Featureகதைகள்

நடுகைக்காரி!…. 34 ….. ஏலையா க.முருகதாசன்.

(அதிகம் பேசாமல் அமைதியாக தேத்தண்ணிiயும் குடிச்சு வடையையும் சாப்பிட்ட ஞானம்’ இண்டைக்கு பாறுவை பொம்பளை பார்க்க ஆரோ வருகினமாம்’ என்று பாறு சொன்னவள் அதுதான் ஒரே யோசனையாக இருக்குது என்கிறான.;)

பாறுவைப் பொம்பிளை பார்ப்பதற்காக இன்று வருவதாக நேற்று பாறு சொல்லிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துவிட்டு அவளைப் பிடிச்சுக் கொண்டு விட்டது என்று வந்து பார்க்கப் போற பொடியன் சொல்லி பாறுவையும் தாயும் தகப்பனும் சம்மதிக்க வைச்சுவிடுவார்களோ என ஞானத்தின் மனம் இருப்புக் கொள்ளாமல் அலைபாஞ்சு கொண்டிருந்து.

என்னவெல்லாவோ அவன் மனதில் கற்பனைகளாக ஊகங்களாக வந்து கொண்டிருந்தன.பாறு சம்மதிக்காவிட்டாலும், எங்கடை ஆட்களுக்குள்ளை படிச்சு உத்தியோகம் பார்க்கிற மாப்பிளையை சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைக்காது என்று புத்திமதி சொல்லி அவளைச் சம்மதிக்க வைச்சு விடுவார்களோ என்று கற்பனை பண்ணினவன், ச்சாய்ச்சாய் பாறு உறுதியானவள் ஒரு போதும் மனசை மாற்ற மாட்டாள் என்று ஆறுதலடைந்தவன், அந்த ஆறுதலையும் உடைக்கிற மாதிரி,எனக்கும் பாறுவுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக தாய்க்கு சாடைமாடையாகத் தெரியுமென்று ஒரு நாள் பாறு சொன்னவள், அதனால்தான் பாறு சம்மதிக்கிறாள் இல்லை என்றறிந்த தாய் „ பாறு நீ யாரை மனசிலை வைச்சிருந்து இந்தச் சம்பந்தத்திற்கு சம்மதிக்கிறாய் இல்லை என்று எனக்கும் தெரியும்.எங்கடை ஆட்களுக்குள்ளை நீ ஒருத்தனை விரும்பியிருந்தியெண்டால் கட்டாயம் நீ விரும்பின பொடியனையே செய்து வைச்சிருப்பம், ஆனால் நீ விரும்பினதோ எட்டாத உயரத்து ஆட்களிடமிருக்கும் ஒரு பொடியனை.கொப்பாவுக்கு இன்னும் வடிவாய்த் தெரியாது,அந்த ஆசையை விட்டிட்டு எங்கடை ஆட்களுக்கை செய்,நீ

அடம்பிடிக்க ஞானமும் அடம்பிடிக்க கடைசியிலை இரத்தக்களரியிலை போய் முடியும்,வேண்டாம் எல்லாத்தையும் மறந்துவிடு எங்கடை மானம் மரியாதைக்காக உன்ரை மனசை மாத்து „என்று கட்டாயப்படுத்த பாறுவும் சில வேளை தன்ரை தலைவிதிப்படி நடக்கட்டும் என்று வேதனையுடன் தாய் தகப்பனின்

சொல்லைக் கேட்டுவிடுவாளோ என அவன் பதைபதைப்புக்கு ஆளாகினான்.

தேத்தண்ணிக் கடையைவிட்டு நண்பர்களுடன் வெளியே வந்தவன், அம்பனைச் சந்தி மதகில் நண்பர்களுடன் உட்கார்ந்தவன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான்.

அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்த சண்முகராசா’ ஞானம் என்ன அமைதியாயிருக்கிறாய், இப்ப மனசைப் போட்டு குழப்பி என்ன பிரயோசனம், முன்னுக்கே இதை யோசிச்சிருக்க வேணும் நீ சரியான இடத்துப் பெண்ணைத்தான் காதலிக்கிறாயா இல்லையா என்று எதையும் யோசிக்காமல் போற போக்கிலை காதலிச்சுப் போட்டு இப்ப நீ மண்டையைப் போட்டுக் குழப்பிறாய் நாளைக்கு உங்களுக்கு தெல்லிப்பழை யூனியனிலை இன்ரர்வியூவும் இருக்கு,அதற்கு ஆயத்தமாக வேணும் இந்த நேரம் பார்த்து இப்படி மூளையை விட்டு யோசிச்சியெண்டால் நாளைக்கு நீ என்ன செய்யப் போறாய்…’ என்று சொல்லி முடிக்க முந்தி’ நீ பேசாமலிருக்கிறியா காதலென்றால் சாதி பார்த்து சனம் பார்த்தா வரும், எனக்கு நீ புத்தி சொல்ல வேண்டாம்’ என்று கோபமாகச் சொன்ன ஞானம் கலங்கிய தன் கண்களை துடைச்சுக் கொள்கிறான்.

