ஹலோ! ரோவர் அழைக்கிறேன்……. ஓவர்!…. கிறிஸ்டி நல்லரெத்தினம்.
காலம்: பிப்ரவரி 18, 2021
இடம் : செவ்வாய் கிரகத்தின் ‘டெல்டா’ பள்ளத்தாக்கு
“மெதுவா…… மெதுவா….. பார்த்து….. பார்த்து ”
செவ்வாயின் தரையை தொட சில மீற்றர்களே உள்ளன.
குனிந்து நிலத்தை நோக்குகிறேன்.
என்னைச் சுற்றி கீழே செங்கம்பளம் விரித்தாற்போல் குண்டும் குழியுமாக பரந்த நிலப்பரப்பு.
மேலே அண்ணாந்து பார்க்கிறேன்.
என்னை 6 மீற்றர் நீளமான மூன்று நைலான் கேபிள்களால் இணைத்து மிகக் கவனமாக செவ்வாயின் தரையில், ஒரு மழலை செல்வத்தை தொட்டிலில் வைக்கும் தாயின் கவனத்துடன், வான் தூக்கி (sky crane) என்னை தரையில் மெதுவாக இறக்குகிறது.
மேலே ராக்கட்டில் இருந்து வீசிய வெப்பமான காற்றில் எழும்பிய செவ்வாய் புழுதி என் கண்களை மறைக்கின்றன.
தரையை தொட்டதும் என்னை இறக்கிய ராக்கட்டுடன் இணைத்திருந்த கேபிள்களை துண்டித்துக் கொள்கிறேன். அந்த ராக்கட் சிறிது தூரம் பறந்து விலகி தரையில் மோதி மாள்கிறது.
எனக்கும் பூமிக்குமான தொப்புள் கொடி உறவு இத்துடன் முடிவுக்கு வந்தது!
நான் கொண்டு வந்த உபரணங்களும் என்னை இயக்கும் NASA விஞ்ஞானிகளும்தான் இனி என் கதியை நிர்ணயிக்கப் போகின்றன!
என் ஆறு சக்கரங்களும் செவ்வாயின் 45 கிலோ மீட்டர் அகலம் கொண்ட ஜெஸிரோ என்று அழைக்கப்படும் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஒர் ஆழமான டெல்டா பாள்ளத்தாக்கில் தரையிறங்கி தடம் பதித்தது.
இப் பள்ளத்தாக்கில் பல பில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு ஏரி இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புவதால் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருப்பின் அவற்றின் எச்சங்களையும் சுவடுகளையும் என் உதவி மூலம் கண்டறிவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம்.
இதன் முதற்படியான இந்தத் தரையிறக்கம் முழு வெற்றி!
என் கேமரா கண்களால் சுற்றிப் பார்க்கிறேன். நான் இறங்கிய பள்ளத்தாக்கு சமதரை எனினும் சுற்றி சிறு குன்றுகள் கரை போட்டு இருந்தன. எங்கும் சிவப்பு மணல் தரை…. செவ்வாய் என்பதை விட கவித்துவமாக செவ்விதழ் என்பதே பொருந்தும்!
ஜூலை 30, 2020 இல் Mars 2020 எனும் பெயருடன் Cape Canaveral இல் இருந்து ஆரம்பித்த பயணம் ஏழு மாதங்களின் பின்….. 480 மில்லியன் கிலோ மீற்றர்கள் தாண்டி என்னை இங்கே கொண்டு வந்து விட்டது.
நான் NASA வின் செவ்வாய் கிரகத்தை ஆராயும் றோவர் பயணிப்பில் (Mars Exploration Rover (MER) mission) அனுப்பப்பட்டவர்களில் கடைக்குட்டி. 2003 இல் இங்கு அனுப்பப்பட்ட என் தோழர்கள் Spirit உம் Opportunity உம் செவ்வாயின் வெவ்வேறு இடங்களில் 2004 இல் இறங்கி பூமிக்கு முக்கியமான தகவல்களை அனுப்பினார்கள் என்பது சரித்திரம்.
