Featureகதைகள்

எறும்புக் குஞ்சு!… ( சிறுகதை ) …. அண்டனூர் சுரா…. இந்தியா.

சுவீதனைத் தன் வழிக்குக் கொண்டுவர அவளால் முடிந்த எல்லா முயற்சியையும் எடுத்தாள் கனகா. மகனின் வம்படிக்கு முன் அவளது முயற்சிகள் எடுபடவில்லை. அவள் மனதளவில் சற்றே இறங்கி வந்து கெஞ்சிப் பார்த்தாள். மாட்டேன் என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

“ முன்னே மாதிரியில்ல. நீ இப்ப பெரிய பையனாயிட்டே. இனி நீ ஜட்டி போடத்தான் வேணும். ஜட்டி போட்டேதே குளிக்கணும் ” என்றாள். இதை அவள் கெஞ்சுவதைப் போல சொன்னாலும் ஒரு வித கண்டிப்புத்தொனி அவளது கண், நாவில் துருத்தியிருந்தது.

சுவீதன் குளிக்கையில், உடை மாற்றுகையில் அவனுக்கும் தாய்க்குமான பனிபோர் ஜட்டியினாலேயே வந்தது. மகன் சொல் பேச்சுக் கேட்பதில்லை, எனக் குணாளனிடம் ரொம்பவே அலுத்துக் கொண்டாள். “அவன கண்டிச்சு வையுங்க. ஜட்டி போடச் சொல்லுங்க” என்பதாகச் சொல்லி கணவனிடம் அவள் சண்டை பிடித்தாள். மகனைத் தன் வழிக்குக் கொண்டு வந்திட முடியாத அவமானம் அவளது முகத்தில் ததும்பி வழிந்தது. மகனின் அம்மணம் அவளை ரொம்பவே குறுக வைத்தது. தன் இரத்தத்தையும் உயிரையும் யாரோ நிர்வாணப்படுத்தி நிறுத்திவிட்டதாக உள்ளூர கூசினாள்.

முன்பு, அப்பாவின் சொல்லுக்கும், பார்வைக்கும் சற்றே பயந்தவனாக இருந்தான். “ இரு அப்பா வரட்டும். நீ பிடிக்கிற அடத்த அவர்க்கிட்ட சொல்லிடுறேன்”, என்பாள் கனகா. அவன் காது மடல்களைப் பின்புறமாக இறுகக் கட்டிவிட்டதைப்போல முகமிறுக்கம் கொள்வான். அப்பா, தன்னை ‘ கக்காப் பிள்ளை’ எனச் சொல்லிவிடுவாரோ, எனக் கலக்கம் கொள்வான். இதை அவள் சொல்லிச் சொல்லியே அவனை அவளது வழிக்குக் கொண்டுவந்திருந்தாள். இப்போது அப்பா மீது அவனுக்கு அன்பு மட்டுமே இருக்கிறது, பயமில்லை.

சுவீதனைப் பயமூட்டுவதற்காக கிளாஸ் டீச்சர் மேரியின் பெயரை உச்சரித்தாள். ” சுவீதன், இனி நீ ஜட்டி போடலன்னா, மேரி டீச்சர்க்கிட்ட சொல்லிப்புடுவேன்” எனச் சொல்கையில் அவன் சற்றே பயங்கொண்டான்.

சுவீதனுக்கு, இடுப்பில் ஜட்டியோ, துண்டோ இல்லாமல் சுதந்திரமாகக் குளிப்பது பிடித்திருந்தது. உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் அறைக்கு ஓடிவருவதும், டவுசரை எடுத்துக்கொண்டு வலமடிப்பதும் அவனுக்குப் பிடித்த சுதந்திரமாக இருந்தது. அவனது அப்பா குணாளன் மகனின் சுதந்திரத்தில் தலையிடவோ, அதற்கு முட்டுக்கட்டை போடவோ இல்லை. அதேநேரம் ஜட்டி அணிவதன் அவசியம் குறித்து அவ்வப்போது விளக்குபவராக இருந்தார். அவரது விளக்கம் ஜட்டி என்பது உடல் உறுப்புகளை மறைத்தல் பற்றியோ, மானம் குறித்தோ இல்லை. மறை உறுப்புகளில் ஈ, கொசு உட்காரும். அதனால் தோலில் சிரங்கு, புண் வரும். உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேணும். அதற்காக ஜட்டி அணிய வேணும்,… எனச் சொல்லச் செய்தார்.

