எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -04…. முருகபூபதி.
“ காலமும் கணங்களும் “ நெடுங்கதையின் மூன்றாம் அத்தியாயம்
மேற்கு அவுஸ்திரேலியாவில் கனவில் வந்த கல்வியங்காடு !!
முருகபூபதி.
இரண்டு நாட்களும் நகர்ந்த வேகத்தில் அவுஸ்திரேலியாவின் – மேற்கு மாநிலத்தின் இயந்திர கதியிலான துரிதத்தை சந்திரன் உணர்ந்துகொண்டான்.
அவன் நித்திரைவிட்டு எழுவதற்கு முன்னமே அவர்களிருவரும் தனித்தனி காரில் சென்று மாலையானதும் முந்திப்பிந்தி வந்து சேரும்போது தொலைக்காட்சியில் மாலைச்செய்தியைப் பார்த்துக்கொண்டிருப்பான்.
வீட்டுக்குள்ளே அடங்கி அவன் புழுங்கிவிடக்கூடாது என்பதற்காக வேலையால் திரும்பியதும் அவனையும் அழைத்துக்கொண்டு கடற்கரைப்பக்கமோ, பூங்காக்களைத் தேடியோ அவர்கள் புறப்படுவார்கள்.
வசந்தி வேலை அசதியால் இரவில் சமைக்கப் பஞ்சிப்படும்போது, மக்டொனால்ட்ஸ் ட்றைவ் இன்னில் ஹம்பேக்கர், சிக்கன், சிப்ஸ் என்று மூவருமே வயிற்றை நிரப்பிக்கொள்ளும்போது, – சந்திரனை பணம் கொடுக்கவிடாது தடுப்பதில் அவர்கள் இருவருமே கண்ணாக இருந்தனர்.
ஒருநாள் சந்திரன் கேட்டான்: “அவுஸ்திரேலியா எப்படி…? உங்களிருவருக்கும் பிடித்துக்கொண்டதா…? “ கிழங்கு சிப்ஸை சுவைத்துக்கொண்டிருந்த வசந்தி, “ வந்தாயிற்று… பிடிக்கத்தானே வேண்டும். “ என்றாள்.
வசந்தி சுரத்தில்லாமல் பேசுவதாகப்பட்டது சந்திரனுக்கு.
“ ஆரம்பத்தில் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. போகப் போக சரியாகிவிட்டது. எதுவுமே அப்படித்தான் சந்திரன். புது நாடு – புதுவீடு – புது உணவு – புது நண்பர்கள்… முதலில் இனம்புரியாத தயக்கத்தை தருவது இயல்புதான். எந்தச் சூழ்நிலையையும் எமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள தனித்திறமை வேண்டும்தான். லண்டனுக்குப் படிக்கப்போயிருந்தபோது, எனக்கு சரியான Home sick இருந்தது. பிறகு எல்லாம் சரி. இங்கே வந்தும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகிட்டுது. என் பாதி வாழ்க்கை இந்து சமுத்திரத்துக்கு அப்பால்தான் என்று சாத்திரியார் சொன்னதாக அம்மா முன்பு சொன்னது ஞாபகம். “ வெகு நிதானமாக பாலேந்திரா பேசுவது சந்திரனுக்கு பிடித்திருந்தது.
வசந்தியின் வாயிலிருந்து வார்த்தைகள் உதிர்வது குறைவாக இருந்தாலும், எதனையும் நறுக்குத் தெறித்தாற்போல் பேசுவதனால் அவளுடன் இயல்பாகப் பேசுவதற்கு சந்திரன் தயங்கினான்.
“ வசந்திக்கு இந்த லைஃப் துப்பரவாகப் பிடிக்கவில்லை. அவவின்ர தலைவிதி என்னைப்பிடிச்சுப்போச்சுது… வந்து சேர்ந்திட்டா…. “
“ என்ர தலைவிதி இல்லை. உங்கட விதி எண்டு சொல்லுங்கோ. என்ன சந்திரன்… வெட்கப்படாம சாப்பிடும். இங்கே சாப்பாட்டில் வெட்கம் பார்க்கக் கூடாது. இந்தச் சாப்பாடுகளை ஊரில் பார்த்திருக்க மாட்டீர். வடிவாச் சாப்பிடும். “ வசந்தியின் குத்தலை ஏற்கமுடியாது போனாலும் தன்னை கடந்த இரண்டு நாட்களாக அவள் அக்கறையுடன் கவனித்துக்கொள்வதினால், இப்போதும் அவளை நன்றியுடன் பார்த்தான் சந்திரன்.
