கலிபோனியா மாநிலத்தின் சாதி எதிர்ப்புக் கொள்கை!
தமிழர்கள் தவிர்த்து, பிற இந்தியப் பின்புலம் கொண்ட ஒருவரின் பெயரின் பின்னொட்டு அமெரிக்க மக்களுக்கு உள்ளது போல அது குடும்பப் பெயரைக் குறிப்பதல்ல. அது அவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று குறிக்கும் என்பது இந்தியர்களுக்கு நன்கு தெரியும். இவ்வாறு பெயரிடும் முறை பிறப்பின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட தலித் இந்தியரின் வழிவந்தோரின் பின்புலத்தைக் காட்டும் வகையில், அவர்களின் அடையாளத்தைப் பறை சாற்றும் விதமாக அமைந்து இந்த நூற்றாண்டில் அயல்நாட்டிலும் கூட அவர்கள் துன்புறுத்தப்படும் நிலையை ஒரு தொடர்கதையாக்கிக் கொண்டிருக்கிறது.
தமிழர்கள் நாம் 1930கள் தொடங்கி, பகுத்தறிவுப் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அறிவுரையால் அவ்வாறு சாதிப்பெயரைக் குடும்பப் பெயராகவும் பெயரின் பின்னொட்டாகவும் காட்டுவதில்லை என்ற வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டோம். இருப்பினும் இன்றும் இந்தியாவில் வாழும் ஒருசில தமிழரும், அயல்நாட்டில் வாழும் சிலரும் தன் சாதிப் பெயரை இணைத்துக் கொள்வதில் பெருமை அடைகிறார்கள். அவ்வாறு செய்பவர்கள் ஆழ்மனதில் தாங்கள் உயர்குலமாக இந்தியாவில் அடையாளம் காணப்படும் பிரிவினர் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்ற தீரா அவா கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதற்கு சில பெண்களும் விதிவிலக்கல்ல என்ற அவல நிலையும் உள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்தியப் பின்புலம் கொண்ட மாணவர் ஒருவர் தன் பெயரைச் சாதிப் பின்னொட்டுடன் குறிப்பிடுவார் என்றால் அமெரிக்க மாணவர்களுக்கு அந்தப் பெயரின் பொருளும் தெரியாது, அதற்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள சமுதாய தர நிர்ணயமும் தெரியாது என்பதுடன் ஒருவரின் பெயரை வைத்து அவருக்கு எந்த அளவு மதிப்பளிக்க வேண்டும் என்ற அளவு கோலும் அவர்களிடம் இல்லை. ஆகவே அது ஒரு பெயர் என்பதற்கு மேல் எவருக்கும் அக்கறையும் இல்லை. இது இந்தியப் பின்புலக் குடும்பப் பெயர் என்ற ஒரு புரிதல் மட்டுமே அவர்களிடம் இருக்கும்.
இவரிவர் இந்த இந்தப் பெயர்களை வைக்க வேண்டும், இவரிவர் இந்தக் கடவுளை வணங்க வேண்டும், இவரிவர் மட்டும் இந்த அடையாளக் குறியீட்டை அணிந்து கொள்ளலாம் என்பது போன்று சூழ்ச்சியுடன் மிகச் செம்மையாக திட்டமிட்டு வகுத்த பிறப்பு அடிப்படை வரையறைக் கட்டமைப்பு பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்த/இருக்கும் நாடு இந்தியா. பெண்களுக்கு என்றால் சொல்லவே வேண்டியதில்லை. தோற்றத்தைப் பார்த்தே அவரது இல்லறவாழ்வு பின்புலம் அறியும் அளவிற்குப் பல ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளார்கள். அனைவரையும் சமமாகப் பார்க்கும் மதிக்கும் மனநிலை இல்லாத நிலையே இதற்குக் காரணம்.