ஒரு நாள் மகன் கேட்டான். ” ஏ வயசுல நீங்க ஜட்டி போட்டீங்களாப்பா?”. இப்படியான கேள்வியைக் குணாளன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மகன் கேட்ட கேள்வியை நினைத்து கனகா வெடியென சிரித்தாள். சிரிப்பை அவள் பல வகையில் சிரித்துக் காட்டுகிறவள்.

மகன், இப்படியாகக் கேட்டதை நினைத்து குணாளனால் நீண்ட நேரத்திற்குச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சிரிப்பை அவர் தொண்டைக்குள், கொடும்புக்குள், நாக்கிற்குள் என மறைக்கப் பார்த்தார். அவரையும் மீறி கடைவாய் வழியே சிரிப்பு கசியச் செய்தது.

சுவீதன் விடுவதாக இல்லை. “ நெஜமாவே நீங்க போட்டீங்களாப்பா?”. இக்கேள்வியை அவன் கேட்டுவிட்டு கண்களைப் படக் படக்கென அடித்துக் கொண்டான். குணாளன் இதற்குப் பதில் சொல்லவில்லை. கனகாதான் பதில்

சொன்னாள். “ உன் அப்பா உன் வயசுல பெர்ஃபெக்ட்டுடா”. இதை அவள் சொன்னதோடு நிறுத்தியிருக்கலாம். மகன் அடுத்தொரு கேள்வியைக் கேட்பதற்கு உகந்ததாக வாய் உதடுகளைச் சுழித்தாள். அவளது சுழிப்பைப் புரிந்துகொண்ட சுவீதன் மறு கேள்வியைக் கேட்டான்.

“அப்பா பெர்பெக்ட்டுனு உங்களுக்கு எப்படிம்மா தெரியும்?” அத்தனை பவ்வியமாக அக்கேள்வியைக் கேட்டவன், பெரிய எதிர்பார்ப்போடு அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.

“ அப்பாவோட ஃப்ரெண்ட் சொன்னாங்கடா”

“ எந்த ப்ரெண்டும்மா?”

“ சுசிலானு ஒரு ஃப்ரெண்ட்”

கனகா இதைச் சொல்லிவிட்டு, கணவனைப் பார்க்கவில்லை. மகனின் தலையை வருடிக் கொடுத்தபடி இருந்தாள்.

குணாளன் பொங்கோதமாக உட்கார்ந்திருந்தான். கனகா இப்படித்தான்! உங்களோட இளமைப் பருவ அந்தரங்கங்களை அடியேன் தெரிந்து வைத்திருக்கிறேன், என அவ்வப்போது காட்டச் செய்கிறவள்.

அவள் திரும்பி நின்றிருந்த பக்கம் முழு உருவ கண்ணாடி இருந்தது. அதன் வழியே, கணவரின் முகத்தைப் பார்த்தாள். கோபத்திற்கும், புன்னகைக்கும் இடைப்பட்ட உணர்ச்சிமயம் அவனது முகத்தில் தேனீக்களாக மொய்த்தது.

வீடு சற்றே அமைதி கண்டது.

