Featureஇலக்கியச்சோலை

“ எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை ! “….. முருகபூபதி.

யாதுமாகி – மின்நூல் வெளியீட்டில் ஏற்புரை!…..

முருகபூபதி.

( கடந்த சனிக்கிழமை நடைபெற்ற “ யாதுமாகி “ மின்நூல் மெய்நிகர் வெளியீட்டில் நிகழ்த்தப்பட்ட ஏற்புரையின் முழுமையான பதிவு )

எமது வேண்டுகோளை ஏற்று இந்த மெய்நிகர் அரங்கினை தலைமை தாங்கி நடத்தியிருக்கும் சகோதரி கலையரசி சின்னையா, யாதுமாகி நூல் பற்றி தங்கள் வாசிப்பு அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொண்ட திருமதிகள் விஜி இராமச்சந்திரன், கனகா கணேஷ், முனைவர் வள்ளி, மருத்துவர் வாசுகி சித்திரசேனன் ஆகியோருக்கும்,

இந்த அரங்கினை ஏற்பாடு செய்து தந்த கன்பரா தமிழ் அரங்கம் பிரம்மேந்திரன், மற்றும் இந்நிகழ்வின் அழைப்பினை வடிவமைத்த எழுத்தாளர் – ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம், இந்நிகழ்ச்சி பற்றி இலங்கை ஊடகங்கள் வீரகேசரி, தினகரன், தினக்குரல், காலைக்கதிர், ஈழநாடு , தமிழ் முரசு, தீம்புனல் ஆகிய பத்திரிகைகளில் வெளியிட்ட அவற்றின் ஆசிரியர்களுக்கும்

கனடா பதிவுகள், தமிழ்நாடு திண்ணை, லண்டன் வணக்கம் லண்டன், அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சு, தமிழ் முரசு ஆகிய இணைய இதழ்களின் ஆசிரியர்களுக்கும், மற்றும் இந்நிகழ்ச்சி பற்றி தங்கள் வலைப்பூக்கள் – முகநூல்களில் பதிவேற்றியவர்களுக்கும் லண்டனிலிருந்து என்னை தொடர்புகொண்டு, தமது காணொளி YouTube channel ஊடாக நேர்காணலை ஒளிபரப்பிய அதன் இயக்குநர் திரு. எஸ். கே. ராஜென் மற்றும் செய்தியை ஒலிபரப்பிய சிட்னி Focus Thamil இணைய வானொலி இயக்குநர் சத்தியபாலன் ஆகியோருக்கும் இந்த அரங்கில் இணைந்திருந்தவர்களுக்கும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

பல வருடங்களுக்கு முன்னர் 1995 ஆம் ஆண்டளவில் எனது நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூல் வெளிவந்தபோது, ( இந்நூல் மறைந்த கலை, இலக்கிய ஆளுமைகள் 12 பேரைப்பற்றிய பதிவு ) சில பெண்கள் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்:

“ இந்த நூலில் இடம்பெற்றிருப்பவர்கள் அனைவருமே ஆண்கள்தான், ஏன் பெண்களைப்பற்றி நீங்கள் எழுதவில்லை..? “

அதற்கு நான் சொன்ன பதில்: “ பெண்களுக்கு ஆயுள் அதிகம். “

எனது இந்தக்கருத்தை வேடிக்கையாக அல்ல, உண்மையாகவே சொல்கின்றேன். உங்கள் குடும்பங்களிலும் இந்த உண்மையை நீங்கள் அவதானித்திருக்க முடியும். இதிலிருந்து பெண்களின் ஆயுளையும் ஆளுமைப் பண்புகளையும் எம்மால் புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பிட்ட நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூலில் இடம்பெற்றிருந்தவர்கள் அனைவரும் ஆண்கள்தான். ஆனால், அந்த நூல் மெல்பனில் வெளியானபோது அந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கியவர் எமது மதிப்பிற்குரிய திருமதி பாலம் லக்ஷ்மணன் அம்மையார்.