அமெரிக்காவில் வாழும் 25 விழுக்காடு இந்தியப் பின்புலம் கொண்ட ஒடுக்கப்பட்டவர்கள் சொல்லாலும் செயலாலும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக ‘ஈக்குவாலிட்டி லேப்ஸ்’ (Equality Labs) என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. இத்தகைய தாக்குதல் நிகழ்த்துவோர் பிற இந்திய வழிவந்தவர்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அமெரிக்க நிறுவனங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் இந்திய நாட்டுப் பின்புலம் தெரிந்த ஒருவர், மற்றொருவரின் பெயரைக் கேட்ட உடனே இந்தியாவில் அவர்களுக்கான சமூக மதிப்பு நிலையையும் அறிந்து கொள்வார். அவர்கள் ஒடுக்கப்பட்ட இனத்தவர் என்பது அவர்களின் பெயர் மூலம் தெரிந்தால் அவர்களை ஏற இறங்கக் கேலியாகப் பார்ப்பதும், சீண்டுவதும், அவர்கள் முன்னேற்றத்திற்கு இடையூறுகள் விளைவிப்பதும், மதிப்புக் குறைவாக நடத்துவதும் தொடங்கிவிடும். பல்கலைக் கழக வளாகங்களில் இத்தாக்குதலை எதிர் கொள்ளும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் இதை எங்கு முறையிடுவது என்று அறியாமல் மனதில் குமைந்து கொண்டிருந்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவர்களும், சமூகநல அக்கறை கொண்டோரும் பேதம் காட்டும் இத்தகைய நடவடிக்கைகளை கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்கள். இது குறித்து பல்கலை முறையீடுகளின் பொழுது, இது ‘இந்தியாவின் பிரச்சனை ‘ என்று பாதிக்கப்படாத இந்திய வழிவந்தோரே அக்கறையின்றிக் கடந்து சென்றதும் எதிர்கொள்ளப்பட்டது. கடுமையான முயற்சிக்குப் பிறகு கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பின் பாகுபாடு எதிர்ப்பு கொள்கை (anti-discrimination policy) விதியில் சாதிகள் அடிப்படையில் பேதம் கூறுவதும் இணைக்கப்பட்டது. 23 பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய நாட்டின் மிகப் பெரிய கல்வி அமைப்பான கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பின் இந்த அறிவிப்பே மாநில அளவில் அமெரிக்க மண்ணில் முதல் அறிவிப்பு என்பதும், கலிபோர்னியா மாநிலமே ஒடுக்கப்பட்ட பிரிவு இந்திய மாணவர்களின் நலம் கருதி முதன்முதலில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து ஹார்வர்ட் மற்றும் பிராண்டிஸ் பல்கலைக்கழகங்களும் இந்த வகையில் நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளன.
பியாண்ட் ஆக்சிடெண்ட் (Beyond Occident) என்ற பத்தியில் கட்டுரைகள் எழுதி வரும் அவதான்ஸ் குமார் (Avatans Kumar / @avatans) இந்திய அறிவுசார் பாரம்பரியம், வரலாறு மற்றும் தற்கால நிகழ்வுகள் தொடர்புடையவற்றில் ஆர்வம் கொண்டவராகக் கூறப்படுகிறார். அவரது கருத்துக் கட்டுரை ‘கலிபோர்னியா மாநிலப் பல்கலைக் கழகம் முன்னெடுத்துள்ள சாதி எதிர்ப்புக் கொள்கை இந்துக்களுக்கு எதிரானதா?’ (Is California State University’s Anti-Caste Policy Anti-Hindu? – India Currents) என்ற தலைப்பில் சென்ற வார ‘இந்தியா கரண்ட்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளது. புலம் பெயர்ந்த இந்தியர்களின் கண்ணோட்டத்தில் ஆராயும் கட்டுரை என்ற குறிப்புடன் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.