குணாளனுக்கு மேகலா டீச்சர் நினைவுக்கு வந்தார். குணாளன் ஐந்தாம் வகுப்பு படிக்கையில், கிளாஸ் டீச்சர் அவர்தான். பள்ளிக்கு வந்ததும் அவர் கேட்கும் முதல் கேள்வி, “யாரெல்லாம் ஜட்டி போடல, எழுந்திருங்க ” எனக் கேட்பதாக இருந்தது. இதை அவர் உரத்தக் குரலில் கேட்டார். பள்ளியைத் தாண்டி ஊருக்குள்ளும் இக்கேள்வி எதிரொலிக்கும். ஊரார்களுக்கும் சேர்த்தே அக்கேள்வியை அவர் கேட்டார்.

“ பொம்பளப் பிள்ளைங்கள்ள யாரெல்லாம்டி போடல, எழுந்திருங்கடி” சொல்லிக் கொண்டே, பிரம்பைக் முகவாய்க்குக் கொடுத்து, எழுப்புவார். அவரது கேள்விக்கு முதல் ஆளாக சுசிலா எழுந்திரிப்பாள். அவள், முதல் வரிசையில், முதல் ஆளாக உட்கார்ந்திருக்கிறவள். அவளைத் தொடர்ந்து புனிதா, கவிதா, ரூபினி என எழுந்தார்கள்.

“ நீட்டுங்கடி கைய..” ஓங்கிய வேகத்தில் பிள்ளைகளுக்கு அடிவிழும். வலி, வாளால் வெட்டுண்டு விழுந்து விட்டதைப்போல ரணம் கொடுக்கும். எல்லாவற்றுக்கும் அவர் அடி கொடுத்துவிடுவதில்லை. ஆனால் ஜட்டி விசயத்தில் அவர் படு கறார். சேட்டை, குறும்பு, வம்புத்தும்புகளுக்கு அடிகொடுக்கையில் பையன்களுக்கே அடி செமத்தியாக விழும். ஜட்டி விசயத்தில் பெண்களையே பின்னி எடுப்பார். அடி வாங்கும் பிள்ளைகள், கைகளை அத்தனை வேகமாக உதறி, ஒரு கையால் மறுகையை இறுக முறுக்கி, மடிக்கு கொண்டுசென்று வலியை ஆழ்த்திக் கொள்வார்கள்.

வகுப்பில், குணாளன் ஒருவனைத் தவிர மற்றவர்கள் அடி வாங்குவார்கள். குணாளன் அடிவாங்கித் துடிப்பவர்களைப் பார்த்து சிரிக்கவோ, ரசிக்கவோ செய்யாமல் அத்தனை அமைதியாக உட்கார்ந்திருப்பான்.

டீச்சர் மேகலா, குணாளனை அருகினில் அழைத்து, அவனது முதுகைத் தட்டிக் கொடுத்து, அவனுக்கொரு கல்கோனா மிட்டாய் எடுத்துக் கொடுத்தார். “குணாளன் நல்ல பிள்ள. அவனுக்காக எல்லாரும் கைத்தட்டுங்க” என்றார். அடி வாங்கி வலியில் ரணமாய் உட்கார்ந்திருந்தவர்கள் கைக் கொட்டுனார்கள்.

” எல்லாம் ஐந்தாம்பு வந்திட்டீங்க. இனி நீங்கப் பெரிய பிள்ளைங்க. ஜட்டி நீங்க அவசியம் போடணும்” எனத் தினமும் தீண்டாமை ஒரு பாவச் செயல், பெருங்குற்றம், மனிதத் தன்மையற்ற செயல் என்கிற உறுதிமொழிக்கு நிகராக சொல்லி வந்தார். உள்ளாடை அணிவதன் அவசியம் குறித்த போதனை, தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீளும். குணாளன் பெயரைச் சொல்லி, அவ்வப்போது பாராட்டச் செய்வார். அவனது பெயரைச் சொல்கையில், அவன் ‘வெங்கலமத்து’ அத்தனை அமைதியாக உட்கார்ந்திருப்பான்.