ஒருவர் 2010 இலும் மற்றவர் 2018 இலும் தங்கள் பணிகளை செவ்வனே செய்து சமாதியானார்கள். அதை சமயம் 2011 இல் அனுப்பப்பட்ட இளையவன் Curiosity இன்னமும் மும்முரமாய் செவ்வாயின் Gale பள்ளத்தாக்கில் வேலை செய்து கொண்டு தான் இருக்கின்றான். எனவே நான் இங்கு தனிக்கட்டையல்ல!
அடே, என் பெயரை சொல்ல மறந்து விட்டேனே. “விடாமுயற்சி ” Perseverance…. எப்படி? சும்மா பெயர் மட்டும் இல்லை. நானே அப்படித்தான்!
வேர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் அலேக்சாந்தர் மேதர் 28,000 பேர் பங்குகொண்ட NASA அறிவித்த பெயர் வைக்கும் போட்டியில் வெற்றி பெற்று வைத்த பெயர் என்றால் சும்மாவா!
என்னை இந்த செந்தரையில் இறக்குவதற்கு NASA செலவழித்த தொகையைச் சொன்னால் வாயை பிளப்பீர்கள். ரெடிதானே?…. $2.4 பில்லியன்கள்….. இதைவிட நான் இங்கு உலாவி படங்களை பூமிக்கு அனுப்பும் செலவு $300 மில்லியன்கள்.
என் பூர்வீகத்தையும் சொல்லியாக வேண்டுமே.
நான் உருவானது NASA வின் Propulsion Laboratory (JPL), கலிபோர்னியாவில். என்னையும் தோழன் Curiosity போலவே வடிவமைத்தார்கள். நான் ஒன்றும் உருவத்தில் பாக்கெட் சைஸ் அல்ல. ஒரு சிறு மோட்டார் .காரின் அளவு என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஒரு தொன் எடை. எனது ரோபோ கையின் நீளம் ஏழு அடி. இது சாதாரண கை இல்லீங்க. கை நுனியில் ஒரு அதிநுட்ப கேமரா, நிலத் தாதுக்களை ஆராயும் இராசாயன உபகரணம், பாறைகளை துளையிடும் கருவி ஆகியவற்றை அடக்கி நகரும் ‘டேமினேட்டர்’ ஆக்கும்!.
நான் இயங்குவது அணு சக்தியில். மேலதிகமாக மின்கலங்களை மின்னேற்ற புளுடோனியம் ஜெனரேட்டர் வேறு உண்டு.
ஒரு ரகசியம் : நான் Ingenuity எனும் ஒரு மினி ஹெலிகப்டரையும் என்னுடன் கொண்டுவந்தேன். அது தற்போது என் வயிற்றுக்கு அடியில் பாதுகாப்பாக ஒளிந்துள்ளது. ஒரு சமதளமான தரைப்பரப்பை அடைந்ததும் அதை இறக்கி பறக்கவிடுவதுதான் திட்டம். Ingenuity வெற்றிகரமாக பறக்குமானால் மனித சரித்திரத்தில் முதல் தடவையாக இன்னொரு கிரகத்தின் வானில் பறந்த விமானம் எனும் பெருமையை தட்டிக்கொள்ளும்!
இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்து பாருங்களேன் என் சாகசங்களை!
நீங்கள் எல்லோரும் கொரோனாவின் கொடுமையில் முடங்கிக் கிடக்கும் போது 2020 ஜூன் 30ம் திகதி என்னை Atlas V ராக்கட்டில் ஏற்றி அனுப்பினார்கள்.
ஏழு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தின் விண்பரப்பை துளைத்துக் கொண்டு ராக்கட் தரையிறங்க ஆரம்பித்தது.
இப்பயணத்திலேயே இதுதான் மிகவும் நுணுக்கமான வேலை.
‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது இதைத்தானோ?
இந்த பொறுப்பு ‘ வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் ‘ தலைவர் (Guidance & Controls Operations Lead) எனும் முக்கிய பொறுப்பை வகித்த இந்திய வம்சாவளி அமெரிக்கரான டாக்டர் .ஸ்வாதி மோகன் கையில்!
இதனால் பாதி கவலை குறைந்தது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
அவரின் சுவாரசியமான பேட்டியை கீழே உள்ள இணைப்பில் தட்டிப் பாருங்கள் :
நல்லது.
இன்று மார்ச் மாதம் 2022….
ஒரு வருடம் என்னமாய் ஓடிவிட்டது! மன்னிக்க, பூமியின் ஒரு வருடம் என்று மாற்றி வாசியுங்கள். செவ்வாய் வருடம் 687 நாட்களாயிற்றே!
இதுவரை நான் செய்தவற்றை சொல்லட்டுமா? என் கை கேமராவினால் செவ்வாயின் தரைப் பரப்பை படம் பிடித்து NASA விற்கு தினமும் அனுப்பிக் கொண்டே இருக்கிறேன். அண்மையில் ஒரு ஒலிப்பதிவு வேறு அனுப்பி வைத்தேன். அதில் செவ்வாயின் நிலப்பரப்பில் நான் ஊர்ந்து செல்லும் போது எனது ஆறு டயர்களில் செவ்வாய் கற்கள் நசுங்கி எழும் ஓசையும் காற்று வீச்சின் ஒலியும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
உங்களுக்கு இந்த ஒலிப்பதிவை கேட்க ஆவலா? கீழ் உள்ள இணைப்பை தட்டி என் ஒலிநாடாவை கேட்டுப் பாருங்களேன். இது மட்டுமல்ல. என் பயணத்தைப் பற்றி முழுதாக அறிந்து கொள்ள நீங்கள் நாட வேண்டிய NASAவின் உத்தியோகபூர்வ வலைத்தளம் இதுவே. https://www.nasa.gov/ https://www.youtube.com/watch?v=-IAcwLYYFGk
அட, நான் சுமந்து வந்த Ingenuity ஹெலிகப்டரைப் பற்றி சொல்ல மறந்து விட்டேனே. இந்த மினி விமானம் ஏப்ரல் 19, 2021ல் தன் முதலாவது பயணத்தை மேற்கொண்டது. இது சில வினாடிகளே நீடித்தாலும் ‘மாற்று கிரகத்தின் வான்வெளியில் பறந்த முதல் விமானம்’ எனும் சாதனையை படைத்தது.
இன்று வரை Ingenuity 21 பறத்தல்களை மேற்கொண்டு மொத்தமாக 38 நிமிடங்கள் பறந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் மனிதகுலம் ஒரு மாற்று கிரகத்தில் குடியேறினால் அங்கு எவ்வாறு விமானப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்பதுடன் அப்படி ஒரு விமானத்தை வெற்றிகரமாக வடிவமைக்கலாம் என்பதே. இதற்கான தரவுகளை Ingenuity சேகரித்து நாசாவிற்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. காற்றின் அடர்த்தி கிரகத்திற்கு கிரகம் மாறுபடுவதால் இத்தரவுகள் மிக வலிமையானவை.
செப்டெம்பர் 01, 2021 செவ்வாய் ஆராச்சியில் ஒரு முக்கியமான நாள். முழு உலகுமே கொரோனா தொற்றில் மூழ்கியிருந்த வேளையிலேயே இது அமைதியாய் நடந்தேறியது.