இந்து அமெரிக்க அறக்கட்டளை (Hindu American Foundation /HAF) உட்படப் பல இந்து அமைப்புகள், கலிபோர்னியா மாநிலத்தின் இந்தப் புதிய சாதி எதிர்ப்புக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றும், பேதம் காட்டுவதை எதிர்க்கும் சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிலையில், சாதி என்பதையும் அதனுடன் சேர்ப்பது தேவையற்றது என்று அவர்கள் வாதிடுவதாகவும் இக்கட்டுரை குறிப்பிடுகிறது. குறிப்பாக “சாதி” என்பதைப் பாகுபாடு காட்டும் பட்டியலில் இணைப்பதுதான், மதம் மற்றும் பண்பாட்டு அளவில் சிறுபான்மையான
இந்துக்களிடம் பேதம் காட்டி தனிமைப்படுத்துவது என்று இந்து அமெரிக்க அறக்கட்டளை குரல் எழுப்புகிறது.
முற்போக்கு மாநிலம் என்று மக்களால் கருதப்படும் கலிபோர்னியா மாநிலத்தில் இது புதிது அல்ல. ஏற்கனவே பள்ளி வரலாற்றுப் பாடநூல்களிலும் கலிபோர்னியா மாநிலம் இந்தியாவிற்கு எதிராகவும் இந்துக்களுக்கு எதிராகவும் அதன் சார்புநிலையைக் காட்டும் பிழையான பாடங்களைக் கொண்டுள்ளது. அதை நீக்கவே இன்றும் இந்து அமைப்புகள் நீண்ட காலமாக சட்ட வழியில் போராடி வரும் நிலையில், இந்துசமய எதிர்ப்பு கொண்ட தீயசக்திகளின் தீவிரப் பரப்புரையின் காரணமாக மாநில பல்கலைக்கழகம் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது என்றும் அவதான்ஸ் குமார் கூறுகிறார்.
இத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, அவர் மேலும் கூறியுள்ள கருத்துகள் இவரது வரலாற்று ஆர்வத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. அவர் கருத்துகளைச் சுருக்கமாகப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
மேற்குலகின் இந்த இந்துமத எதிர்ப்பு மனப்பான்மையின் துவக்கம் பிரிட்டிஷ் இந்தியாவின் காலனித்துவத்தின் பின்புலம் கொண்டது. தாங்கள் கைப்பற்றும் நாடுகளை பிரிட்டிஷ் காலனிய குடியேற்றங்களாக மாற்ற விரும்பிய பொழுது, அந்த நாடுகளில் வாழும் மக்களின் பண்பாட்டைக் குறை கூறுவதும், அவர்களைத் தீயவர்களாகவும், நாகரீகம் அற்றவர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும், பண்பாடு அற்றவர்களாகவும் விவரித்தே தங்கள் ஆட்சியை ஐரோப்பியர் விரிவாக்கினார்கள். தங்களை நல்லவர்களாகவும், நாகரீகமானவர்களாகவும், பண்பாடு கொண்டவர்களாகவும் உயர்வாகக் காட்டிக் கொண்ட அவர்கள், இந்தியாவையும் அதன் பண்பாட்டையும் கீழ்மையானதாகத்தான் உலகிற்குக் காட்டினார்கள். பெரும்பாலான ஆரம்பக்கால மேற்கத்திய எழுத்துக்களில் இந்தியாவின் “சாதி அமைப்பு” பற்றிய கருத்துக்களை இந்தச் சூழலில்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்தியர்களைப் பொருத்தவரை சாதி என்பது ஒருவர் பிறந்த சமூக அலகு மட்டுமே. சாதி குறித்த மேற்கத்தியர்களின் தவறான புரிதலால் இந்த நிலை ஏற்படுகிறது.
