Featureகட்டுரைகள்
போட்டியும் தன்மையும்!…. சங்கர சுப்பிரமணியன்.
மனிதன் தோன்றிய காலம் தொட்டு போட்டியும் தோன்றிவிட்டது என்பது உண்மை. இந்த போட்டி என்பதன் அடிப்படை திறமையை வளர்ப்பதற்கு
அல்லது வெளிப்படுத்துவதற்காக உண்டானதே தவிர நான் பெரியவன் நீ பெரியவன் என்று காண்பிப்பதற்காக அல்ல.ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறை இருக்கும். விதிமுறைகளற்ற போட்டி இருக்காது. அது எப்படி என்றால் ஓட்டப்பந்தயத்திற்கு என்று ஒரு விதிமுறை என்றால் கார் ஓட்டும் பந்தயத்துக்கு என்று ஒரு விதிமுறை இருக்கும். கவிதைக்கு ஒருமாதிரியும் கதைக்கு ஒருமாதிரியும் இருக்கும். கவிதைக்கு இத்தனை வரிகள் என்றிருக்கும் விதிமுறை கதைக்கு இத்தனை சொற்கள் அல்லது இத்தனை பக்கங்கள் என்று இருக்கும். இந்த விதிமுறைகள் விளக்கமாகவோ அல்லது விளங்கும்படியோ இல்லாதபோது விவகாரம் ஆகிறது. இந்த விவகாரத்துக்கு அடிப்படைக் காரணம் குழப்பம்தான். சான்றாக ஓட்டப் பந்தயத்தை எடுத்துக் கொள்வோம். நூறு மீட்டர் ஓட்டத்தில் பத்துவயதுவரையில் உள்ள சிறுவர்களே பங்கேற்கலாம் என்பது விதிமுறை என்று வைத்துக் கொள்வோம். அதில் கலந்து கொண்ட பத்து வயது சிறுவன் ஒருவன் வெல்கிறான். இன்னொரு போட்டி இருநூறு மீட்டர் ஓட்டம். இதற்கு விதிமுறை பத்து வயதிற்கு மேற்பட்டு பன்னிரெண்டு வயதுவரையில் உள்ள சிறுவர்கள் கலந்து கொள்ளலாம் என்று விதிமுறை இருக்க வேண்டும். இதற்கு மாறாக பத்து வயதிலிருந்து பன்னிரெண்டு வயதுவரை சிறுவர்கள் சேரலாம் என்ற விதிமுறை உள்ளது. இதன் அடிப்படையில் நூறுமீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வென்ற சிறுவன் இப்போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுவிடுகிறான். இப்போது ஒரே சிறுவன் இரண்டு பிரிவில் எப்படி வெற்றி பெற்றான் என்பதை “கல்யாணியை கஞ்சிக்கு அலைய விட்டது கடவுள் குற்றமா? அல்லது கயவர்கள் குற்றமா?” என்று பராசக்தி வசனம்போல் கேட்டால் செல்லுபடியாகது. விதிமுறை அப்படியுள்ளது. இதைத்தான் விதிப்பயன் என்கிறார்களோ? சட்ட நூல்களில் எழுதப்படாத சட்டமாக மதநூல்களில் எழுதப்பட்டிருக்கும் வினோதமான சட்டத்தின் மூலம் விதிப்பலனாக இறந்தபின் நாம் அனுபவிப்போம் என்கிறார்கள். இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? என்று நம் மாடசாமி அண்ணாச்சியின் கேள்விக்கும் பதில் சொல்லிவிடுகிறேன். பாலுக்கு பூனை காவல் என்பதுபோல் இறந்துபோய் சொர்க்கமோ நரகமோ சென்று பின் பிழைத்ததாக சொன்னவர்கள் அங்கு கண்டதாக சொன்ன கதை இங்கு ஏராளம் உள்ளதே. அந்த கதையை இங்கு விடாதே அப்பனே என்கிறீர்களா? சொல்வது என்கடன், நம்புவதும் நம்பாததும் உங்கள் கடன். வந்த வழியை தவறவிடுவதே என் வாடிக்கையாய் போய்விட்டது. வந்த வழிசெல்வோம். இதுபோல் போல் போட்டி நூல்களுக்கும் வருவதுண்டு. இதில் ஒருவர் இரண்டு நூல்கள் வரை அனுப்பலாம். இதற்குமுன் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்ற நூல்களை அனுப்பக் கூடாது. போட்டிக்கு வரும் நூல்கள் போட்டியின் முடிவு தெரியும்வரை வேறுபோட்டியில் பங்கேற்கக் கூடாது என திட்டவட்டமான விதிகள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி வரையறுக்கப்படாத பட்சத்தில் குழப்பங்கள் அரங்கேறுவதுண்டு. இனி