொண்டு வெளியாகும் ஞானம் இதழும் கட்டுரைகளின் தேர்வில் எளிமையையும் கவனித்தல் வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
நண்பர் சபா ஜெயராசா சிறந்த அறிஞர். அவரது ஆக்கங்களை வாசகர்கள் படிக்காமல் கடந்து சென்றுவிடாமல், நின்று படித்து பயனுறவேண்டும் என்பதற்காகவே இந்த வேண்டுகோள். என்னை எவரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.
மட்டக்களப்பு மண்வாசனை இலக்கியங்களை ஏற்கனவே படித்திருக்கின்றோம். இவ்விதழில் செங்கதிரோன்
கோபாலகிருஷ்ணன், மட்டக்களப்பு மாநில மண்வாசனைச்சொல் “ கா “ பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.
இங்கு மாகாணம், மாவட்டம், மாநிலம், பிரதேசம் குறித்த மயக்கம் வாசகருக்கு வரக்கூடும் எனக் கருதுகின்றேன்.
ஈழத்து இலக்கியத்தில் மண்வாசனை – பிரதேச மொழி வழக்கு குறித்து எமது இலக்கிய நண்பர் சி. வன்னியகுலமும் ஒரு ஆய்வு நூலை முன்னர் எழுதியிருக்கிறார்.
இங்கே மட்டக்களப்பு மாநிலம் என்ற தலைப்புடன் இந்த ஆக்கம் வெளிவந்திருக்கிறது.
மட்டக்களப்பிற்கே சொந்தமான “ கா “ என்ற அசைச்சொல் பற்றிய சுவாரசியமான தகவல்களை செங்கதிரோனின் ஆக்கம் பதிவுசெய்துள்ளது.
இந்த ஆக்கத்திற்கு, பண்டிதர் வி. சி. கந்தையா பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய மட்டக்களப்பு தமிழகம் என்ற நூலையும் – செங்கதிரோன் தான் முன்னர் எழுதிய விளைச்சல் நூலையும் உசாத்துணையாக காண்பிக்கின்றார்.
இதில் பண்டிதர் கந்தையாவின் நூலை, பிரான்ஸில் எக்ஸில் பதிப்பகம் மறுபதிப்பு செய்திருப்பதன் மூலம் அதன் தேவையை குறிப்பிட்ட பதிப்பாளர்கள் உணர்ந்திருந்தார்கள்.
எனது வசமும் அந்த புதிய பதிப்புத்தான் இருக்கிறது.
இந்தக் “ கா “ என்ற சொல் மட்டக்களப்பு வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட பண்பாட்டுக்கோலத்தையும் ஏனைய பிரதேசத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
தோளிலே காவிச் செல்வதனால், காவடி எனப்பெயர் வந்ததாக கவிஞர் காசி. ஆனந்தன் பதிவுசெய்துள்ளதாகவும் செங்கதிரோன் எழுதுகிறார்.
அத்துடன், இனிவரும் சந்ததிக்கும் இந்த பிரதேச மொழிவழக்குகளை நாம் காவிச்செல்லவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றார்.
மொழி வழக்குகள் காலத்திற்கு காலம் மாறிவந்துள்ளன.
எமது புகலிடத்தில் ஆங்கில மொழிப்பிரயோகமும் மக்களின் அன்றாட வாழ்வில் மாறிவருவதை நாம் பார்க்கின்றோம்.
உதாரணமாக For Sale என்பதை இலக்கத்தில் 4 என்றும் Sale என்றும் பதிவிட்டு எழுதுகிறார்கள்.
வீடு விற்பனை – கார் விற்பனை விளம்பரங்களில் இதனை எம்மால் இங்கு அவதானிக்க முடிகிறது.
தமிழில் மொழிப்பிரயோகங்கள் இலங்கைக்கும் தமிழகத்திற்குமிடையே பல வழிகளில் வேறுபடுகிறது.
சென்னைக்குச் செல்லும் நாம் அமைந்தகரை எனச்சொல்லாமல், அமிஞ்சிக்கரை எனச் சொன்னால்தான் அங்குள்ள தமிழ் மக்கள் புரிந்துகொள்கிறார்கள்.
மட்டக்களப்பில் புழக்கத்தில் இருக்கும் இந்த கா, புகலிடத்திலும் புழக்கத்திலிருப்பதை அவதானிக்கின்றேன்.
செங்கதிரோனின் ஆக்கம் பல ருசிகர தகவல்களை வாசகர்களுக்கு, குறிப்பாக ஏனைய பிரதேச வாசகர்களுக்கு வழங்குகிறது.
அன்புள்ள கில்லி திரைப்படத்தை தமிழகத்தில் எடுத்த ஈழத்தின் இளம் கலைஞர் ஶ்ரீநாத் இராமலிங்கம் கடந்து வந்த பாதையையும் அவர் பெற்ற அனுபவங்களையும் இணையவழியில் நேர்காணலாக பெற்று எழுதியிருக்கிறார் ஞானம் பாலச்சந்திரன்.