இடைவேளை மணி அடிக்கையில், அவன் வகுப்பு மாணவர்கள், அவன் அணிந்திருக்கும் ஜட்டியைப் பார்க்க வட்டம் கட்டுவார்கள். அதற்கு அவன் இடம் கொடுக்க மாட்டான். “ டேய் குணா, உனக்கு யார்டா ஜட்டி வாங்கிக்கொடுத்தா? உங்கிட்ட எத்தனை ஜட்டிடா இருக்கு? என்னென்ன கலர்லடா இருக்கு?” எனக் கேட்கச் செய்வார்கள். அவர்களது கேள்விக்கு அவன் ஒரு பதிலும் சொல்லாமல், அத்தனை அமைதியாகக் கடந்துவிடுவான்.

டீச்சரின் கண்டிப்புக்குப் பிறகு, ஜட்டி அணிந்து வரும் முதல் மாணவியாக சுசிலா ஆனாள். சுசிலாவை அருகில் அழைத்து, அவளது பாவாடைக்கும் வெளியே, இடுப்பைத் தடவிப் பார்த்த மேகலா டீச்சர், ” இம், சுசிலா ஜட்டி போட்டிருக்கா. சமத்துக்குட்டி. எல்லாரும் அவளுக்குக் கைத்தட்டுங்க. இப்படிதான் பொம்பளப் புள்ளைங்க சமத்தா இருக்கணும் ” எனப் பாராட்டுகையில், சுசிலா அத்தனை பூரிப்போடு நின்றாள்.

“ டீச்சர் எனக்குக் கல்கோனா?” சுசிலா பயம் மறந்து டீச்சரிடம் கேட்டாள்.

“ ஆமாமடி…” என்ற டீச்சர், பேக் ஷிப்பைத் திறந்து பேக்குக்குள் கையை நுழைத்து ஒரு கல்கோனாவை எடுத்து அவளிடம் கொடுத்து, “ எல்லாம் இவளுக்கு இன்னொருக்கா கைக்கொட்டுங்க” என்றார்.

சுசிலா பெண்களில் நன்றாகப் படிக்கக் கூடியவள். ஆனால், கணக்கு வராது. அதுநாள் வரைக்கும் வகுப்புத் தலைவியாக இருந்த ரேகாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சுசிலா லீடர் ஆனாள். தினமும் பள்ளிக்கு வந்ததும், யாரெல்லாம் ஜட்டி அணிந்திருக்கிறார்கள், யாரெல்லாம் அணியவில்லை, எனப் பார்த்து டீச்சரிடம் சொல்வது அவளது வேலையாக இருந்தது.

புத்தகப் பையுடன் பள்ளிக்கு வருகையில் வருகின்ற வழியிலேயே பெண்கள் அவளிடம் இடுப்பைக் காட்டுவார்கள். அவள் தொடை, இடுப்பு பகுதியைத் தடவிப் பார்ப்பாள். சிலர், ஜட்டியின் பட்டியை இழுத்துவிட்டு, ‘பட்’ எனச் சத்தம் வரும்படியாகச் செய்வார்கள்.

பையன்களில் யாரெல்லாம் ஜட்டி அணியவில்லை, என்பதைப் பார்த்துச் சொல்பவனாகக் குணாளன் இருந்தான். ” ஜட்டி நீ போட்டுருக்கியா?” எனக் கேட்க மட்டும் செய்வான். ஆடையில் கை வைத்து, தடவிப் பார்க்கவோ, விரல் விட்டுப் பார்க்கவோ மாட்டான்.

மேகலா டீச்சர், ஜட்டி குறித்து நிறையச் சொல்வாள். ஜட்டி அணிவது முக்கியமில்லை. அதை ஈரத்தோடு அணியக் கூடாது. ஒரே ஜட்டியைத் தினமும் அணியக் கூடாது. துவைக்காமல் அணியக் கூடாது என்பது குறித்தெல்லாம் டீச்சர் வகுப்பு எடுத்தார். ஒரு நாள் கடையிலிருந்து, புது ஜட்டி வாங்கிவந்தவர், ஜட்டியை எப்படியெல்லாம் துவைக்க வேண்டும், எப்படிக் காயப்போட வேண்டும். எப்படி மடிக்க வேண்டும், எப்படி அணிய வேண்டும், என்பதைச் செய்முறையாக விளக்கிக் காட்டினார்.

