அமரர் சபேசனின்…. “ காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் “…. மெல்பனில் நடந்த நூல் வெளியீடு!
தமிழ்த்தேசியப்பற்றாளர் அமரர் சபேசனின் கனவை நனவாக்கியதன் பெறுபேறுதான்
“ காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் “
மெல்பனில் நடந்த நூல் வெளியீட்டில்
திருமதி சிவமலர் சபேசன் ஏற்புரை!
அமரர் சபேசன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விக்ரோரியா தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், முதலான அமைப்புகளிலும் மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலியிலும் தனது பங்களிப்பினை தொடர்ச்சியாக வழங்கிவந்தவர் என்பதை அனைவரும் நன்கு அறிவீர்கள்.
அவ்வாறு தொடர்ந்து இயங்கிய அவரது இறுதி மூச்சு கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி நின்றுவிட்டது.
அப்போது அவருக்கு 65 வயது.
மேலும் பல வருடங்கள் வாழ்ந்திருக்கவேண்டியவர், விதியின் சதியால், எங்கள் அனைவரையும் விட்டு, அவர் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.
அவர் எம்மிடம் விட்டுச்சென்றிருப்பது, அவரது இரண்டு அருமைப்பிள்ளைகளும், அவர் பற்றிய பசுமையான நினைவுகளும்தான்.
அத்துடன் அவர் தான் எழுதிய வானொலி உரைகளையும் இதர படைப்புகளையும் எமது சமூகத்திடம் விட்டுச்சென்றுள்ளார்.
முடிந்தவரையில் அனைத்தையும் படித்துப்பார்த்தேன்.
அவருடன் தமிழ் நாட்டில் பல இடங்களுக்கும் பயணம் சென்றேன். அவர் எனக்கு அங்கே பல எழுத்தாளர்களையும் தமிழ் உணர்வாளர்களையும், தலைவர்களையும் அறிமுகப்படுத்தினார்.
அவர்களில் ஒருவர்தான் சபேசனின் நீண்டநாள் நண்பரும் எழுத்தாளரும் தமிழ்நாடு திராவிடர் இயக்கத் தமிழர்பேரவை இயக்கத்தை நிறுவியவருமான மதிப்பிற்குரிய உயர் திரு. சுபவீரபாண்டியன் அவர்கள்.
அவரை சுருக்கமாக “ சுபவீ “ என அழைப்போம்.
மெல்பனில் சில மாதங்களுக்கு முன்னர், சபேசனின் நண்பர்கள் நடேசன், சுந்தரமூர்த்தி, முருகபூபதி, இளங்கோ ஆகியோரின் முன்முயற்சியினால் நடத்தப்பட்ட இணைய வழி காணொளி அரங்கில் சுபவீ அவர்களும் உரையாற்றினார்.
அந்த அரங்கில், சபேசனின் கட்டுரைகளை தொகுத்து வெளியிடவிரும்பும் எனது நோக்கத்தை தெரிவித்தேன்.
அந்த நோக்கம் தற்போது நிறைவேறியிருக்கிறது.
காலச்சுவடு இதழின் ஆசிரியர் கண்ணன் அவர்கள் ஒரு தடவை மெல்பனுக்கு வருகை தந்தபோது, எமக்கு அறிமுகமானார்.
சபேசனுக்கு புத்தகங்கள் மீது அளவுகடந்த பிரியம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சபேசனும் காலச்சுவடு இதழ், மற்றும் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்கள் மீது விருப்பம் அதிகம்.
சபேசனை மெல்பனில் அறிமுகமாகிக்கொண்ட காலச்சுவடு கண்ணன் அவர்கள், இந்த காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூலை அழகாக அச்சிட்டு தந்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.
எமது குடும்ப நண்பர் நவரத்தினம் இளங்கோ அவர்களின் அறிமுகத்தினால், இந்த நூலுக்குரிய அட்டைப்படத்தை தமிழ்நாடு ஓவியர் திரு. சரவணா அபிராமன் வரைந்து தந்தார். அவருக்கும் எமது மனமார்ந்த நன்றி.