அவர் தனது உரையில், முருகபூபதி, விருப்பு வெறுப்பு பார்க்காமல் காய்தல் – உவத்தல் இன்றி, தான் சந்தித்த ஆளுமைகளின் மேன்மையான பக்கங்களை மாத்திரமே பதிவுசெய்துள்ளார். அதாவது அன்னப்பறவையைப் போன்று செயல்பட்டுள்ளார் “ எனத் தெரிவித்தார்.

இதனை அந்தச் சபையில் கேட்டுக்கொண்டிருந்த – எம்மத்தியில் வாழ்ந்த மதிப்பார்ந்த மூத்த ஓவியக்கலைஞர் கே. ரி. செல்வத்துரை அய்யா அவர்கள், அடுத்த வாரமே தனது கைவண்ணத்தினால், ஒரு அழகிய பெரிய அன்னப்பறவை ஓவியத்தை வரைந்து அதற்கு சட்டமிட்டு எடுத்துவந்து எனக்கு பரிசளித்தார்.

எங்கள் வீட்டின் வரவேற்பறையில் அந்தப்படம் காட்சியளிக்கிறது.

1998 ஆம் ஆண்டு எனது மூன்று நூல்கள் சிட்னியில் மறைந்த மூத்த கலைஞர் ‘ அப்பல்லோ சுந்தா ‘ சுந்தரலிங்கம் அவர்களின் அரங்கில் நடந்த போது அதற்கு தலைமை தாங்கியவர்தான் இன்றைய அரங்கில் தலைமை தாங்கியிருக்கும் திருமதி கலையரசி சின்னையா அவர்கள். குறிப்பிட்ட நிகழ்ச்சி சுந்தா அரங்கில் நடப்பதை எனது அழைப்பிதழ் மூலம் அறிந்த சிட்னியில் வதியும் மூத்த ஓவியக்கலைஞர் ‘ ஞானம் ‘ ஞானசேகரம் அவர்கள், தமது கைவண்ணத்தில் சுந்தா அவர்களின் உருவத்தை வரைந்து சட்டமிட்டு எடுத்துவந்து அனைவரதும் முன்னிலையில் வழங்கினார்.

அதனையே அவ்வரங்கில் விளக்கேற்றி, மாலை அணிவித்து நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.

குறிப்பிட்ட அமரர் சுந்தாவின் ஓவியம், அன்னாரின் குடும்பத்தினரிடம் அதாவது எங்கள் கலை இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அக்காவிடம் சேர்ப்பிக்கப்பட்டது.

இங்கு நான் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் நான் எதிர்பாராமல் நடந்தவை. எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை என்று எனது எழுத்துப்பதிவுகளில் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன்.

இன்று வெளியாகும் யாதுமாகி நூலை சகோதரி பராசக்தி அக்கா அவர்களுக்கே சமர்ப்பித்துள்ளேன். ஆனால், இதுவிடயம் அவர்களுக்கோ மற்றவர்களுக்கோ இதுவரையில் தெரியாது. நூலை கிண்டிலில் தரவிறக்கிப்பார்க்கும்போது அல்லது அதன் மூலப்பிரதி அச்சில் வரும்போது கவனிப்பீர்கள்.

இத்தகைய பாக்கியங்களை நான் எனது எழுத்துலக வாழ்வில் நிறைய பெற்றிருக்கின்றேன்.

1970 களில் அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் இந்த எழுத்துலகில் பிரவேசித்தபோதே படைப்பிலக்கியவாதியாக மட்டுமன்றி, பத்திரிகையாளனாகவும் வாழத் தொடங்கிவிட்டேன்.