“ குணாளன் இங்கே வா. ஜட்டி நீ எப்படிப் போடுவே. போட்டுக்காட்டு” எனச் சொன்னதும், அவன் எழுந்திருக்காமல் உட்கார்ந்தே இருந்தான். “ பய ரொம்பத்தான் வெட்கப்படுறான் ” என்றவர், ஜட்டியின் முன், பின் புறங்களைக் காட்டி, விரல்களால் ஜட்டியை விரித்துக் கொடுத்து, விளக்கினார். ஜட்டியை அவர் அத்தியாவசிய உடையில் ஒன்றாகக் கற்பித்தார். பள்ளிக்கூடம் வழியே, வேலைக்குச் செல்லும் பெற்றோர்களைக் கூப்பிட்டு “ உங்கப் பிள்ளைக்கு ஜட்டி வாங்கிக் கொடுத்தீங்களா?” எனக் கேட்கச் செய்வார். வாங்கிக் கொடுக்கவில்லை, என்பாரிடம் நீங்களாவது போட்டிருக்கீங்களா, என்பார். அவர்கள் முகத்தில் வெட்கம் வழியே சிரிப்பார்கள்.

“நீங்கப் போட்டுப் பழகில்ல, புள்ளைங்க போடும்” என்பார். இதைக்கேட்டு பலர் தலை குனிவார்கள். ஊரார்கள் மேகலா டீச்சரை, ஜட்டி டீச்சர் என அழைக்கத் தொடங்கியிருந்தார்கள். அதற்காக அவர் வெட்கப்படவோ வர்த்தப்படவோ இல்லை.

குணாளனுக்கு எல்ஐசி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு ஊழியரை அவன் திருமணம் செய்துகொள்ள முன் வந்தான். திருமணப் பத்திரிகை வைக்க சுசிலா வீட்டுக்குச் செல்கையில், அவள் மாமன் மகனைத் திருமணம் செய்துகொண்டு நகரத்தில் குடியிருப்பது தெரியவந்தது. அவளைத் தேடிச் சென்றான்.

சுசிலா, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தாள். அவனைப் பார்த்ததும், ” குணா, என் கண்ண நம்பவே முடியல ” என்றவளாய் முகம் மலர்ந்தாள். ” டீ சாப்பிடுறீயா, காப்பி சாப்பிடுறீயா?” எனக் கேட்டாள். “தண்ணீரே போதும்” என்றான் குணாளன். அவள் அத்தனை வேகமாக டீ வைத்து ஆற்றிக்கொடுத்தவள், அவளது கணவரை அழைத்து வந்து, அவனிடம் அறிமுகம் செய்து வைத்தாள். இருவரிடமும் பத்திரிகை நீட்டிய குணாளன், ” குடும்பத்தோட கல்யாணத்துக்கு வந்திருங்க ” என்றான்.

” நிச்சயமாக, உறுதியாக ” என்றாள் சுசிலா. அவள் சொன்னதைப் போலவே, முதல் ஆளாக, மண்டபத்திற்கு வந்தாள். அவளை அழைத்துச் சென்று மணப்பெண் கோலத்திலிருந்த கனகாவிடம் அறிமுகம் செய்து வைத்தான் குணாளன். அப்பொழுதே இருவரும் அத்தனை நெருக்கமாக நீண்ட நாட்கள் பழகிக் கொண்ட தோழிகளாகிவிட்டிருந்தார்கள். மணப்பெண்ணை அலங்காரப்படுத்துவதில் சுசிலா ஆர்வம் காட்டினாள்.

