கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம்!… [ சுவை முப்பத்து ஐந்து ] ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
சீதக்காதி என்பவர் தனது வாழ்நாளெல்லாம் வரையாது வழங்கினார் என்றும் அறிகின்றோம்.அவரிடம் வருவோர்களை மதம் பாராது, இனம் பாராது , கொடுத்தபடியே இருப்பாராம்.அவரிடம் உதவிகேட்டு வந்த வருக்கு பொருள் கொடுத்த போது அவர் அதனை பின்பு வந்து பெற்றுக்கொள்ளுவ தாகக் கூறி நன்றி சொல்லிச் சென்றுள்ளார். அவருக்கு பொருள் தேவை யான வேளை சீதக்காதியை நாடி வந்திருக்கிறார். அதற்குள் சீதக்காதி வள்ளலோ இறந்து விட்டார். வந்தவரே கவலையுடன் அவரின் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தலாம் என்று உறவுகளுடன் சென்றிருக்கிறார். அப்பொழுது அங்கே ஒரு அதிசயம் நடந்ததாம்.சீதக்காதியின் சமாதியி லிருந்து அவரது ஒரு கை மேலே எழுந்ததாம். அந்தக் கையில் ஒரு விரலில் விலைமதிப்பான மோதிரம் இருந்ததாம். உறவினர் அந்த மோதிர த்தை எடுத்து வந்தவரிடம் கொடுத்தார்களாம் என்பதுதான் அந்த அதிசய சம்பவமாகும். செத்தாலும் வள்ளல் தன்மை மட்டும் உயிர்த்துடிப்புடன் இருந்திருக்கிறது என்பதுதான் இங்கு முக்கியத்துவப் படுத்தப்படுகிறது எனலாம். பனைக்கும் இச்சம்பவத்தும் என்னதான் தொடர்பு இருக்கிறது என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா ? பனையானது உயிர்ப்புடன் இருக்கும் பொழுது கொடுத்து உதவியது. அது உயிர்ப்பு அற்று பட்ட மரமாகிய பின் பும் பயனைக் கொடுக்கும் வகையிலும் இருக்கிறது என்பது தான் இங்கு தொடர்பாக அமைகிறது.
பட்டபின் பனையினைக் கொட்டுப்பனை என்று அழைக்கிறோம்.குருத்து விழுந்தும்,காய்ந்தும் , நிற்கும் நிலைதான் இந்தக் கொட்டுப்பனையாகும். கொட்டுப் பனைகளை அளவான துண்டுகளாக வெட்டி அதனை மண்ணில் கிண்டி வைத்து அதன் மேல் பகுதியில் ஆல்,அரசு , மரக் கன்றுகளைப் பதியம் இடுவதையும் காணலாம். நான் எனது சிறிய பராயத்தில் இப்படிச் செய்திருக்கிறேன். நான் பதியம் வைத்த ஆலும் , அர சும் வளர்ந்து பெரிய மரமாக யாழ் மண்ணில் இருக்கிறது. பனங்கொட்டு தன்னை ஆகுதியாக்கி மரங்களை விருட்சமாக்கி விட்டு போய்விட்டது.
கார்த்திகைத் தீபத்திருநாளில் சொக்கப்பனை எரித்தல் என்பது கிராமங்களிலுள்ள ஆலயங்களில் இடம் பெறும் என்பதையும் யாவரும் அறிவோம். அப்பொழுது கொட்டுப் பனைகளே இந்தச் சொக்கப்பனையாக அமைந்து நின்று தீயில் தன்னைத் தியாகம் செய்து நிற்கும். கொழுந்து விட்டு மேல் நோக்கி எரியும் நெரு ப்பினைப் பார்த்து யாவருமே ஆரவாரித்து நிற்பார்கள். கொட்டுப்பனை தன்னை எங்களின் விருப்பத்துக்கா கத் தீயினை அணைத்தபடி இருக்கும்.
கொட்டுப் பனைகள் மனிதருக்கு மட்டுமல்லாது பறவைகளுக்கும் உதவியாக இருக்கிறது என்பதும் நோக் கத்தக்கதாகும்.பச்சைக்கிளிகளும், மைனாக்களு ம் , கூகைகளும் , தாம் வாழுவதற்கு மிகவும் பாதுகாப் பான இட மென்று தேர்ந்தெடுத்த இடம் எது தெரியுமா அதுதான் கொட்டுப்பனையாகும்.