சில வேளை படைப்பிலக்கியவாதியாக மாத்திரம் நான் இயங்கியிருப்பேனேயானால், என்னிடத்திலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு மனப்பான்மை உருவாகி, மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்களின் மேன்மைகளை இனம் காணும் பண்பு என்னிடத்திலும் இல்லாமல் போயிருக்கும். ஆனால், நான் ஒரு பத்திரிகையாளனாகவும் ஊடகவியலாளனாகவும் தொடர்ந்து பயணிக்கின்றமையால் இந்த விருப்பு வெறுப்பு பார்க்கும் குணாதிசயம் என்னை என்றைக்குமே அண்டவில்லை.

பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்களுக்கு அரசியல் தலைவரும் ஒன்றுதான் . ஐ. ஆர். சி. தெருப்பொறுக்கியும் ஒன்றுதான். அவர்களுக்கு செய்தி மாத்திரமே முக்கியம். ஆள் அல்ல ! அந்தச்செய்தியில் விருப்பு வெறுப்பு பார்க்க முடியாது. அவ்வாறு செய்திகள் எழுதி எழுதி வந்தமையால்தான்,

நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரையும், இன்று யாதுமாகி என்ற 28 பெண் ஆளுமைகள் பற்றிய தொடரின் தொகுப்பையும், காலமும் கணங்களும் என்ற நீண்ட தொடரையும் எழுத முடிந்திருக்கிறது.

காலமும் கணங்களும் தொடரில் இதுவரையில் இலங்கை, இந்திய மற்றும் புகலிட தேசத்தில் மறைந்த எனது நேசத்திற்குரிய சுமார் 150 கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றி எழுதியிருக்கின்றேன். இந்தத் தலைப்பில் காணொளி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வருகின்றேன்.

அத்துடன் வாசகர் முற்றம் என்ற தலைப்பின் கீழ் தொடர்ந்தும் பல தேர்ந்த வாசகர்கள் பற்றி எழுதிவருகின்றேன்.

நான் ஒரு சிறுகதை எழுத்தாளனாகத்தான் இலக்கிய உலகில் அறிமுகமானேன்.

நான் அந்தத் துறையிலேயே நின்றிருக்கவேண்டும் என்று என்னிடம் நேசத்தின் நிமித்தம் சொன்னவர்கள் பலர். அவ்வாறு சொன்னதன் தாற்பரியம் புரிந்துகொள்ளத்தக்கது.

அவ்வாறு சிறுகதை, நாவல் , கவிதை முதலான துறைகளில் மாத்திரம் தங்கள் கவனத்தை செலுத்தி வந்திருப்பவர்கள் பலர் பற்றி அறிந்திருப்பீர்கள்.

நான் அதற்கும் அப்பால், அகலக்கால் வைத்து பயணித்தமையால், பல்வேறு அனுபவங்களையும் இடர்பாடுகளையும் சங்கடங்களையும் சந்திக்க நேர்ந்தது.

அத்துடன் இலங்கை மாணவர் கல்வி நிதியம், மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் உட்பட மேலும் சில தன்னார்வத்தொண்டுகளிலும் ஈடுபடநேர்ந்தது.

அதனால், எனது படைப்பிலக்கிய முயற்சிகளில் தேக்கத்தையும் கண்டிருக்கின்றேன். எனினும் எப்படியோ, இதுவரையில் ஏழு சிறுகதைத் தொகுதிகளை வரவாக்கிக்கொண்டு , தொடர்ந்தும் அவ்வப்போது சிறுகதைகளை எழுதிவருகின்றேன்.

பறவைகள் நாவலுக்குப்பின்னர் மழைக்காற்று என்ற நாவலை எழுதினேன். இது இன்னமும் நூலுருப்பெறவில்லை.

பறவைகள் நாவலில் தேவகி என்ற பாத்திரம் பிரதானமானது. இலங்கை வடபுலத்தில் போர்க்காலத்தின்போது, குடும்ப உறுப்பினர்களையெல்லாம் இழந்து இடம்பெயர்ந்து ஏனைய உறவினரின் தயவில் வாழ்ந்த ஒரு அபலைப்பெண்ணின் கதை அது.