ஆங்கிலேயர்கள் இந்து சமுதாயத்தை நோயுற்ற சமுதாயமாகவும், பிராமண சாதியப் பாகுபாடு, உயர்வு தாழ்வு போன்ற சமூகத் தீமைகள் இந்து மதத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் தவறாகக் கருதினார்கள். “சாதி அமைப்பு” என்பது மேற்கத்தியர் பார்வையில் மட்டுமே உள்ளது. காலனித்துவக் கருத்தாக்கம் விட்ட இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் முன்னெடுத்து சாதிய அமைப்பு ஒரு சுரண்டல் முறை என்று தங்களின் பரப்புரைக் கருவியாக்கிக் கொண்டார்கள். இவ்வாறே இப்பொழுது இந்த ஈக்குவாலிட்டி லேப்ஸ்இந்துவிரோத அமைப்பு செயல்படுகின்றது. இது போன்ற போலி சமூக நீதி அமைப்புகள் இந்து மதத்தையும் அதன் ஆதரவாளர்களையும் இழிவுபடுத்துவதிலும், அவதூறு செய்வதிலும், வெறுப்பை ஊக்குவிப்பதிலும் ஈடுபட்டுள்ளன. இந்த அமைப்பு நன்கு உருவாக்கப்பட்டு தாராளமாக நிதியளிக்கப்பட்டு இயங்கும் ஒரு போலி சமூக நீதி அமைப்பு. இவர்கள் ஆய்வு அறிக்கை கலிபோர்னியா பல்கலைக்கழகக் கொள்கைக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டது. கார்னகி எண்டோவ்மென்ட்’ (Carnegie Endowment for International Peace) அறிக்கை இதற்கு மாறாக,
இவர்களின் ஆய்வறிக்கையில் உள்ளவை தெற்காசிய மக்களின் நிலையைப் பிரதிநிதிப்படுத்துவதாகக் கூற இயலாது என்கிறது, சாதி அமைப்பு முறை குறித்து வலுவான எதிர்க் கருத்துகளைக் கொண்டவருக்கு ஆதரவான அறிக்கையாக இது இருக்கலாம் என்கிறது.
அவதான்ஸ் குமார் அடுத்து சொல்லும் கருத்து, இது இந்துக்களுக்கு எதிரானது என்று அவர் கூறும் கருத்துக்கே முரணானது. சாதி என்பது இந்தியாவின் அகச்சமயங்கள் புறச்சமயங்கள் என அனைத்துச் சமயங்களிலும் நிலவும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு சமூகநிலை அமைப்பு. ஆனால் சாதி என்றால் அனைவரும் இந்து சமயத்திற்கானது என்றே பிழையாக எண்ணுகிறார்கள். சாதி அமைப்பு என்பது இடைக்கால ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாக்கம், அது இப்போது இந்திய நடைமுறையாக உள்ளது. அது இன்று இந்தியாவையும், குறிப்பாக இந்துக்களையும் வரையறுக்கும் நிலையிலும் உள்ளது. உலகம் முழுவதுமே வர்க்கம், நிலப்பிரபுத்துவம், கம்யூனிசம், இனவெறி, அடிமைத்தனம், நாசிசம், பாசிசம், கிர்மிதியா – ஒப்பந்தத் தொழிலாளர் அமைப்பு போன்ற பல சுரண்டல் பாகுபாடு அமைப்புகள் இருந்தபோதிலும் இந்தியாவின் சாதி அமைப்பு மட்டும் மிக மோசமாக தாக்குதலுக்கு உள்ளாகிறது.