இந்நாளில் நான் எனது எந்திர கரங்களினால் செவ்வாய் பாறையில் துளையிட்டு பாறை மாதிரிகளை என் அடிவயிற்றில் பதிந்துள்ள பரிசோதனைக் குழாய்க்குள் நிரப்பினேன். இது போல் பல மாதிரிகளை வெவ்வேறு இடங்களில் சேகரித்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் குமித்து
வைப்பதே என் வேலை. எதிர்காலத்தில் இக்குழாய்களை பூமிக்கு எடுத்துக் செல்ல நாசா இன்னொரு விண்கலத்தை அனுப்பும் என்பதே திட்டம்!
அது சரிதான், எப்படி இங்கிருந்து பூமிக்கு சமிக்கைகளை அனுப்புகிறேன் என்று சிந்திக்கிறீர்களா? என்னை ஏற்றி வந்த ராக்கட் செவ்வாயை வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது. நான் என்னிடம் உள்ள UHF அலைபேசி மூலம் ராக்கட் இடம் பேசுவேன். அது பூமியுடன் என் சமிக்கைகளை பகிர்ந்து கொள்ளும். ஆனால் NASA விற்கு என் சமிக்கை சென்றடைய பதினொரு நிமிடங்களின் எடுக்குமாம். என்னை தரையிறக்கும் போது இந்த நேர இடைவெளி NASA விற்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது என்பது உண்மை. ஆனால் என்னுள் பதிந்துள்ள அதிநுட்ப கணணி இந்த ஆபத்தான செயலை வெற்றியுடன் நிறைவேற்றியது.
இக் கிரகத்தில் கால் பதிக்க பல நாடுகள் நெடு நாட்களாய் முயன்று வருகின்றன.
1970 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தனது Mars 4NM, Mars 5NM எனும் ராக்கட் பயண முன்னெடுப்புக்கள் மூலம் இதற்கு வித்திட்டது. ஆனால் 1971 இல் தொடங்கி 1979 வரை Mars 2, 3….Mars 7 என பல ராக்கெட்டுகளை அனுப்பி பல தொழில்நுட்ப கிக்கல்களை எதிர்நோக்கி திட்டங்களை கைவிட்டது.
1976 இல் அமெரிக்காவின் இரு வைக்கிங் (Viking probes) விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தின் வான்வெளிக்குள் நுழைந்து வெற்றிகரமாக தங்கள் பொதிகளை மெதுவாக தரையிறக்கின. இது வான்வெளி ஆராச்சியில் ஒரு மைல்கல்லாக கணிக்கப்படுகிறது. இவை பூமிக்கு அரிய தகவல்களை தொடர்ந்து அனுப்பியதுடன் செவ்வாய் தரையின் முதலாவது வண்ணப் படத்தை அனுப்பி வைத்தன.
இதன் பின்னர் NASA விள் Mars Pathfinder விண்ணூர்தி ஜூலை 04ம் திகதி, 1997 செவ்வாயில் தரை இறங்கி என்னைப் போல் ஆனால் மிகச் சிறிய Sojourner எனும் வானூர்தி உதவியுடன் பரிசோதனைகளை மேற்கொண்டது. செப்ட்டம்பர் 1997 இல் இது அமைதியடைந்தாலும் அந்த சில மாதங்களில் 17,000 க்கும் அதிகமான படங்களை பூமிக்கு அனுப்பி வைத்தது.
செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் வெப்பமாகவும் ஈரமாகவும் நீர் நிலைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது என இவ்வாராச்சியில் தெளிவானது.
1990 களில் வேறு பல விண்கலங்கள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டாலும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அவற்றின் பயணங்கள் தோல்வியையே தழுவின.
2003 இல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அனுப்பிய Mars Express தன் பெயரிற்கு ஏற்றாற்போல் செவ்வாயை அடைந்து சொல்லிக்கொள்ளாமல் மறைந்தே போனது!