அரங்கேற்றத்தைப் பற்றிப்பார்ம்போம். வாழைப் பழத்தை விரும்பாத குரங்குகள் உண்டா என்பதைப்போல் அரங்கேற்றம் விரும்பா மாந்தர்கள் உண்டா? வாருங்கள் ஆட்டத்தைக் காண்போம். போட்டியில் பங்குபெறும் நூல்கள் போட்டியின் முடிவு வெளிவரும்வரை வேறு போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்ற விதிமுறை இல்லாவிடில் அந்த போட்டியில் பங்குபெறும் நூல் இன்னொரு போட்டியிலும் பங்குபெற்று இரண்டிலும் வென்றுவிடும். இதை நான் முத்துமாரியம்மன் கோவிலில் பூபோட்டு பார்த்து சொல்லவில்லை. இதில் நம் வரலாறு வரலாற்றைப் பதித்துள்ளது. ஒரு நீதிமன்றத்தில் வாதிடும் வழக்கறிஞர் தன் வழக்குக்கு வலுசேர்க்க 1996ம் ஆண்டு இதேமாதிரியான வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்று மேற்கோள் காட்டுவதைப்போல் நாமும் வரலாற்றை சான்றாக எடுக்கலாம். இன்னொன்று ஒருபோட்டியில் தீர்ப்பளித்த நடவர்குழுவே இன்னொரு போட்டிக்கும் நடுவர்குழுவாக அமைந்திருக்கலாம். இப்படி அமைவதையும் விதிப்பயன் எனலாம். விதி யாரை விட்டது? விதி வலியது! அல்லது “It’s all just a mere coincidence” என்று ஸ்டைலாக நம்ம மன்னார்குடி மகாதேவன் செய்வதுபோல் தோள்பட்டையை சற்று ஏற்றி இறக்கி மந்திரப் புன்னகையுடன் சொன்னால் “இன்னா சோக்கா அண்ணாத்த பதில் சொல்லிக்கினாருய்யா, கம்முனு கெட” என்று மேட்டரையே மறந்துவிடவும் வாய்ப்புண்டு. அடுத்ததாக ஒன்றை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இரண்டு போட்டிகளுக்கும் எதிர்பாராத விதமாக (எதிர்பாராதா விதமாக என்பதை கீழ்கோடிட்டு மறுபடியும் வாசிக்கும்படி சமூகத்தை சாஷ்டாங்கமாய் விழுந்து சேவித்து வேண்டுகிறேன்) ஒரே நடுவர்குழுவே அமர்ந்தால் அல்லது அமர்த்தப் பட்டால் அக்குழுவின் தீர்ப்பு இரண்டு போட்டிகளுக்கும் ஒரேமாதிரியாகத்தானே இருக்கும். இதில் தவறு சொல்லமுடியாது. ஒரே நடுவர்குழுவே இரண்டு போட்டிகளிலும் கலந்து கொண்ட ஒரே நூலுக்கு வேறு வேறு தீர்ப்பளிக்க இயலுமா? இந்த கேள்விக்கு பெரும்பாலானோர் சொல்லும் பதில் இயலாது என்பதாகத்தான் இருக்கும். அதுதான் சரியும்கூட. ஆனால் இதை ஒரு வழக்கறிஞரால் இயலும் என்று கூற இயலும். அந்த வழக்கறிஞர் மருத்துவத்துறை துணையுடன் multiple personality என்று வாதாடுவார். அது சரி, அந்த குழுவில் உள்ள அனைவருக்குமா multiple personality இருக்கும் என்று நீதிபதி கேட்காவிட்டால் வழக்கு முடிந்து விடும். எல்லாம் விதிப்பயன் என்று அவன்மேல் பழியைப்போட்டு நாம் பிழைக்கும் வழியைப் பார்ப்போம். இதனால்தான் நடுவர் குழு எடுக்கும் தீர்ப்பே முடிவானது என்பதை போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு விதிமுறையின் வாயிலாக முன்பாக அறிவித்து முன்ஜாமீன் வாங்கி வைத்துக்கொள்வார்கள். இதனால் போட்டியாளர்களே மற்றவர்களோ ஒன்றும் வாய்திறக்க முடியாது. போட்டியில் முடிவைத் தெரிவிப்பது சிங்கத்தின் வாயில் தலையைவிடுவதை மாதிரி கரணம் தப்பினால் மரணம்தான். சர்க்கஸ் காரர்கள் தக்க பாதுகாப்பபுடன் இருப்பார்கள். நமக்கு பாதுகாப்பு சட்டமும் ஒழுங்கும்தான். நடுவர்களுக்கு பாதுகாப்பு சரியாக வகுக்கப்பட்ட விதிமுறைகள். எந்த ஒரு போட்டியிலும் சரியாக விதிகள் அமைத்தால் போட்டிகளின் தன்மை மேம்பட்டு முடிவுகள் போற்றப்படும். -சங்கர சுப்பிரமணியன்.