ஞானம் தன்னைப் பார்த்துக் கோபப்பட்டு ஒருமையில் கதைப்பான் என்பதை சண்முகராசா மட்டுமல்ல மற்றைய நண்பர்களும் எதிர்பார்க்கவில்லை.

ஒருநாளுமு; ஞானம் நண்பர்களுடன் ஒருமையில் கதைப்பதேயில்லை.இன்றைக்கு ஞானம் இருந்த மனநிலையில் அப்படிக் கோபபப்பட்டிருக்கிறான்.

கோபப்பட்டு அவன் கதைச்ச போதும் அவன் கண்களைத் துடைச்சதைக் கண்டதும் சண்முகராசாவும் நண்பர்களும் அமைதியாக இருந்தார்கள்.

திடீரென்று மதகைவிட்டு எழுந்த ஞானம், தேத்தண்ணிக் கடையடியில் நின்ற சைக்கிளை எடுத்துக் கொண்டு அவர்களருகில் வந்தவன் சண்முகராசாவிடம்’ சொறி சண் நானிருந்த மனநிலையிலை நீ என்று சொல்லிவிட்டன்,தயவு செய்து பிழையாய் நினைக்காதையுங்கோ’ என்று சொல்ல சண்முகராசா „ நாங்கள் பிரண்ட்ஸ் உங்களை பிழையாய் நினைப்பேனா, உங்கடை மனநிலை இப்ப குழம்பிப் போய்க் கிடக்குது,நீங்கள் எப்பொழுதும் மரியாதை குடுத்துக் கதைக்கிறனீங்கள்,

எங்களுக்கள்ளையே ஒருத்தரையொருத்தர் நீங்கள் என்று மரியாதையாக கதைக்க வைச்சனீங்கள்,இந்தப் பழக்கந்தான் இப்ப நாங்கள் எல்லாராரோடையும் நீங்கள் என்று கதைக்கிறம்…..’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் பேதே ஞானத்தின் இன்னொரு நண்பன் இளங்கோவன் „ஞானம் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம், பாறு ஒரு போதும் வந்து பாக்கிற பொடியனைக் கட்டப் போறன் என்று சொல்ல மாட்டாள்.நீங்கள் இரண்டு பேரும் எவ்வளவு ஆழமாய் ஒருத்தரையொருத்தர் நேசிக்கிறது என்று எங்களுக்குத் தெரியும் யோசிக்க வேண்டாம் „ என்று ஆறுதல் கூறுகிறான்.

நண்பர்கள் தன்னிடம் வைத்திருக்கும் அக்கறையைப் பார்த்து ஞானம் நெகிழ்ந்து போகிறான்.’ நான் கொஞ்ச நேரம் எங்கடை தோட்டத்து அட்டாளையிலை இருந்திட்டு பாறுவைப் பார்க்கப் போறன், நீங்கள் என்னோடை தோட்டத்திற்கு வாறியளோ என்று கேட்க,ஞானத்தின் மூன்றாவது நண்பன் புண்ணியமூர்த்தி,’ இல்லை ஞானம் நாங்கள் வரேலை நாங்கள் வீட்டை போகப் போறம், நீங்கள் போங்கள் „ என்று சொல்ல மதகிலை இருந்த சண்முகராசாவும், இளங்கோவனும் எழுகிறார்கள்.

தேத்தண்ணிக் கடையடியில் நின்ற தனது சைக்கிளை இளங்கோவன் எடுத்த மெதுவாக ஓடத் தொடங்க சண்முகராசா வேகமாக நடந்து இளங்கோவனின் சைக்கிள் கரியரில் ஏறி உட்காருகிறான்.

புண்ணியமூர்த்தியும் தனது சைக்கிளை எடுத்துக் கொள்ள,ஞானம் „சரி நான் வாறன்’ என்று சொல்லிக் கொண்டே தங்கடை தோட்டத்தை நோக்கிப் போகிறான்.

அட்டாளை கப்போடு தனது சைக்கிளைச் சாத்தியவன் நிலை கொள்ளாமல் தவிக்கிறான்.பாறுவின் வீட்டில் என்ன நடந்திருக்குமோ மயிலங்கூடல் வைரவா எல்லாம் உன் கையில்தான் இருக்குது என்று மனசுக்குள் வேண்டிக் கொள்கிறான்.