சீனாவின் தேசிய வான்வெளி அமைப்பினால் (National Space Science Centre) செவ்வாய்க்கு 23 ஜூலை 2020 அனுப்பப்பட்ட Tianwen-1 விண்கலம் கடந்த ஆண்டு பிப்ரவரி செவ்வாய் கிரகத்தின் வானிலைக்குள் நுழைந்து மே 14, 2021ல் தரையிறங்கியது. இச்சாதனை மூலம் சோவியத் குடியரசிற்கும் அமெரிக்காவிற்கும் அடுத்ததாக செவ்வாய் கிரகத்தில் கால்பதித்த மூன்றாவது நாடு எனும் பெருமையை பெற்றது சீனா! அதுமட்டுமல்ல, தனது முதல் முயற்சியிலேயே இந்த மகத்தான வெற்றி பெற்றது ஒரு சாதனையே. ரஷ்ய விஞ்ஞானிகளுடன் இணைந்தே இதற்கான முயற்சிகள் நடந்தேறின என்பது உண்மை. ரஷ்ய விஞ்ஞானிகள் விண்வெளி ஆராச்சியில் ஜாம்பவான்கள் அல்லவா?
செவ்வாயில் தரையிறங்கியதிலும் ஒரு சாதனை படைத்தது சீனா. என்னைப் போல் கயிறு கட்டி இறங்காமல் சீனாவின் ஒரு விண்கலகமே தரையிறங்கி பின்னர் அதில் இருந்து ஜூரொங் (Zhurong) எனும் ஒரு வானூர்தியை செவ்வாயின் தரையில் வெற்றிகரமாக உலாவவிட்டது.
என்னைப் போலவே ஜூரொங் செவ்வாய் மண், பாறை மாதிரிகளை சேகரித்து 2030ம் ஆண்டு அளவில் இவற்றை பூமிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாம். அதே வேளையில் ஐரோப்பிய விண்வெளி நிலையத்துடனும் (European Space Agency) ஜூரொங் தன் சமிக்கைகளை பகிர்ந்து கொண்டுள்ளது என கேள்வி.
நாங்கள் இருவரும் செவ்வாயில் தரையிறங்கிய பிராந்தியங்களுக்கிடையே அதிக தூரம் இல்லை என்பதும் ஒரு துணுக்குச் செய்தி.
2019ம் ஆண்டிலேயே சீனா Yutu-2 எனும் வான் ஊர்த்தியை சந்திரனின் இருண்ட பகுதியில் தரையிறக்கி சாதனை புரிந்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.
விண்ணை ஆழ நினைக்கும் நாடுகளுக்கிடையிலான பனிப்போர் செவ்வாயையும் எட்டிவிட்டது என்றே எண்ணுகிறேன்!
நான் செவ்வாய் கிரகத்தில் இரண்டு வருடமாவது ஊர்ந்து திரிந்து NASA எனக்கு இடும் கட்டளைகளுக்கு அமைய பணிகளை நிறைவேற்றுவேன். நான் சேகரிக்கும் பாறை மாதிரிகளை சிறு குழாய்களில் நிரம்பி NASA நியமிக்கும்
இடங்களில் வைப்பதுதான் திட்டம். அவற்றை பூமிக்கு எடுத்துச் செல்வதற்கான திட்டங்களை Mars Sample Return (MSR) எனும் முன்னேடுப்பின் கீழ் NASA வகுத்துக்கொண்டுதான் இருக்கிறது.
இத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்ட பின்பே மனிதனை செவ்வாய்க்கு அனுப்புவது பற்றிய யோசனையை NASA செய்யும்.
அது எப்படி சாத்தியமாகும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
இனி வர இருக்கும் நாட்கள் மிக சவாலானதாகவும் அதே சமயம் உற்சாகமானதாகவும் இருக்கும் என்பதில் ஜயமில்லை.
விண் பயணத்தில் மனிதகுலத்தின் மறு அத்தியாயத்தை புரட்டும் நாட்கள் இவை!
இந்த நீண்ட பயணத்தில் நீங்களும் என்னுடன் இணைத்து பயணிப்பீர்கள் என உறுதியாய் நம்புகிறேன்!
………….
ஓவர்!
(முற்றும்)