மீண்டும் அவளே சொன்னாள். “ சந்திரன் East or west, Home is the best. “
“ யெஸ்…. “ என்று முழுங்கினான் சந்திரன்.
வீட்டுக்குத் திரும்பிய பின்னர், இரண்டு நாட்களாக ஏதேதோ பேசியும், கலண்டரில் புன்முறுவல் பூக்கும் அந்த முகத்தைப்பற்றி கேட்க நினைத்ததை – கேட்கத் தயங்கியதை… கேட்டுப்பார்த்தால்… என்ன… தவித்ததை கேட்டே விட்டான்.
“ அவர்…. தெரியுமா…? “
இருவரும் சந்திரன் காண்பித்த வலதுபக்கச் சுவரின் கலண்டரைப்பார்த்து ஏக குரலில் “ தெரியும் “என்றனர்.
சந்திரன் “ பாவம் “ என்றான்.
“யார் பாவம். சுட்டவர்களா…? செத்தவர்களா…? “வசந்தியின் முகத்தில் தோன்றிய மாறுதலை எதிர்கொள்ளத் திராணியற்று தலையை குனிந்துகொண்டான் சந்திரன்.
பாலேந்திரவிடமிருந்து பெருமூச்சு எழுந்து ஓய்ந்தது.
“என்னுடன் முன்பு படித்தவர். லண்டனுக்கு நான் போனதன்பின்பு தொடர்புகள் விட்டுப்போய்விட்டன. இங்கே வந்த பின்புதான் அவரை கலண்டரில் பார்க்கிறேன். இவவின்ர தம்பியும் அவரின்ட இயக்கத்தில்தான் இருந்தவன். அவனையும்….. “ என்றார் பாலேந்திரா.
“ ப்ளீஸ்… வேறு ஏதும் பேசுவோமா…? “ வசந்தி கத்தினள். பிறகு எழுந்து உள்ளே போனாள். நிச்சயம் அவள் உடை மாற்றுவதற்காக போகவில்லை என்பதை இருவருமே புரிந்துகொண்டனர்.
ஏயார்போர்டிலிருந்து தன்னை காரில் அழைத்து வரும்போது, அப்பாவின் மரணம் பற்றி கேட்டவுடன், “ உமக்குப் பின்னாலும் பெரிய கதை இருக்குது எண்டு சொல்லும் “ என வசந்தி கொடுத்த அழுத்தத்திற்கும் – இப்போது “ ப்ளீஸ் … வேறு எதுவும் பேசுவோம் “என கத்திப்பேசி ஆத்திரத்துடன் எழுந்து போனதற்கும் இடையே நூலிழை தூரமும் இல்லையென்பதை சந்திரனால் ஊகிக்க முடிந்தது.
பாலேந்திரா கண்சாடை செய்து அவனது தவிப்பை அடக்கினார். அந்த சாடைமொழி – ‘ கொஞ்சம் பொறு அப்பனே… பிறகு நீ தனித்திருக்கும்போது விபரமாக சொல்கிறேன் ‘ என்று நிதானப்படுத்துவதாகப்பட்டது.
சந்திரன் எழுந்து தொலைக்காட்சியை அழுத்தினான்.
HEAVEN KNOWS MR. ALLISON திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.
மறுநாள் காலை வேலைக்குப் போகவேண்டியிருந்தமையால், அவர்கள் இருவரும் வந்து அவனிடம் “ குட் நைட் “ சொல்லிவிட்டு உறங்கப்போய்விட்டனர்.
சந்திரனுக்கு உறக்கம் வரவில்லை. மிஸ்டர் எலிஸனையும் அந்த கன்னியாஸ்திரியையும் ரசித்தான்.
பல்கலைக்கழகத்தில் விரிவுரைகளுக்கு மட்டம் தட்டிவிட்டு, நண்பர்களுடன் ரீகலில் பார்த்த படங்கள்தான் எத்தனை?
இப்போது அங்கே விரிவுரைகள் நடக்கிறதோ இல்லையோ, நம்மவர்களுக்கு ரீகலும் இல்லை, முனியப்பர் கோயிலும் இல்லை. வீரசிங்கம் மண்டபமும் இல்லை. இதமான காற்று வீசும் அந்தப்புல்வெளியும் இல்லை. வருடாந்தம் மௌனஞ்சலியும் மலர்
அஞ்சலியும் ஏற்கும் தமிழாராய்சி மகாநாட்டின்போது உயிரிழந்தவர்கள் நினைவாக நடப்பட்ட ஸ்தூபிகளும் இல்லை.
