ஆசியாவின் NO.1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து யாரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்!
ஆசியாவின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி, இவரது சொத்து மதிப்பு மட்டும் 10,300 கோடி டொலராகும். அதாவது கடந்தாண்டில் மட்டும் சொத்து மதிப்பு 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது, இவரது பிரம்மாண்டமான வீடு உலகின் இரண்டாவது விலை மதிப்புமிக்க பங்களாவாகும். தெற்கு மும்பையின் ஆடம்பரமாக கம்பீரமாக காட்சி தரும் அன்டிலியா பங்களாவின் புகைப்படங்கள் மற்றும் சுவாரசிய தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சுமார் 27 தளங்களை கொண்டுள்ள இந்த பங்களாவின் மதிப்பு 2.2 பில்லியன் டொலராகும், அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.15,000 கோடி.
பிரித்தானிய அரச குடும்பத்துக்கு சொந்தான லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்தபடியாக அதாவது உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த பங்களா இதுவாகும்.
அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள அன்டிலியா தீவின் பெயரே இந்த பங்களாவுக்கு சூட்டப்பட்டுள்ளது.
இந்த வீட்டின் கீழ் தளத்தில் 6 அடுக்குகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடம் மற்றும் 3 ஹெலிகொப்டர்கள் நிறுத்துமிடம் உள்ளது.
2004ம் ஆண்டு பங்களா கட்டத் தொடங்கி 2010 வரை ஏழு வருடங்களில் முடிவடைந்ததாம், இருப்பினும், 2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மட்டுமே அம்பானி குடும்பம் குடியேறியது.
கம்பீரமான 60 மாடி தோற்றம்
உலகின் தலைசிறந்த கட்டடக்கலை நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த பங்களாவின், உயர்ந்த கூரை கண்ணாடி கோபுரம் 60 மாடி கட்டிடம் போன்ற தோற்றத்தை உருவாக்கும்.
50 இருக்கைகள் கொண்ட சினிமா தியேட்டர், பாபிலோன்-ஈர்க்கப்பட்ட தொங்கும் தோட்டங்களின் மூன்று தளங்கள், யோகா ஸ்டுடியோ, உடற்பயிற்சி மையம் என சொகுசு வசதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
மிக முக்கியமாக ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
600 ஊழியர்கள் தங்கும் வசதி
24×7 என்ற அடிப்படையில் பணியாற்றும் 600 ஊழியர்கள் தங்குவதற்கான இடவசதி அமைக்கப்பட்டுள்ளது, அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள், பணியாளர்கள் ஷிஃப்ட் முறையில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.