திங்களுக்குச் செல்லப் பனாட்டாகுஞ் சீருணவு
மங்காப் பனையீயு மாண்டு முற்றுந் – தங்குபுகழ்
பாரிபோல் யார்க்கும் பயனருளித் தன்னையுமே
நேருங் கொடையாக நின்றுதவுஞ் – சீரியநற்
கற்பக மன்னன் கடவுட் பனையுணவை
என்னும் இப்பாடல் மூலம் பனையின் வள்ளல் தன்மையானது , கொடு த்துக் கொடுத்துப் புகழ்பெற்ற பாரி மன்னனுடன் இணைக்கப்படுகிறது. காய்ந்த பின்பும் பனையின் அளிக்கின்ற வள்ளல் தனம் குறைந்து போய் விடவே இல்லை எனக்காட்டுவது பனையின் பெருமையினைப் பறிசாற்றி நிற்கிறதல்லவா!
காய்ந்து போயிருக்கும் பனைமரத்தினைச் சங்கப் புலவர் ஒருவர் பார்க்கிறார். அவரின் பார்வை நல்ல தொரு கவியாகி நமையெல்லாம் ஈர்க்க வைக்கிறது.
நீடலர் வாழி, தோழி ! கோடையில்
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது
தும்புடைத் துய்த் தலைக் கூம்புபு திரங்கிய
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து
யானைப் பெரு நிரை வானம் பயிரும்
இப்பாடல் அகநாநூற்றில் இடம் பெறுகிறது. பாடலைப் பார்க்கக் குழப்பமாக இருக்கிறதா ? காய்ந்த பனை இங்கே எப்படிக் காட்டப்படுகிறது என்றும் எண்ணிடத் தோன்றுதல்லவா ? இதுதான் சங்கப்பாடலின் நுட்ப மாகும். பாடலின் உள்நுழைந்து பார்ப்போமா ! வேனிற் காலத்தில் அங்கு அடிக்கின்ற மேல் காற்றின் கார ணத்தால் குருத்துகள் இற்று உதிர்ந்த நிலையில் பனை மரம் இருக்கிறதாம்.அந்த பனை மரத்தின் நுனி யில் துளையுடன் உச் சியானது கூம்பிய வற்றிய நிலையில் அந்த இளம் பனைமரம் தென்படுகிறதாம். அந்தப் பனைமரம் போன்று பெருங்கூட்டமாக வரும் யானைகளின் தும்பிக்கை இருக்கிறதாம். யானை கள் தும்பிக்கையினை உயர்த்தியபடியே வருகின்றனவாம்.அது பனைமரம் போல் சங்கப் புலவருக்குத் தென்படுகிற தாம்.குருத்தானது இற்று நுனியில் துளையுடன் காணப்படும் பனையினைப்பற்றிய கற்பனை சங்கப்புலவரிடம் வளர்ந்து கொண்டே போகிறது. இடி இடித்து நிற்கும் அளவுக்கு தன்னுடைய பிளிறலை எழுப்பும் யானையின் தும்பிக்கையின் வெளிறிய நிறமும், அதன் தும்பிக்கையின் முனை உள்ள அமைப் புக்களையும் – குருத்துதிர்ந்து நிற்கின்ற பனையில் இந்தச் சங்கப்புலவர் காணுகிறார். இப்படிக் காணும் நிலை சற்று வித்தியாசமாக இருக்கிறதல்லவா ? சங்ககாலத்திலும் பட்ட பனை வியந்து பார்க்கப்பட் டிருப்பதோடு – ஒரு புலவனுக்குப் பாடு பொருளாகவும் ஆகியிருக்கிறது என்று எண்ணுகையில் பனை யானது முன்னுக்கே வந்து நிற்கிறது என்று தானே எண்ணிட வைக்கிறதல்லவா !
கிளி, குருவி, மைனா, கூகை, பருந்து, அனில், ஓணான், என்பன தங்களி ளுக்குப் பொருத்தமான வாழ் விடமாகவும் கொட்டுப்பனையினை ஆக்கியும் இருக்கின்றன.ஆடு, மாடுகளைக் கொட்டுப்பனைகளில் கட் டுவார்கள். மாடு களுக்கு அவற்றின் உடலில் அரிப்பு எடுத்தால் , அவைகள் அந்த அரிப்புக்கு இதமாக கொட்டுப்பனையினை நாடி உரசி அரிப்பினைப் போக்கிக்கிக்கொள் ளுவதையும் காணக்கூடியதாகவும் இருக்கும்.