இனி எப்போது அங்கே கச்சான் கடலை கொரிக்கப்போகிறேன்.
சிறிய படகிலே மயங்கியவாறு கரையொதுங்கும் எலிஸன்… தட்டுத்தடுமாறி எழுந்து பார்க்கிறான். ஒதுங்கியிருக்கும் இடம் தீவா… நகரமா… மக்கள் நடமாட்டமே இல்லாத காட்டுப் பிரதேசமா…?
எலிஸன் எழுந்து வருகிறான். தூரத்திலே தெரிகிறது ஒரு கட்டிடம். அது ஒரு தேவாலயமாக இருக்கவேண்டும். உண்பதற்கு உணவில்லாவிடினும், தாகம் தணிக்க ஒரு கோப்பை தண்ணீராவது கிடைத்தால் பாக்கியம்தான்.
எதிரிப்படைகள் இங்கே முகாமிட்டிருக்குமா? எலிஸன் பதுங்கிப் பதுங்கி ஊர்ந்தே நகர்ந்துகொண்டு வருகிறான். பயத்தினால் அப்படி நகரவில்லை. எழுந்து நடக்க உடலில் வலுவில்லாமல் தவழ்ந்தான்.
தேவாலயத்தின் வாயிலில்… மரங்களிலிருந்து உதிர்ந்த காய்ந்த சருகுகளை குனிந்து கூட்டிப்பெருக்கும் வெண்ணுடை தரித்த மாது… கன்னியாஸ்திரியா…?
எலிஸனின் முகத்தில் பிரகாசம்.
அவள் தனது உருவத்தைக்கண்டு பயந்து கத்திக்குளறினால்… அருகே எங்காவது முகாமிட்டுள்ள எதிரிப்படைகளுக்கு மத்தியில் தான் எளிதாக சிக்கிக்கொள்ள ஏதுவாகிவிடுமே என்ற பயத்தினால், பற்றைகளுக்குள் மறைந்து மறைந்து தவழ்கிறான் எலிஸன்.
விளம்பரங்கள் குறுக்கிட்டு, கொக்காகோலாவின் மகத்துவங்களை முத்தக்காட்சிகளினூடே சித்திரித்து, ‘உன்னை விட நான் பெரியவன் ‘ எனக்காட்ட முயலும் விமானச்சேவைகளை கெமராவின் அசாத்திய திறமைகளால் வெளிப்படுத்தி – எலிஸன் படத்தின் வேகத்தை தாமதப்படுத்தும் தொலைக்காட்சி நிலையத்தார் மீது எழுந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு அசைவின்றி அமர்ந்திருந்தான் சந்திரன்.
எலிஸன் கண்ணுக்கு அந்த தேவாலயமும் கன்னியாஸ்திரியும் சொர்க்கமும் தேவதையுமாகியிருக்கவேண்டும்.
கன்னியாஸ்திரியின் பின்புறமாக நகர்ந்து அவளது வாயைப்பொத்தி, உள்ளே இழுத்துச்சென்று சிலுவையின் முன்னே – மெல்லிய குரலில் தன்னை அறிமுகப்படுத்தி, தனக்கு நேர்ந்ததை விபரிக்கிறான்.
அந்தக்கன்னியாஸ்திரி அவனுக்கு உதவ முன்வந்து கஷ்டங்களை அவனுக்காக அனுபவிக்கிறாள்.
எலிஸன் என்ற சோல்ஜர், பெண்களின் வாடையே இல்லாமல், போர்க்களத்திலே – முகாமிலே பல நாட்கள் உணர்வே மரத்துப்போன நிலையில் எதிரிப்படைகளை தீர்த்துக்கட்டுவதிலேயே சிரத்தையோடிருந்து, உப்புக்காற்றையும் Sea Sickness ஐயும் ஏற்றுக்கொண்டு, திடுதிப்பென அங்கே வந்து நுழைந்த போதிலும் அவள்மீது எந்த வக்கிரமும் கொள்ளாமல், அங்கிருந்து எவ்வாறு தப்பிச்செல்வது என்பதிலேயே சிந்தனைவயப்பட்டவனாக உடுத்த உடையுடனேயே பொழுதுகளை கழிக்கின்றான்.