சாதி அமைப்பு பற்றிக் கூறப்படும் கதைகள் சமூக அநீதிக்கு இந்துக்களையும் இந்து சமயத்தையும் தவறாகக் குற்றம் கூறுகிறது. ஆனால் இந்து சமூகம் பல சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்ததைக் கருத்தில் கொள்ளவில்லை. குறிப்பாக 15-17 ஆம் நூற்றாண்டின் பக்தி இயக்கம் சமூகப் பாகுபாடுகளைச் சீர்திருத்தியது. இந்திய-எதிர்ப்பு மற்றும் இந்து-எதிர்ப்புச் சக்திகள் கலிபோர்னியா மாநிலத்தின் சாதி எதிர்ப்புக் கொள்கையின் பின்னணியில் உள்ளன. அவை இது போன்ற சாதி கதைகளை அபகரித்துள்ளன. இந்தியர்களான நாம், குறிப்பாக இந்துக்கள், நமது நூல்கள் மற்றும் மரபுகள், பண்பாடு, சமூகம் மற்றும் அரசியல் ஆகியவற்றை மீட்டெடுப்பது இன்றியமையாதது. குறைந்தது நம் பண்பாட்டை அறியாதவர் அது குறித்த முடிவுகளை எடுப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது என்று எழுதியுள்ளார் அவதான்ஸ் குமார்.
— இந்த அறைகூவல் வழி இவர் சொல்ல வருபவை யாவும் உண்மைக்குப் புறம்பான செய்திகள். உலகில் பலநாடுகளில் நிலவிய அல்லது நிலவும் ‘வர்க்க பேதம்’ பிறப்பு அடிப்படையில் அமைந்தது அல்ல.
— அவ்வாறு பிறப்பு அடிப்படையில் மக்களிடையே நிலவிய பிற பாகுபாடுகளும் நாகரிகம் அடைந்த காலத்தில் மனித நேயத்திற்கு எதிரான பிழை என்று உணர்ந்து கைவிடப்பட்டன. அவை குற்றம் என்றும் சட்டங்கள் இயற்றி தடை செய்யப்பட்டன.
— அந்நாடுகளில் மனிதர்கள் தங்கள் மனதில் பேதம் நினைத்தாலும் நாட்டின் சட்டத்திற்கு எதிரே குற்றம் செய்யத் துணிய மாட்டார்கள், அவ்வாறு துணிந்தாலும் சட்டம் அவர்களைத் தண்டிக்காமல் விடாது. இந்தியக் குடியரசுத் தலைவரையே பிறப்பு அடிப்படையில் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காத சமயம் இந்து சமயம். அந்த நிலையில் இருக்கிறது இந்தியாவின் சட்ட வரையறைகள். பேதம்
கூறும் சனாதனம் ஒரு வாழ்வுமுறை என்று இந்து சமயத்தினர் கூறிக்கொண்டும் இருக்கிறார்கள் இந்தச் செய்தியை அறிந்த எவரும் இன்றைய நாளில் இந்தியா சீரமைக்கப்பட்டு அங்கு சமத்துவம் நிலவுகிறது என்பதை நம்பமாட்டார்கள்.
— இன்றைய இந்திய நாட்டின் 80 விழுக்காடு மக்கள் இந்துக்கள். இன்று புறச்சமயங்கள் என்று கைகாட்டப் படுபவர்கள் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. இந்துக்கள் என்று ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்ட அனைவரும் இந்திய மண்ணில் தோன்றி பிற சமயங்களில் தங்களுக்கு விடிவு கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் மதம் மாறியவர்கள். அதனால் அவர்களிடமும் பிரிவு இருக்கிறது என்று சொல்லிவிட்டு, கையோடு இந்து மதத்தை மட்டும் குற்றம் சாட்டுவது தவறானது என்று கூறுவதை என்னவென்று புரிந்து கொள்ளமுடியும்.
— இந்தியாவின் சாதிப் பிரிவினைக்குக் காரணம் இடைக்கால ஐரோப்பா என்பதும், காலனித்துவக் கற்பனையைக் கம்யூனிஸ்ட்டுகள் கையில் எடுத்துக் கொண்டார்கள் என்பது போன்ற கருத்துக்களை இந்திய வரலாறு தெரிந்த எவரும், குறிப்பாக திருப்பாணாழ்வார் மற்றும் திருநாளைப் போவார் கதைகளைப் படித்து வளர்ந்த தமிழர்கள் எங்காவது நம்புவார்களா? இது போன்ற கருத்துக்களை முன்வைப்பவர் எப்படி ஓர் இந்திய வரலாற்று ஆர்வலராகவோ, அல்லது ஓர் ஆய்வாளராகவோ அல்லது ஒரு நேர்மையான செய்தியாளராகவோ கூட இருக்க முடியும்?