குணாளன் கனகா தம்பதிக்குத் தலைப் பிரசவத்தில் மகன் பிறந்தான். சுவீதன். அவன் இரண்டு வயதைத் தாண்டுகையில், கனகா அவனுக்கு ஜட்டி அணிவிக்கையில் ஜட்டிக்குளிருந்த எறும்பு அவனைக் கடித்துவிட்டிருந்தது. வலியில் துடிதுடித்துப்போன அவன் ஜட்டியை ஒவ்வாமையாகப் பார்த்தான். ஜட்டி என்றாலே கண்ட இடத்தைக் கடித்து வைக்கும் ஆடையாக நினைத்து அதை அணிய மறுத்தான். அவனுக்காகத் தாய் வாங்கிவரும் ஜட்டியை அவன் தலையைச் சுற்றி தூரத்தில் எறிந்து விடுகிறவனாக இருந்தான். “ நான்தான் டவுசர் போட்டிருக்கேன்ல. பின்னே ஏன்ம்மா ஜட்டி?” என வாதம் செய்தான்.

இப்போது சுவீதனுக்குப் பத்து வயது. “இனியும் நீ ஜட்டி அணியாது, அம்மணமாகத் திரிவது நல்லதல்ல” என மகனுக்கு வகுப்பெடுத்தாள்.

” ஓ அப்பா, சின்ன வயசிலேயே ஜட்டி போட்டுக்கிட்டவர். அவருக்குப் பொறந்த நீ ஜட்டி போட மாட்டேனு அடம் பிடிக்கிறீயேடா ” எனக் கனகா அவனது காதைப் பிடித்துத் திருகி, கேலி செய்தாள். அப்படியாகக் கேட்கையில், குணாளன் மனைவியிடம் கேட்டான், ” சின்ன வயசிலே நான் ஜட்டி அணிஞ்ச விசயம் உனக்கெப்படி தெரியும்?”

” தெரியும் ” என்றவளாய், ஒரு சிரிப்பு சிரித்தாள் கனகா.

” அதான் எப்படினு கேட்கேன் ”

” சுசிலா சொன்னாள்”

” எந்த சுசிலா?”

“உங்க கூட படிச்சவங்க. நம்ம கல்யாணத்துக்கு மொத ஆளா வந்தாங்களே, நீங்க அறிமுகப்படுத்தி வச்சீங்களே, அவங்க”

“ அவளா சொன்னாள்! என்ன சொன்னாள்?”

” நல்லா படிப்பீங்களாம். எல்லாத்திலேயும் பெர்ஃபெக்டாம். அவங்கலெல்லாம் ஜட்டி போடாம வந்து, டீச்சர்க்கிட்ட திட்டும், அடியும் வாங்குவாங்களாம். நீங்க மட்டும் குட் வாங்குவீங்களாம்”. இதைச் சொன்ன கனகா,

உதட்டைப் பிதுக்கவும் இமைகளை வேகமாக அடித்துக்கொள்ளவும் செய்தாள். புருசனின் குழந்தைப் பருவ அந்தரங்கம் இன்னொருவர் மூலமாக தனக்குத் தெரிந்துவிட்டது, என்கிற மகிழ்ச்சியை விடவும், இதையெல்லாம் இன்னொரு பெண் தெரிந்து கொள்ளுமளவிற்கு, இந்த மனுசன் நடந்திருக்கிறாரே என்கிற அருவறுப்பு அவளது முகத்தில் ஈயாடியது.

எப்பொழுதெல்லாம் ஜட்டி அணிய மாட்டேனென, சுவீதன் அடம் பிடிக்கிறானோ, அப்பொழுதெல்லாம் இதைச் சொல்லிக் காட்டுவதாக இருந்தாள். ” உன் அப்பா சின்ன வயசுல ஜட்டி போட்டவர்டா. அவருக்குப் பிறந்த நீ இப்படியா இருப்பே ?”

இதைச் சொல்லிக் கேட்டதில் அவனுக்கு மனனமே ஆகிவிட்டது. ஒரு நாள் சுவீதன் கேட்டான், “அப்பா, நீங்க நெஜமாகவே ஏ வயசுல ஜட்டி போட்டீங்களா?”

” புள்ள கேட்கிறான்ல. உண்மையச் சொல்லுங்க ?”