எதிரிப்படைகள், இவனால் விட்டுச்செல்லப்பட்ட படகை இனம்கண்டு, இவனைத்தேடி வேட்டையில் இறங்க, தேவாலயமும் குரு மனையும் வேட்டுக்களினால் இடிந்து தரைமட்டமானதும் கன்னியாஸ்திரி, அவனை இழுத்துக்கொண்டு மலைப்பாறைகளின் நடுவே குகைக்குள் இரண்டு நாட்கள் வைத்திருந்து, படைகள் அகன்ற பின்னர் வெளியே வந்து, வாரங்கள் சில கழிந்ததும், சொந்த நாட்டின் படைகள் அனைத்தேடி வர… இத்தனை நாட்களும் தனக்கு தேவமாதாவாகவே காட்சியளித்த கன்னியாஸ்திரியையும் அழைத்துக்கொண்டு எலிஸன் புறப்படுகிறான்.
இரண்டே இரண்டு பாத்திரங்களை வைத்துக்கொண்டு, இரண்டரை மணிநேரமும் தொய்வின்றி காவியமாக சித்திரித்த இயக்குநரின் பெயர் இறுதியாக வரும்போது, சந்திரன் கொட்டாவி விட்டான்.
படுக்கையில் விழுந்தபோதும் கன்னியாஸ்திரியின் கண்டிப்பும் பரிவும் கோபமும்தான் முன்னே நின்றன.
இந்த இடம் என்ன…? கல்வியங்காடா…? சந்தைக்கட்டிடம் தெரிகிறதே…!? இது கட்டப்பராயா…!? கோப்பாயைத் தேடி நான் எப்போது வந்தேன்…!? அதோ தம்பி… அவன் கையிலிருப்பது ஏ. கே. 47… ஆ… எலிஸன்போன்று உடுத்தியருக்கிறான். அப்பாவை தீர்த்துக்கட்டியவர்களை பழிவாங்கப்புறப்பட்டவன்… இப்போது இங்கே என்ன செய்கிறான்…? அவலக்குரல்கள் கேட்கிறதே…!
அதில் வசந்தியின் குரலுமா…? நாகவிகாரைக்கருகே அப்பாவைக்கொன்றவர்கள், கோட்டைக்குள்ளே…. இரத்மலானையிலிருந்து வரும் பாணுடன், பலாலியில் தயாரிக்கும் தேங்காய்ப்பூ சம்பலையும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, இவன்… என்ன செய்கிறான்…?
“ பேசாமல் இங்கிருந்து போ அண்ணா… துரோகிகளை ஒழித்துக்கட்டுகிறோம்…. “
“ யார்… துரோகிகள்…? “
“ உன்னுடன் இப்போது பேச நான் தயாரில்லை. அம்மாவையும் மாலதியையும் போய்ப்பார்… நீ… வீட்டுக்கு … நான் எங்கள் மண்ணுக்கு…. போ.. நில்லாதே… நின்றால் உன்னையும் சுடுவேன் “
சரமாரியாக ஏ. கே. 47 கக்குகிறதே…! அந்த கன்னியாஸ்திரி இங்கே எப்படி வந்தாள்…? வசந்தி ஜீன்ஸில் மட்டுமல்ல, கன்னியாஸ்திரி கோலத்திலும் அழகாகத்தான் இருக்கிறாள்.
அவள் மடியில் செத்துக்கிடப்பது அவளது தம்பியா…?
“ இல்லை… இல்லை… “ சந்திரன் பெட்ஷீட்டை உதறிக்கொண்டு எழுந்தான்.
தாகமாக இருந்தது. எழுந்துவந்து சமையலறையில் ஃபிறிட்ஜைத்திறந்து தண்ணீர் குடித்தான். குளிர்ந்த நீர் பற்களையும் கூசவைத்து, முரசையும் விறைக்கச்செய்து உள்ளே இறங்கியது.
குளிர்ந்த நீர் இறங்க… உடல் சூடு தணிந்து அக்குளும் அடிவயிறும் வியர்த்தது. உள்ளே சென்றதுதான் மயிர்த்துவாரங்களுடாக மீண்டு வருகிறதோ…?
கண்ட கனவு பாரமாக நெஞ்சை அழுத்தியது.
பெட்ஷீட்டை தூக்கி எறிந்துவிட்டு, கட்டிலில் சாய்ந்தான் சந்திரன். மீண்டும் தூக்கம் தழுவ தாமதமானது.
காலையில் – பாலேந்திரா கதவு தட்டி, ‘ குட்மோர்னிங் ‘ சொல்லும் வரையில் எத்தனை மணிக்கு நித்திராதேவியுடன் சங்கமித்தான் என்பது சந்திரனுக்குத் தெரியாது.
( தொடரும் )