கடந்த ஆண்டு மே மாதம், சபேசன் மறைந்து ஓராண்டு நினைவு தினம் வந்தபோது, இந்த நூலை வெளியிடவேண்டும் என்றுதான் விரும்பியிருந்தேன். அதற்காக மண்டபமும் தெரிவுசெய்தேன். ஆயினும் கொவிட் பெருந்தொற்றினாலும், தேசங்களில் ஏற்பட்ட முடக்கத்தின் காரணத்தாலும், விமானப்போக்குவரத்தில் நீடித்த நெருக்கடிகளினாலும் உரிய வேளையில் இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொள்ள முடியாமல் போய்விட்டது.
சபேசன், தமிழ் ஈழக்கனவுடன் வாழ்ந்தவர். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடத்தில் பேரபிமானம் கொண்டிருந்தவர். அவரை பலதடவை சந்தித்து கருத்துப்பரிமாறிக்கொண்டவர்.
மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலியில் தான் தொடர்ச்சியாக நிகழ்த்திய உரைகளையும் ஊடகங்களில் தான் வெளியிட்ட அரசியல் ஆய்வுகளையும் தொகுத்து தனி நூலாக வெளியிடவேண்டும் என்ற எண்ணத்திலேயே சபேசன் தனது காலத்தை கடத்திவிட்டிருந்தார்.
அவ்வாறு தான்கொண்டிருந்த எண்ணத்தை ஒரு தடவை அவர் தேசியத்தலைவர் வே. பிரபாகரனிடம் தெரிவித்தபோது,
“ விரைவில் அதற்கு ஆவனசெய்யும். நானே அதனை வெளியிட்டு வைக்கின்றேன் “ என்று அவரும் சபேசனை உற்சாகப்படுத்தி ஊக்கமளித்திருந்தார்.
எனினும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடமுடியாமல், இறுதி யுத்தப்பேரழிவுகளினால் மனஉளைச்சலுக்கு சபேசன் ஆளாகநேர்ந்தது.
சபேசன் எழுதி – ஒலிபரப்பி தொகுத்து வைத்திருந்த அனைத்து ஆக்கங்களையும் படிக்கின்றபோது, அது ஈழத்தமிழரின் வரலாறாகவும், அதனூடாக வெளிப்பட்ட தமிழ் உணர்வாகவும் ஈழத்தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த தீர்க்கதரிசனமாகவும் தென்பட்டது.
அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளை இந்நூலில் தொகுத்திருக்கின்றேன்.
சபேசன், தொடர்ச்சியாக அரசியல் ஆய்வு, சமூகம், கலை, இலக்கியம், பூகோள அரசியல் பற்றியெல்லாம் எழுதிவந்திருப்பவர். அவற்றில் பல கட்டுரைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு, சில ஆங்கில ஊடகங்களிலும் இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் சபேசனால் 2004 – 2009 காலப்பகுதியில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர் மறைவதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு தீபாவளி தொடர்பாக பகுத்தறிவுச்சிந்தனையுடன் எழுதிய கட்டுரையையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் பேரவலம் சபேசனை மனதளவில் பெரிதும் பாதித்திருந்தது. அத்துடன் அவர் உளமாற நேசித்த தலைவரின் இழப்பும் தமிழ்மக்களின் அவல நிலையும் அவரை ஆழமாக பாதித்து பல சந்தர்ப்பங்களில் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியிருந்ததை நன்கு அறிவேன்.
தலைவரின் வீரமரணத்தையடுத்து, சபேசன் தினமும் அரைமணிநேரம் தலைவருக்காக பிரார்த்திப்பார். சபேசன் உடல்நலம் குன்றியிருந்த காலப்பகுதியிலும் தலைவரின் படத்துக்கு முன்னால் நின்று பிரார்த்திப்பதையும் அவதானித்துள்ளேன்.