மழைக்காற்று, வன்னி பெருநிலப்பரப்பில் இறுதி யுத்தத்தின்போது தனது கைக்குழந்தையையும் இழந்து சரணடைந்த காதல் கணவனையும் தொலைத்துவிட்டு சொந்த பந்தங்கள் ஏதுமற்று, கவனிப்பின்றி, உயிர் வாழவேண்டும் என்பதற்காகவே இடம்பெயர்ந்து, ஒரு சமையல்காரியாக – வேலைக்காரியாக ஒரு வீட்டில் தஞ்சமடைந்து, படைப்பாளியாகவும், தொலைக்காட்சியில் சமையல் கலை பற்றி விளக்கமளிக்கும் ஆளுமையுள்ள பெண்ணாகவும் ஒரு அபலைப்பெண் அபிதா என்பவள் சந்திக்கும் சவால்களை சித்திரிக்கும் நெடுங்கதை மழைக்காற்று.

எனது கதாமாந்தர்களை தொடர்ந்து அவதானித்து வந்திருக்கும் எனது மனைவி மாலதி, “ எனக்கு பொம்பிளை வாலாயம் “ என்றார்.

அத்துடன் எனது செயற்பாடுகளை பார்த்துக்கொண்டிருக்கும் மாலதி, எனது அருமை நண்பர்களான இரண்டு கிருஷ்ண மூர்த்திகள் எடுத்த எனது வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படத்தில் தோன்றி, “ முருகபூபதி என்பவர் ஒரு ரோபோ… அதாவது இயந்திர மனிதன் “ என்றும் இரத்தினச் சுருக்கமாகத் தெரிவித்தார்.

இதனைவிட வேறு பாக்கியம் எனக்கு என்ன வேண்டும்…? சொல்லுங்கள்.

எனவே நான் இதுபோன்ற பல நற்சான்றிதழ்களை பெற்ற பாக்கியசாலி !

இந்த யாதுமாகி நூல் வெளியீட்டின் அழைப்புடன் சம்பந்தப்பட்ட செய்திக்குறிப்புகளில் நூலில் இடம்பெற்றிருக்கும் 28 பெண் ஆளுமைகளின் பெயர்களைப்பார்த்துவிட்ட சிலர், ஏன் அவரைப்பற்றி எழுதவில்லை, இவரைப்பற்றி எழுதவில்லை,..? என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தனர்.

அவர்களின் கேள்வியில் இருக்கும் நியாயத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இதுபோன்ற நூல்கள் ஒருவகையில் ஆவணப்படுத்தல்தான். அமரத்துவம் எய்திவிட்ட சகோதரி பத்மா சோமகாந்தன் அவர்கள் மாண்புறு மகளிர் என்ற நூலையும் லண்டனில் வதியும் நவஜோதி யோகரத்தினம் மகரந்தச்சிதறல் என்ற தொகுப்பினையும் பேராசிரியை சித்திரலேகா சொல்லாத சேதிகள் என்ற கவிதைத் தொகுப்பினையும், தமிழ்நாட்டிலிருந்து அரசு மங்கை பெயல் மணக்கும் பொழுது என்ற தொகுப்பினையும் பெண்கள் சார்ந்தும் பெண் கவியாளுமைகள் சாரந்தும் முன்னரே வெளியிட்டிருக்கின்றனர்.

நீங்கள் விரும்பினால், எனது யாதுமாகி நூலையும் அந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளுங்கள். அல்லது எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.

எனது படைப்பிலக்கிய பணிகளுக்கு மத்தியில் இதுபோன்ற பதிவுகளை நான் எழுதுவதன் மூலம் சிலருக்கு உதவ முடிந்திருக்கிறது என நம்புகின்றேன்.

இந்த அரங்கில் இணைந்து உரையாற்றிய தமிழ்நாட்டில் சென்னையில் வசிக்கும் முனைவர் வள்ளி அவர்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும். செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றுகின்றார். இவர்

அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தவர்.