அட்டாளைக்குள்ளிருந்த சாக்கில் உட்கார்ந்து கப்போடு சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொள்கிறான்.பாறுவோடு நெருக்கமாக அருகருகாக இருந்த போது அவளுடைய மூச்சுக் காற்றையும் அவளின் உடல் வாசனையையும் அனுபவித்தவன், காதலோடு கலந்த அந்த சுகத்தை நான் இழந்திடுவேனோ என்று பதகளிக்கிறான்.

ஒரே ஆட்களென்றால் பாறுவை யாராவது பொம்பிளை பார்க்க வருகினமென்றால், பாறுவின் வீட்டை போய் பாறுவை நான் விரும்புகிறன் அவளைத்தான் கட்டப் போறன் என்று துணிஞ்சு சொல்லலாம்,இது அப்படியில்லையே, பாறுவின் தாய் தகப்பனே தங்களுக்கு எவ்விதத்திலும் பொருந்தாத இடத்திலை நீ மனசை விட்டிட்டாய் என்று அவளைக் குழப்பி விடுவார்களோ எனப் பயந்தாhன்.

jaffna wedding photohraphy

இருப்புக் கொள்ளாமல் எழுந்தவன் பாறுவை முதலில் சந்தித்த மார்க்கண்டுவின் வெங்காயத் தோட்டத்தை நோக்கிப் போனவன், பாறு முகத்தைத் திருப்பித் தன்னைப் பார்த்ததை நினைச்சுப் பார்க்கிறான்.அவளைப் பார்த்து பழகிப் பேசிய கொஞ்ச நாட்களுக்குள்ளேயே அவளை மனைவியென்ற இடத்தில் ஞானம் வைச்சுவிட்டதைப் போல பாறுவும்; இனித் தன்னுடைய மிகுதி வாழ்க்கை ஞானத்துடன்தான் என முடிவெடுத்துவிட்டாள்.

அவர்கள் இருவரின் காதலும் இரும்புக் கோட்டை போல உறுதியாக நின்றது.தங்கடை தோட்டத்தை நோக்கி வந்த ஞானம் தானும் பாறுவும் சேர்ந்து குழி சுழிச்சு புடலங்கொட்டை நட்ட இடத்தைப் பார்க்கிறான்.

புடலம் விதைகள் மண்ணைத் துளைத்து வெளியே வந்து நின்றதைப் பார்த்த போது பாறு குழிசுழிச்சு தண்ணி ஊற்றி விதைகளை ஊன்றிய ஞாபகம் வர அவன் கண்கள் கலங்கின.

ஓவ்வொரு நினைவாக அவனைச் சூழ்ந்து நிற்க,பாறுவின் மீது அவன் வைச்சிருந்த காதல் அப்படி நடக்குமோ இப்படி நடக்குமோ என பல ஊகங்களை அவனுக்குள் எழுப்பின.பாறு இல்லையென்றால் இனித் தனது மிகுதிநாள் வாழ்க்கையே நடைப்பிணமான வாழ்க்கைதான் என எண்ணினான்.

எதையும் இலகுவாககவும் துணிவாககவும் கையாளும் அவன் காதல் வசப்பட்டதானால் தனது எதிர்காலம் பற்றித் தடுமாறி நின்றான்.ஞானம் மீண்டும் அட்டாளையடிக்கு வந்தவன் அதனருகில் இருந்த கிணற்றில் தண்ணீரை வாளியால் அள்ளி,வாளியைச் சரித்துக் குடித்தான்.கைமணிக்கூடில் நேரத்தைப் பார்த்தான் நேரம் பிற்பகல் ஒன்றரை மணியாகியிருந்தது.பாறுவை பொம்பிளை பார்க்க வந்த பொடியன் பாறுவின் வீட்டில் நிற்பானோ அல்லது போயிருப்பானோ என எண்ணினான்.

இப்படி மனம் நிம்மதியற்று இருப்பதைவிட பாறுவைப் பொம்பிளை பார்க்க வந்தவன் முன்னாலேயே பாறுவின் தாய்தகப்பனிடம்

நேரடியாகவே பாறுவை நான் விரும்புகிறன், அவளும் விரும்பிறாள்,நான் பாறுவைக் கல்யாணம் செய்யப் போகிறன், இன்றைக்கே அவளைக் கூட்டிக் கொண்டு போகவும் தயார் எனச் சொல்ல வேண்டியதுதான், நடக்கிறது நடக்கட்டும் மலையே வந்தாலும் தலையே சும என்ற உறுதியான தீர்மானத்துடன் பாறுவின் வீட்டை நோக்கி சைக்கிளில் ஞானம் போய்க் கொண்டிருந்தான்.

வீதியின் அக்கம் பக்கத்து காட்சிகளையோ அல்லது தனக்குப்பின்னால், தனக்கு முன்னால் வரும் மனிதர்களையோ வாகனங்களையோ எதையுமே கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டிருந்தான்.அவன் மனசுக்குள்ளும் கண்களுக்குள்ளும் பாறுவே நிறைந்து நின்றாள்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.