சபேசன் உடல்நலம் குன்றியிருந்த வேளையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அருகிலேயே இருந்தேன். அவ்வேளையில் அவரது வாயிலிருந்து இந்த வாக்கியங்கள் உதிரும்:
“ தலைவர் கூட்டத்துக்கு அழைக்கிறார். நான் போகவேண்டும். யோகியும் தலைவருடன் நிற்கிறார். “ இவ்வாறு சொல்லிக்கொண்டு மருத்துவமனை கட்டிலிலிருந்து எழுந்திருப்பார். ஆனால், அவரால் நடக்கமுடியாத நிலை. அவரது மருத்துவர்கள், தாதியர்கள், “ உங்களுக்கு பிராணவாயுவும், உயிர்ச்சத்தும் ஏற்றப்படுகிறது. குணமடைந்ததும் கூட்டத்திற்கு செல்லலாம் இப்போது ஓய்விலிருங்கள். “ என்பார்கள்.
சபேசனின் இறுதி மூச்சு அடங்கும்வரையில் அவரது நா உச்சரித்தது தலைவர் என்ற சொல்லைத்தான். திடீரென ஒரு நாள் “ மாற்றம் வரும் என்று நினைத்தேன். ஏமாற்றம்தான் வந்தது . “ என்றார்.
அந்த வார்த்தைகள் இன்னமும் எனது செவிகளில் ஒலிக்கின்றது.
தனது புத்தகத்தை பார்த்துவிடவேண்டும் என்று விரும்பியிருந்தார், ஆனால், அவருக்கிருந்த உடல் உபாதைகளினால் அதுவும் சாத்தியமாகவில்லை.
இன்று அவரது நூல் உங்கள் அனைவரதும் முன்னிலையில் வெளியிடப்படுகிறது.
அவரது ஆத்மா எங்கிருந்தாலும், இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் என்றும் நான் நம்புகின்றேன்.
இதுபோன்ற கூட்டங்களில் நான் பேசிப்பழக்கப்பட்டவள் அல்ல. ஆனால், இன்று பேசுவதற்கு நேர்ந்திருக்கிறது என்றால் அதற்கு இந்த நூல்தான் காரணம்.
சபேசனின் இறுதி ஆசைகளில் ஒன்றுதான் இந்த நூல். அதனை நிறைவேற்றிய மனநிறைவுடன் உங்கள் முன்னால் தோன்றியிருக்கின்றேன்.
இந்த வெளியீட்டு நிகழ்வில் சபேசனின் உருவப்படத்திற்கு விளக்கேற்றியவர்கள், சிறப்பு பிரதிகள் பெற்றுக்கொண்டவர்கள் அனைவருக்கும், இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றி.
இந்த ஆண்டு சபேசனின் நூல் வெளியீட்டில் நீங்கள் அனைவரும் இணைந்திருப்பது போன்று எதிர்காலத்தில் சபேசனின் நினைவாக வருடாந்தம் நாம் நடத்தவிருக்கும் சபேசன் நினைவரங்கு
நிகழ்ச்சிகளிலும் நீங்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கவேண்டும் என விரும்புகின்றேன். சபேசனின் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியை தலைமையேற்று சிறப்பாக நடத்தித் தந்திருக்கும், எனது கணவரின் நெருங்கிய உறவினர் – மதிப்பிற்குரிய கனகசபை அண்ணாவுக்கும், இந்த நிகழ்ச்சியை நடத்தி முடிப்பதற்கு துணைநின்ற அன்புச்சகோதரி திருமதி நிலாந்தி கனகசபை அவர்களுக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த நூல் வெளியீட்டு அரங்கில் உரையாற்றிய திருவாளர்கள் விவேகானந்தன், ஆருரன் ரவீந்திரன், வசந்தன், ஶ்ரீநந்தகுமார், முருகபூபதி ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
—0–