— சிஸ்கோ நிறுவனத்தில் பணியாற்றிய சுந்தர் ஐயர் மற்றும் ரமணா கொம்பெல்லா (Cisco engineering managers Sundar Iyer and Ramana Kompella) என்ற இரு பொறியியல் நிர்வாகிகள் சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த ஒருவரைத் துன்புறுத்தி பணியிடத்தில் சாதியப் படிநிலையைக் கடைப்பிடித்ததற்காக கலிபோர்னியா சட்டம் சிஸ்கோ நிறுவனத்தை நீதிமன்றத்திற்கு இழுத்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாகவும் இருக்கையில் எதன் அடிப்படையில் இந்து மதத்தைப் பிழையாகக் குறைகூறுகிறார்கள் என்று இந்து அமெரிக்க அறக்கட்டளை போன்ற இந்து மதப் பிரிவினர் புலம்புகிறார்கள் என்பதும் புரியவில்லை.
— தாங்கள் பாதிக்கப்பட்டதாக முறையிடுபவர்களையும், உண்மையைக் கூறுபவர்களையும், சமநீதிக்குக் குரல் எழுப்புபவர்களையும், மனிதநேயத்திற்காகப் போராடுபவர்களையும் இந்தியாவிற்கு எதிரானவர்கள், இந்து சமயத்திற்கு எதிரானவர்கள் என்று பழி போடுவதைச் செவிமடுக்க இந்தியாவில் வேண்டுமானால் இந்து சமயத் தீவிரவாதிகள் இருக்கலாம், ஆனால் சட்டத்திற்கு மதிப்பளிக்கும் அமெரிக்க நீதிமன்றங்கள் சார்பு நிலைகொண்ட கருத்துக்களை ஏற்காது. இந்திய வரலாற்றில் இவ்வாறு நிகழ்ந்ததாக இந்திய வரலாறே கூறினால், அதை அமெரிக்கக் கல்வி நிறுவனமும் தன் உலக வரலாற்றுப் பாட நூலில் இந்தியாவை அறிமுகப்படுத்தும் பொழுது, பாடத்தில் அவ்வாறு குறிப்பிடத்தான் செய்யும். அதைச் சமய எதிர்ப்பாக திரித்துக் காட்ட முற்படுவது சூழ்ச்சியான செயல்பாடு.
அமெரிக்க மண்ணில் அமெரிக்கச் சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்தால் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்படும், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். அயல்நாடு செல்லும் எந்த ஒரு விமானப் பயணத்தில் கூட செல்லும்
நாட்டின் சட்டத்தினை மதித்து நடக்கவும் என்று பயணிகளுக்கு அறிவுரை கூறப்படும் என்பதை இங்கு நினைவு கூரலாம். அயல் நாட்டில் குடியேறும் இந்தியர்களின் செயல்பாடுகள் அந்நாட்டினரின் நகைப்பிற்கு இடமாக இருக்கக் கூடாது என்பதை முதல் கொள்கையாகக் கொண்டு விமானம் ஏற வேண்டும். இந்து சமய சார்பாளர்களின் உண்மைக்கு மாறான இதுபோன்ற அலப்பறையைக் கேட்டால் இன்னும் எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார் என்ற பாடல்தான் நினைவிற்கு வருகிறது.
தகவல் :மின்தமிழ் மின்னஞ்சல் குழுமத்திலிருந்து பகிர்ந்தவர் ஏலையா க.முருகதாசன் ,ஜேர்மனி
நன்றி: தேமொழி அமெரிக்கா