இவருக்கும் உசாத்துணைக்காக எனது முன்னைய பதிவுகளை சேர்ப்பித்திருக்கின்றேன்.

எனவே இதுபோன்ற பதிவுகள் இனிவரும் இலக்கிய மாணவர்களுக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் பயன்படுமானால் எனக்கு அது மகிழ்ச்சியே !

யாதுமாகி நூலில் இடம்பெற்றிருக்கும் 28 பேரையும் நான் தேடிச்சென்றிருக்கின்றேன். அல்லது அவர்கள் என்னைத் தேடி வந்திருப்பார்கள்.

ஓரே ஒருவரைத்தான் சந்திக்க முடியாமல்போய்விட்டது. அவர்தான் மனோரமா ஆச்சி. அவர் எங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்தபோதும் சந்திக்க முடியாமல் போய்விட்டது.

சென்னை தி. நகரில் செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டுக்கு முன்பாக அமைந்திருந்தது மனோரமா ஆச்சியின் இல்லம். அவரது மகனின் பெயரும் பூபதிதான். அந்த இல்லத்திற்கு பூபதி இல்லம் என்றும் பெயர்வைத்திருந்தார்.

அந்த வீதிக்கு முன்னர் போக்ரோட் என்று பெயர். சென்னை செல்லும்போதெல்லாம் நான் செல்லும் வீதி அந்த போக்ரோட். அங்குதான்

சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டு எல்லையுடன் அமைந்திருக்கிறது பாலன் இல்லம். இது தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம். இங்குதான் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தா. பாண்டியன், நல்லக்கண்ணு, மகேந்திரன், மாணிக்கம், அறந்தை நாராயணன் ஆகியோரை சந்திப்பேன்.

ஒருசமயம் மனோரமாவையும் சந்திப்பதற்காக சென்றேன். அவர் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருந்தார்.

சிலவேளை இந்த கலை இலக்கியம் மற்றும் பிறதுறைகள் சார்ந்த ஆளுமைகள் பற்றி எழுதியிருக்கும் முருகபூபதி, ஏன் வெறும் சினிமா நடிகையாக மாத்திரம் வாழ்ந்த மனோரமாவைப்பற்றி எழுதியிருக்கிறார்..? என்ற கேள்வி எழலாம்.

மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பர் வ. ராமசாமி பற்றி அறிந்திருப்பீர்கள். இவர் எமது இலங்கையில் வீரகேசரி பத்திரிகையிலும் ஒரு காலத்தில் ஆசிரியராகவிருந்தவர்.

அவர் 1943 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு பெரியார்கள் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளவர்கள்: ராஜாஜி, ஈ.வெ.ரா., வி.க., வரதராஜுலு நாயுடு, டி.எஸ்.எஸ். ராஜன், ஜோர்ஜ் ஜோசஃப், சத்தியமூர்த்தி, வ.உ.சி. , எஸ்.எஸ். வாசன், கே.பி. சுந்தராம்பாள், கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை.

அப்போது அவர் குறித்தும் ஒரு விமர்சனம் வந்தது.

கலைவாணர் என். எஸ்.கே. பற்றியும் வ.ரா எழுதியிருக்கிறாரே. கலைவாணர் ஒரு நடிகர் மாத்திரம்தானே..?

அவர் எத்தகைய கலைஞர் என்பதை நன்கு அறிவீர்கள். அவரது பெயரில் ஒரு அரங்கமே பெரிய மண்டபமாக சென்னையில் காட்சியளிக்கிறது.

பின்னாளில் நடிகர் விவேக் கூட சின்னக்கலைவாணர் பெயர் பெற்றவர்தான்.

வ.ரா.வின் குறிப்பிட்ட தமிழ்நாட்டு பெரியார்கள் பற்றிய நூல் பற்றிய எதிர்வினைக்கு எங்கள் மல்லிகை ஜீவாவும் தமது மல்லிகையில் சிறந்த பதிவொன்றை எழுதியிருக்கிறார்.