வடலிப்பருவமாக இருக்கும் பொழுது அதனுடைய குருத்தானது காய்ந்து விழுவதைக்காணலாம். அப் படிக் குருத்து விழுந்த அந்த வடலிப்பனைகள் விறகினுக்காய் பயன்படுத்தப்படுத்தப்படுகின்றன. அதே வேளை வடலி அல்லாமல் நன்கு வளர்ந்து முதிர்வாக இருக்கும் பனையிலிருந்து குருத்து விழுந்த காய்ந்த மரம் பயனுள்ளதாகவே இருக்கிறது என்பதும் நோக்கத் தக்கதாகும். அதாவது பச்சையாக இருந்து வெட்டப்பட்ட மரம் எந்தளவுக்குப் பயனாகி நிற்கின்றதோ அதே அளவுக்கும் இப்படியான நிலையில் இரு க்கின்ற பனை மரமும் உதவியே நிற்கிறது என்பதுதான் முக்கியமாகும்.
பட்ட பனையாகிய கொட்டுப்பனையினைப் பிளந்து பின் அதனைச் சீவி பலவகைகளில் பயன்படுத்து கிறார்கள். துண்டாக்கப்பட்ட பிளந்த பனை மரத்துண்டுகளை அளவாக வெட்டி எடுத்து வீட்டுக்கும், தோட்டங்களுக்கும், பாதுகாப்பாய் வேலி அடைக்கவும் பயன் படுத்துவதையும் காணக் கூடியதாகவும் இருக்கிறது.மாடுகள் ஆடுகள் கட்டுகின்ற இடங்களில் சிறிய கொட்டில்களை அமைக்கவும் பிளக்கப்பட்ட இந்தக் கொட்டுப்பனையின் துண்டுகள் கை கொடுத்து நிற்கின்றன.கிராமப் புறங்களில் ஒழுங்கான பதை அமைப்பு என்பது இருப்பது மிகவும் குறைவாகவே இருக்கும். இருக்கும் ஒரு பாதையினைப் பயன் படுத் தியே பிரதான பாதைக்கு வருகின்ற நிலைமை பல கிராமங்களில் இருக்கிறது. அந்த நிலை இன்னுமே தொடர்வதையும் கானக்கூடியாதகவும் இருக்கிறது.பிரதான பாதைக்கு வருகின்ற பொழுது அப்பாதை களின் குறுக்கே பள்ளமாய் இருக்கும் இடத்தில் மாரிகாலங்களில் நீர் நிரம்பி செல்லமுடியா நிலையும் ஏற்படும். அந்த இடத்தில் ஒரு சின்னப்பாலம் அமைக்க வேண்டியும் ஏற்படும். அப்பொழுது கொட்டுப்ப னையினைப் பிளந்த துண்டுகள் கைகொடுக்க வந்து நிற்கும். நடக்கும் பாதாஇயின் அகலத்துக்கு ஏற்ப நீரோடும் பகுதிக்கு மேலாக பிளந்த பனந்த டிகள் அலவாக வெட்டப்பட்டு அங்கே ஒழுங்காக வைக்க ப்படும். அவ்வாறு வைக்கப்பட்ட பனந்தடிகளின் மேலாக நடந்து போவது இலகுவானதாகவே இருக்கும். தலைச்சுமைகளைச் சுமந்து பிரதான வீதிக்கு வருவதும் இயலக் கூடியதாகவும் இருக்கும்.
சில கொட்டுப்பனைகளில் வைரம் இல்லாமலும் இருக்கும். அப்படியான கொட்டுப்பனைகளும் எப்படி யோதான் பயனைக் கொடுத்து நிற்கிறது என்பது நோக்கத்தக்கது. எதுவும் செய்ய முடியா அளவுக்கு வைரம் சிறிதளவுக்காயினும் இல்லா நிலையில் விறகாக வந்து பயனாகி நிற்கும் என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.” செத்தும் கொடுத்தான் சீதக்காதி ” என்பதைப் பனை நிரூபித்த படியேதான் இருக்கும்.