குணாளனால் அப்போதைக்கு ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை.

அன்றைய இரவு, கணவனை எழுப்பிக் கேட்டாள் . “இல்லைதானே? ” .

” என்ன இல்லைதானே?”

“ அஞ்சாம் வகுப்பு படிக்கையிலேயே ஜட்டி?”

“ இம், இல்ல” என்றான் குணாளன்.

“ பிறகு இந்தப் பாராட்டு, கல்கோனா, வெரிகுட், கைத்தட்டல் எல்லாம் ?”

குணாளன் புன்முறுகச் சிரித்தான்.

” நீங்க மட்டும் சிரிச்சா எப்படியாம்? சொன்னா நானும் சிரிப்பேன்ல ”

” அப்ப எனக்கு ஜட்டின்னா என்னன்னே தெரியாது. ஜட்டி போடாதவங்கள எழுந்திருக்க சொன்னாங்க மேகலா டீச்சர். நான் அப்படின்னா என்னன்னே தெரியாம உட்காந்திருந்தேன். நான் ஜட்டி போட்டிருக்கேனு டீச்சர் நெனச்சிட்டாங்க. என்னைப் பாராட்டி, கல்கோனா கொடுத்தாங்க”

கனகா வெடியெனச் சிரித்தாள். “அதானே பார்த்தேன். நீங்களாவது அந்த வயசில ஜட்டி போட்டிருப்பதாவது. நீங்க போட்டுருந்தில்ல, நம்ம புள்ள போடுவான்” என்றவாறு வேறொரு சுதியில் சிரித்தாள்.

” ஆமாம், எப்பத்தான் நீங்க ஜட்டி போட்டீங்க?”.

“ அது என்னோட அந்தரங்கம். அதெயெல்லாம் நீ தெரிஞ்சிக்கிற கூடாது”

கனகாவுக்கு தொண்டைக்குள் சிரிப்பு வந்தது. குமிழ் உடைபடுவதைப்போல சிரித்தவள், “நான்னா சொல்லட்டா?” எனக் கேட்டாள்.

குணாளனின் உடம்பு சட்டென வியர்த்து விட்டது. “ உனக்குத் தெரியுமா, எப்ப, சொல்லு பார்க்கலாம்?”

“ ஆறாம் வகுப்பு படிக்கிறப்ப” என்றவள், “ சரியா?” எனக் கேட்டாள்.

அவளை அவன் வியப்புற பார்த்தவன், வெட்கத்தால் சிவந்தவனாய் எச்சிலை விழுங்கினான். “ மரத்தடியில வச்சி மேத்ஸ் டீச்சர் கிளாஸ் எடுத்தாங்க. உங்கள எறும்பு கடிச்சிருச்சு. நீங்க கடியில துடிச்சீங்க. உங்கள தனியே அழைச்சிக்கிட்டு போன டீச்சர், டவுசரை அவிழ்த்து பார்த்திட்டு, ஜட்டி ஏன் போடலணு கேட்டாங்க. நீங்க அம்மா வாங்கித்தரலைன்னு சொன்னீங்க. அவங்க பணம் கொடுத்து ஒரு ஜோடி ஜட்டி வாங்கிக்கிற சொன்னாங்க” என்றவள் சரியா, என்பதைப் பார்வையால் கேட்டாள்.

அவரது உடம்பு வியர்வையில் குளித்ததைப் போல ஆகிவிட்டது. உதடுகள் படபடவென அடித்துக்கொண்டன. அவள் சொன்னது மிகச் சரியாக இருந்தது.

“ இதெல்லாம் ஒனக்கு யார் சொன்னா?” எனப் பரிதவிக்கக் கேட்டான், குணாளன். “ இதை நான் சொல்லமாட்டேன். ஏன்னா இது அந்தரங்கம்” என்றவளாய் கொடுப்புக்குள் சிரித்தாள் கனகா.

 

– அண்டனூர் சுரா

 

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.