முடிந்தால், நூலகம் ஆவணகத்தில் பாருங்கள்.

இவையெல்லாம் கலைவாணர், வ.ரா. மறைந்தபின்னர் வெளியான செய்திகள். இன்றைய செய்தி, நாளைய வரலாறு.

இதுபோன்ற பதிவுகளை நான் மட்டுமல்ல ஏனையவர்களும் எழுதமுடியும். எனது இந்த நூல் வெளியீடு பற்றி அறிந்த எனது உடன்பிறந்த தம்பி ஶ்ரீதரன் தமிழ்நாடு வேலூர் காட்பாடியிலிருந்து தொடர்புகொண்டு, “ அண்ணா எப்போது எங்கள் குடும்பத்துப்பெண்கள் பற்றி எழுதப்போகிறீர்கள்..? “ எனக்கேட்டார்.

அதனால் என்ன எழுதிவிட்டால் போச்சு. ஆனால், நீயும் நானும்தான் அதனைப்படிக்க முடியும் என்றேன்.

உங்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசான்கள் பற்றி எழுதுங்கள்.

இந்த அரங்கில் பேசிய திருமதி கனகா கணேஷ் என்ற எங்கள் அன்புக்குரிய பாப்பா, தனது தாயாருடன் பயணித்து தனது பாதணியை தொலைத்த கதையை அருமையாக எழுதியிருந்தார்.

விஜி இராமச்சந்திரன், மனோரமா ஆச்சியுடன் பல திரைப்படங்களில் நடித்த குணசித்திர நடிகர் நாகேஷின் உறவுமுறையில் பேத்தியாவார். தாய்மொழி கன்னடமானாலும் என்ன அழகாக தமிழ் பேசுகிறார்.

எனது வாசகர் முற்றத்தில் அவர் பற்றியும் எழுதியிருக்கின்றேன்.

குவின்ஸ்லாந்து பொற்கரையிலிருந்து இணைந்து உரையாற்றிய மருத்துவர் வாசுகி சித்திரசேனன், எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அந்த மாநிலத்தில் 17 ஆவது எழுத்தாளர் விழாவை நடத்துவதற்கு பக்க பலமாக இருந்தவர்.

சென்னையிலிருந்து இணைந்துகொண்டுள்ள முனைவர் வள்ளி அவர்கள், உலகடங்கிலும் வாழும் ஈழத் தமிழ் கலை, இலக்கிய வாதிகளுடன் தொடர்ந்தும் பயணிக்க விரும்பியிருக்கிறார்.

இவ்வாறு நாம் எமது கலை, இலக்கிய பாலத்தை ஆரோக்கியமாக கட்டி எழுப்புவோம். எங்கள் மூத்த பாட்டன் பாரதிதானே பாலம் அமைப்பதற்கும் சொல்லித்தந்தவர்.

இந்த நூலின் முன்னுரையில் போர்க்காலமும் பெண்களும் பற்றியும் எழுதியிருக்கின்றேன் என்பதையும் குறிப்பிடவிரும்புகின்றேன்.

பின்னர் படித்துப்பாருங்கள். வியட்நாம் போரின்போது பாதிக்கப்பட்ட ஒரு பெண் பற்றியும் முன்னர் எழுதியிருக்கின்றேன். அந்தப்பெண்ணை அவளது குழந்தைப்பருவத்தில் மாஸ்கோவில் சந்தித்தேன். எனது மனதைவிட்டு அகலாத வியட்நாம் தேவதை அவள். அவள்பற்றிய விரிவான பதிவு எனது சொல்ல மறந்த கதைகள் நூலில் இடம்பெற்றுள்ளது.

1985 இற்கு முன்னர் உலகடங்கிலும் நடந்த போர்கள் குறித்து விசாரணை செய்யும் நீதிமன்ற கருத்தரங்கில் அந்தப்பெண்ணை அவளது 10 வயதில் பார்த்தேன். இன்றும் ஊடகங்களில் அவள் பற்றிய செய்தியை பார்க்கலாம்.