ஒரு கலைஞனின் உள்ளார்ந்த ஆற்றல் எவ்வாறு படிப்படியாக விகசித்து மேற்கிளம்புகிறது என்பதை பாலச்சந்திரன் அவரிடம் கேட்கும் கேள்விகளிலிருந்தும் கலைஞர் ஶ்ரீநாத் இராமலிங்கம் அதற்குத் தெரிவிக்கும் பதில்களிலிருந்தும் தெரிந்துகொள்கின்றோம்.
பரந்து பட்ட வாசகர் பரப்பிற்கு சென்றிருக்கவேண்டிய நேர்காணல் இது. எனினும் ஞானம் படிக்கும் தேர்ந்த வாசகர்களை வந்தடைந்துள்ளது.
இந்த நேர்காணல் கூறும் வலிமையான செய்தியையும் சொல்லத்தான்வேண்டும். எமது பிள்ளைகள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறார்கள் என்பதை அறிந்து , அந்தத் துறையிலேயே அவர்களை வளர்த்துவிடுவதற்கு பெற்றோர் தயாராக வேண்டும்.
ஞானம் ஆசிரியர் ஞானம் இதழின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய தொடரின் 09 ஆம் அங்கம் இரண்டு சிறப்பிதழ்கள் பற்றி இம்முறை பேசியிருக்கிறது.
2004 இல் வெளியான ஞானம் அவுஸ்திரேலிய சிறப்பிதழ், 2011 இல் வெளியான சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு சிறப்பிதழ் ஆகியன பற்றிய விரிவான குறிப்புகளை எழுதியிருக்கிறார்.
இந்த இதழ்கள் வெளியான காலப்பகுதியில் அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்திலும் இலங்கைத் தலைநகரிலும் நடந்த நிகழ்வுகளுடன் நானும் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஞானம் ஆசிரியரதும் அவரது குடும்பத்தினரதும் கடின உழைப்பை அவதானித்திருக்கின்றேன்.
குறிப்பிட்ட இரண்டு சிறப்பிதழ்கள் பற்றிய பதிவும் சிறந்த நனவிடை தோய்தலாக அமைந்துள்ளது.
பேராசிரியர் துரை மனோகரன் தொடர்ந்து எழுதிவரும் எழுதத் தூண்டும் எண்ணங்கள் பத்தி எழுத்து இம்முறை பாடிப்பறந்துவிட்ட இசைக்குயில் லதா மங்கேஷ்காருக்கு அஞ்சலி செலுத்துகிறது.
உலகத்தலைவர்கள் தலைவணங்கிய லதா பற்றிய செய்திகளுடன் இந்த அஞ்சலிக்குறிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு தடவை, பாகிஸ்தான் அதிபர் ஷியாவுல் ஹக், லதாவிடம் “ நீங்கள் எங்கள் நாட்டுக்கு வந்துவிடுங்கள். இங்கே உங்களுக்கு குடியுரிமை தருகின்றேன். இந்தியாவுடன் காஷ்மீர் விவகாரத்தில் சண்டையிடுவதை நிறுத்தி, விட்டுக்கொடுத்துவிடுகிறேன் “ என்றாராம்.
எனினும் பாரத நாட்டிற்கே லதா விசுவாசமாக வாழ்ந்தார்.
ஞானம் இதழ் அந்த இசைக்குயிலுக்கு துரை மனோகரன் ஊடாக அஞ்சலி செலுத்தியுள்ளது.
துரை மனோகரன் இம்முறை இந்த பத்தி எழுத்தில், பேராதனை பல்கலைக்கழகம் மெய்நிகர் ஊடாக நடத்திய நாடக ஆய்வரங்கு பற்றிய குறிப்புகளையும் எழுதியிருப்பதுடன், புகலிட எழுத்தாளர்கள் தமது சிறுகதைகளில் தவறவிடும் இரட்டை மேற்குறியீடுகள் பற்றிய தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நான் அறிந்தவரையில் பெரும்பாலான புகலிட எழுத்தாளர்கள் முகநூல் எழுத்தாளர்களாகவும் மாறிவருகின்றார்கள். முகநூல் ஒருவகையில் அவசரக்கோலங்களை பதிவேற்றுகின்றது.
அதில் ஆழ்ந்திருப்பவர்கள் பலர், இந்த குறியீடு இடும் விடயத்தில் கவனக்குறைவாக இருக்கிறார்கள்.
எனக்கு ஒவ்வொரு மாதமும் மேலதிக வேலை ஒன்று வரும். யாருடைய படைப்பையாவது படித்து கருத்துச்சொல்லவேண்டிய தண்டனைதான் அது. அல்லது ஒப்புநோக்கி செம்மைப்படுத்தும் வேலைகள். அவற்றில் நான் காணும் இந்த தறிப்பு குறி பெரும் பிரச்சினையை தருகிறது. துரை மனேகரனின் ஆதங்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதே !
படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகளை மீண்டும் மீண்டும் படித்து செம்மைப்படுத்திவிட்டு இதழ்கள், ஊடகங்களுக்க அனுப்பினால், அவற்றின் ஆசிரியர்களின் வேலைச்சுமை குறையும்.
—-0—
letchumananm@gmail.com