எனது புதர்க்காடுகள் சிறுகதையிலும் அவள் வருகிறாள். அவளது இயற்பெயர் கிம்புக். தற்போது கனடாவிலிருந்து தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுகிறாள்.

அன்று மாஸ்கோவில் அவளுடைய வாக்குமூலத்தை பதிவுசெய்த ருஷ்யாதான், இன்று தனது அண்டை நாடான உக்ரெயினில் கொத்துக்கொத்தாக குண்டுகளை பொழிந்து குழந்தைகளையும் கொன்றழிக்கின்றது. முப்பது நாட்கள் கடந்துவிட்டன.

அதே உக்ரேய்ன் விமானிகள் எமது தாயகத்தில் வன்னி பெருநிலப்பரப்பிலும் குண்டுகளை பொழிந்தார்கள்.

அதில் கொல்லப்பட்ட குழந்தைகள் பெண்கள் பற்றிய கோரமான படங்களுடன் ஒரு பெரிய ஆவணப்பதிவும் எனது வசம் இருக்கிறது.

எனது யாதுமாகி நூலின் இறுதிப்பகுதியில் இலங்கையில் தடுப்புக்காவலில் சித்திரவதைகளை அனுபவித்த புஷ்பராணி பற்றிய ஒரு பதிவை பாருங்கள். அவர் சொல்கிறார்:

“ ஆயுதப்போராட்டத்தில் நல்ல போராட்டம் , மோசமான போராட்டம் என்று எதுவுமே கிடையாது. ஆயுதம் மோசமானது மட்டுமே… அது எவர் கையிலிருந்தாலும் அழிவைத்தவிர வேறொன்றிற்கும் அது பயன்படாது. “

ஆயுத வியாபாரிகளுக்கும் ஆயுத விற்பனை தரகர்களுக்கும்தான் பயன்படும்.

உக்ரேய்ன் மக்கள் இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போதும் மிகவும் மோசமான அழிவுகளை சந்தித்தார்கள். இன்று மீண்டும் சந்திக்கிறார்கள்.

எமக்கு பாரதியார் எப்படி ஒரு மகா கவியோ, வங்கத்திற்கு தாகூர் எப்படி ஒரு மகா கவியோ, அதுபோன்று, ஒரு காலத்தில் ஒன்றிணைந்திருந்த சோவியத்திற்கு உக்ரேய்ன் கவிஞர் தராஸ் ஷெவ்சென்கோவ் மகாகவிதான். அவரது நூற்றாண்டுக்கு இலங்கையிலிருந்து எமது இலக்கிய நண்பர் கே. கணேஷ் அழைக்கப்பட்டார்.

அத்துடன் பாரதியையும் ஜெயகாந்தனையும் ஈழத்து – தமிழக எழுத்தாளர்களையும் சோவியத் மக்களுக்கு அறிமுகப்படுத்திய இலக்கியத் தோழர் விதாலி ஃபூர்ணிக்காவும் உக்ரெய்னைச்சேர்ந்தவர்தான்.

இந்த போர்க்காலத்தை சந்திக்காமல் அவர்கள் அனைவரும் முன்னரே விடைபெற்றுவிட்டனர்.

எமது தாயகத்தில் தோன்றியிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உக்ரோய்ன் – ருஷ்ய மோதலின் பின்னணியில் உங்கள் அனைவரையும் மிகுந்த மனவலியுடன் சந்திக்கின்றேன்.

நாம் எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நிற்போம் என்று கூறி விடைபெறுகின்றேன்.

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இத்தனை புத்தகங்கள் எழுதியிருந்தபோதிலும் நான் இன்னமும் ஒரு இலக்கிய மாணவன்தான். உங்களிடம் கற்பதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் இன்னும் நிறைய இருக்கிறது.

எனது பேரக்குழந்தைகளிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.

அனைவருக்கும் நன்றி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.